சிவஜியின் திருவிளையாடல் படத்து தருமி இப்போது நேரில் வந்து பிரிக்க முடியாதது எது? என்று கேட்டிருந்தால் ஸ்மார்ட் ஃபோனும், மனிதர்களின் கையும் என்று சிவாஜி பதில் சொல்லியிருப்பார். அத்தனைக்கு நாம் ஸ்மார்ட் ஃபோன்களில் அடிமையாகிக் கிடக்கிறோம். இப்போது இங்கே பகிரப்படவிருக்கும் செய்தி என்னேரமும் வாட்ஸப்பில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.
ஸ்மார்ட்ஃபோன்களை சார்ஜரில் போட்டு வைத்துக் கொண்டு நமக்கு வரும் அழைப்புகளை எடுத்துப் பேசுவதோ, நாம் பிறரை அழைப்பதோ முற்றிலும் தவறு என்று பல்வேறு விதத்தில் அலர்ட் மெசேஜ்களை நாம் தினமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
சார்ஜரில் போட்டு பேசிக் கொண்டிருக்கையில் ஸ்மார்ட் ஃபோன் பேட்டரி திடீரென வெடித்து கையும், காதும் பிய்ந்து போன மனிதர்களின் புகைப்படங்களைப் போட்டுக் கூட எச்சரிக்கப்பட்டு விட்டோம். இந்த எச்சரிக்கைகளுக்கே இன்னமும் போதுமான கவனம் பெறப்படாத நிலையில் சீனாவின் சூசிங்வா மருத்துவப் பல்கலைக் கழகத்தின் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள செய்தி ஸ்மார்ட் ஃபோன் பயனாளர்களை மேலும் பீதியில்ஆழ்த்தியுள்ளது.
அதாவது 100 சதத்திற்கும் அதிகமாக சார்ஜ் செய்யப்படும் போது பேட்டரிகள் படீரென்று வெடித்து விடும் என்பது மட்டுமல்ல முழுதாக சார்ஜ் ஆன நிலையிலுள்ள ஸ்மார்ட் ஃபோன் பேட்டரிகள் மோசமான நோய்களை உருவாக்கக் கூடிய 100 க்கும் அதிகமான நச்சு வாயுக்களையும் உமிழுகிறது என்பது தான் அந்த செய்தி. 50 சதம் அதாவது பாதி சார்ஜ் ஆன பேட்டரி வெளியிடக் கூடிய நச்சு வாயுக்களை விட 100 சதம் சார்ஜ் ஆன பேட்டரிகள் அதிகமான நச்சு வாயுக்களை வெளியிட்டு பயனாளர்களிடையே கேன்சர், சரும வியாதிகள், நுரையீரல் குறைபாடுகள், ஆண்மைக் குறைபாடு, மலட்டுத் தன்மை உள்ளிட்ட மோசமான விளைவுகளை உண்டாக்க வல்லவையாம்.
இன்றளவில் உலகம் முழுக்க எல்லா நாட்டு அரசாங்கமும் லித்தியம் அயனி பேட்டரிகளை பயன்படுத்தச் சொல்லி மக்களை ஊக்குவிப்பதில் முன்னணியில் இருக்கின்றன. இந்த வகை பேட்டரிகள் மூலமாக வெளிவிடப்படும் நச்சு வாயுக்களில் முதன்மையானது கார்பன் மோனாக்ஸைடு. இது மனித உடலில் மிகக் குறுகிய காலத்தில் மிக மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நச்சு வாயுக்களில் ஒன்று என்று பலகட்டச் சோதனைகளில் நிரூபணமாகியிருக்கிறது. இதற்குப் பின்னான பொருளாதார அரசியல் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் மக்களின் உயிருடன் விளையாடும் முயற்சியாக நிச்சயம் இருக்கக் கூடாது என்பது தான் ஆய்வு மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கவலை.
2006 ஆம் வருடத்தில் டெல் கம்பியூட்டர் நிறுவனத்தார் 4 மில்லியன் டெல் கம்பியூட்டர்களை திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். அதே போல 2016 ல் சாம்சங் கேலக்ஸி நோட் 7 பேட்டரிகள் தீப்பிடித்த சம்பவத்துக்குப் பின் அந்நிறுவனம் சில மில்லியன் உபகரணங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.
அதே போல நச்சு வாயுக்களை வெளியிடும் தன்மை கொண்ட ஸ்மார்ட் ஃபோன் பேட்டரிகளை சம்மந்தப்பட்ட ஸ்மார்ட் ஃபோன் நிறுவனங்கள் திரும்பப் பெற்றுக் கொண்டால் நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.