செய்திகள்

கின்னஸ் சாதனைக்காக சங்கிலிப் பிணைப்புகளுடன் கடலில் 5 கி.மீ. தொலைவு நீந்திய இளைஞர்

DIN

நாகையைச் சேர்ந்த இளைஞர், கின்னஸ் சாதனைக்காக தனது கை, கால்களை சங்கிலியால் பிணைத்துக் கொண்டு, நாகை கடலில் 5 கி.மீட்டர் தொலைவை வியாழக்கிழமை 2 மணி நேரம் 20 நிமிடங்களில் நீந்திக் கடந்தார்.

நாகை கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சபரிநாதன். நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் இளங்கலை தகவல் தொழில்நுட்பவியல் இரண்டாம் ஆண்டு மாணவரான இவர், தேசிய, மாநில அளவிலான பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றவர்.

கின்னஸ் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பெற ஆர்வம் கொண்ட சபரிநாதன், தனது கை, கால்களை சங்கிலிகளால் பிணைத்துக் கொண்டு கடலில் நீச்சல் அடிக்கும் பயிற்சியை மேற்கொண்டார். கடந்த சில நாள்களுக்கு முன் சாதனை முயற்சிக்கான முன்னோட்டமாக, அவர் சங்கிலிப் பிணைப்புகளுடன் நாகூரிலிருந்து நாகை வரை கடலில் 5 கி.மீட்டர் தொலைவை நீந்திக் கடந்தார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கோபால்கார்வி என்பவர் கடந்த 2013-ஆம் ஆண்டு கை, கால்களை பிணைத்துக் கொண்டு கடலில் 3 கி.மீட்டர் தொலைவுக்கு நீந்தியதே தற்போதைய கின்னஸ் சாதனையாக உள்ள நிலையில், அந்தச் சாதனையை முறியடிக்க சபரிநாதன் தயாரானார்.

இதுகுறித்து கின்னஸ் சாதனை பதிவுக் குழுவினரின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பெற்ற சபரிநாதன், நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம். துரை ஆகியோரின் அனுமதி பெற்று, கின்னஸ் சாதனை பதிவாக வியாழக்கிழமை தனது கை, கால்களை சங்கிலிகளால் பிணைத்துக் கொண்டு கடலில் நீந்தினார்.

நாகூரில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு சங்கிலிப் பிணைப்புகளுடன் கடலில் நீந்தத் தொடங்கிய அவர், 5 கி.மீட்டர் தொலைவை 2 மணி நேரம், 20 நிமிடங்களில் கடந்து, காலை 10.20 மணிக்கு நாகை துறைமுகத்தில் கரையேறினார்.

இவரது சாதனை முயற்சி கின்னஸ் சாதனை பதிவுக் குழுவினரின் நெறிமுறைகள்படி முழுமையாக விடியோ பதிவு செய்யப்பட்டது. நாகை மாவட்ட விளையாட்டு அலுவலர் ப. சிவா, கடலோரக் காவல் நிலைய போலீஸார் மற்றும் மீனவர்கள் படகுகளில் பாதுகாப்புக்காகச் சென்றனர்.

நாகை துறைமுகத்தில் கரையேறிய மாணவர் சபரிநாதனை கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர், நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி, இ.ஜி.எஸ். கல்லூரிச் செயலாளர் எஸ். பரமேஸ்வரன் ஆகியோர் சபரிநாதனுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினர். இவரது சாதனை ஓரிரு மாதங்களில் கின்னஸ் சாதனை பதிவுக் குழுவின் சான்றைப் பெறும் எனக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயில் அதிகரிப்பு: கால்நடைகள் மேய்ச்சல் நேரத்தை மாற்ற அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை மையம் அருகில் ட்ரோன்கள் பறக்க தடை: ஆட்சியா்

வெப்ப அலை.. கவனம்!

பறவை காய்ச்சல்: தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

திருச்செங்கோட்டில் ரூ. 1.56 கோடிக்கு மஞ்சள் ஏலம்

SCROLL FOR NEXT