'கரோனா காலத்தில் இளைஞர்கள் மது அருந்துவது குறைந்துள்ளது'
கரோனா தொற்று காலத்தில் இளைஞர்களிடையே குடிப்பழக்கம் குறைந்துள்ளதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாகவே இன்றைய இளைஞர்களிடையே குடிப்பழக்கம் என்பது அதிகரித்து வருகிறது. குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் தெரிந்தும் இன்றும் புதிய பலரும் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி வருவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
குடிப்பழக்கத்தினால் உடல் உறுப்புகளில் பிரச்னை ஏற்படுவதோடு மன நலனும் பாதிக்கப்படுகிறது. அதிகமாக குடிப்பழக்கத்துக்கு அடிமையாகும் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் வாய்ப்புகூட உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், குடிப்பழக்கத்திலிருந்து விடுவித்துக்கொள்ள முறையான மருத்துவ சிகிச்சை முறைகள், வழிமுறைகள் உள்ளன என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த சூழ்நிலையில் கரோனா தொற்று காலத்தில் இளைஞர்களிடையே குடிப்பழக்கம் குறைந்துள்ளதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வரும் கரோனா தொற்றினால் பல இடர்களை எதிர்கொண்டிருந்தாலும் சில நன்மைகளும் நிகழ்ந்துள்ளன. நம் அடுத்த தலைமுறைக்கு சுகாதாரம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த காலகட்டத்தில் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் பொருளாதாரம் சீர்குலைந்த நேரத்தில் தில்லி உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு குறைந்துள்ளது.
இந்நிலையில் கரோனா காலத்தில் மாணவர்களிடையே குடிப்பழக்கம் வெகுவாக குறைந்துள்ளது என்று ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள் பற்றிய இதழில் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
கரோனா தொற்று காலத்தில் நம் வழக்கமான சூழ்நிலை மாறும்போது அனைவருடைய வாழ்க்கை முறையும் மாறுகிறது, அதுபோலவே, மாணவர்களின் நடத்தைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
கரோனா காலத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால் மாணவர்கள் பெற்றோருடன் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாலும் நண்பர்களை சந்திக்க முடியாததாலும் அவர்களிடையே குடிப்பழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதுகுறித்து 300க்கும் மேற்பட்ட இளைஞர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கரோனா காலத்துக்கு முன்/பின் குடிப்பழக்கம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. இதில் பெற்றோருடன் இருந்த மாணவர்கள் எடுத்துக்கொள்ளும் மதுவின் அளவும், குடிக்கும் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அதேநேரத்தில் நண்பர்களுடன் இருக்கும் இளைஞர்களின் குடிப்பழக்கம் சற்று அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.