முகப்பு
செய்திகள்

பெண்கள் குடும்பத்துக்காக அனைத்தையும் தியாகம் செய்கின்றனர்: பிரபல பாலிவுட் நடிகை

பெண்கள் தங்களது உடல்நலத்தை கவனத்தில் கொள்ளாமல் அனைத்தையும் குடும்பத்துக்காக தியாகம் செய்கின்றனர் என்று பிரபல பாலிவுட் நடிகை சோஹா அலிகான் கூறியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:35 PM
பகிர்:


பெண்கள் தங்களது உடல்நலத்தை கவனத்தில் கொள்ளாமல் அனைத்தையும் குடும்பத்துக்காக தியாகம் செய்கின்றனர் என்று பிரபல பாலிவுட் நடிகை சோஹா அலிகான் கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை சோஹா அலிகான் ஹிந்தி, பெங்காலி, ஆங்கில மொழிகளில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் உடல்நலப் பராமரிப்பு குறித்த ஒரு தனியார் நிறுவனம் அவரிடம் நேர்காணல் நடத்தியது. அதில் நடிகை சோஹா பேசியதாவது,

'ஆரோக்கியமே செல்வம்' என்ற பழமொழி ஒன்று உள்ளது. அதற்கேற்ப எனது வாழ்வில் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறேன். என்னுடைய வாழ்வில் முன்னுரிமை பட்டியலில் முதலிடம் ஆரோக்கியத்திற்கு மட்டுமே. உங்களது உடல் ஆரோக்கியம் சரியில்லை எனில், அதனை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனில், பல சந்தோஷமான நிகழ்வுகளை வாழ்வில் நீங்கள் இழக்க வேண்டியிருக்கும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மகிழ்ச்சியைத் தரும். எனவே, உடல்நலத்தை பேணுவதில் கவனம் செலுத்துங்கள். இல்லையெனில் வாழ்க்கை கடினமாகி விடும்.

உங்களுடைய தொழில், குடும்பம் உள்ளிட்ட அனைத்திற்கும் உடல் ஆரோக்கியம் அவசியம். குறிப்பாக பெண்களுக்கு மிக முக்கியம் என்று நான் நினைக்கிறேன். பெண்களுக்கு உடல்நல பராமரிப்பு எவ்வாறு அவசியம் என்பதை அனைத்து பெண்களும் அறிவார்கள். இருந்தபோதிலும், பெரும்பாலான பெண்கள் நேரமின்மை காரணமாக, தங்களுடைய குடும்பத்துக்காக உடல்நலத்தை தியாகம் செய்கின்றனர்.

பெண்களே, உங்கள் புற அலங்காரத்தை பற்றி நீங்கள் கவலை கொள்ளாவிட்டாலும், அக ஆரோக்கியத்தை பேணுவது முக்கியம். உடல்நலத்திற்கு ஏற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். நல்ல தூக்கம் அவசியம். குடும்ப சூழ்நிலையில் பெண்கள் தங்களை கவனித்துக்கொள்வது சிரமம் என்றாலும் உங்களுடைய குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி உங்களையும் கவனித்துக்கொள்ள நேரம் ஒதுக்குவது அவசியம்' என்றார்.

சோஹா, நடிகர் குணால் கெம்முவை ஜூலை 2015ல் திருமணம் செய்து கொண்டார், இந்த தம்பதியினருக்கு இனாயா என்ற பெண் குழந்தை இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.