கர்ப்பிணிகள் என்றால் பொதுவாகவே ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள். அவ்வாறு இல்லாமல், அவர்கள் சாப்பிடும் பொருந்தா (Junk - ஜங்க்) உணவுகளால், சிசுவின் தலை பெரிதாகும் அபாயம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியத்துக்காக கருவுற்ற தாய்மார்கள் எப்போதும் ஆரோக்கியமான, சத்துள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த ஆய்வின் முடிவு அமைந்துள்ளது.
கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பதப்படுத்தப்பட்ட அல்லது பொருந்தா உணவை (Ultra Processed Food) உட்கொள்வது வயிற்றில் இருக்கும் சிசுவின் வளர்ச்சியை பாதிக்கும் அபாயம் உள்ளது என்று அண்மையில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வின் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. கர்ப்ப காலத்தில் பெண்கள் பொருந்தா உணவை அதிகமாக உட்கொண்டால் சிசுவின் தலை பெரியதாகும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. குழந்தையின் வயிற்றுக்குப் பகுதிக்குப் பெரிய அளவில் பாதிப்பில்லை என்றாலும், தலை பெரிதாவது என்பது அபாயத்துக்குரிய விஷயம்தான்.
பிரிட்டன் இதழான நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரையில், பிரேசிலில் 417 கருவுற்ற பெண்கள் உணவு உட்கொள்ளும் முறைகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஆய்வில், கிட்டத்தட்ட பாதி பெண்கள் முதல் முறையாக கர்ப்பமாக இருந்தனர், அவர்களின் சராசரி வயது 24.7 ஆண்டுகள் ஆக இருந்தது.
இந்த ஆய்வானது, பொருந்தா உணவின் தீவிரத்தன்மையானது கருவுறாமையை ஏற்படுத்தும் எனவும், கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை மேற்கொண்டால் சிசுவின் உடல் அமைப்பு மேம்படும் என்று கூறுகிறது.
மூத்த குழந்தை நல மருத்துவர் அருண் குப்தா கூறுகையில், கர்ப்ப காலத்தில் பொருந்தா உணவு பொருள்களை உட்கொள்ளும் போது, பிறக்கும் குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், ஆரோக்கியமான உணவு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். குழந்தை ஆரோக்கியமாக பிறக்க தீவிர பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்ப்பது தான் ஒரே தீர்வு என்று கூறுகின்றார்.
பொருந்தா உணவு என்பது இயற்கை உணவை பதப்படுத்துவதற்காக ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உணவாக இருக்கும். இந்த உணவில் அதிகளவில் சர்க்கரை, உப்பு, கொழுப்புகள் சேர்க்கப்படுகின்றன. மேலும், இந்த உணவில் சுவை கூட்டிகள், நிறமிகள் சேர்த்து உடலுக்கே பொருந்தா உணவாக மாற்றியமைக்கப்படுகின்றன.
அதிகளவில் பொருந்தா உணவை உட்கொள்ளும் போது மக்களக்கு எடை அதிகரிப்பு, புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது, கருவுற்ற தாய்மார்கள் எடுத்துக் கொள்ளும் பொருந்தா உணவுகள், சிசுவின் தலை வளர்ச்சியில் அபாயத்தை ஏற்படுத்தும் என்ற புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
இதையும் படிக்க: மக்களவைத் தேர்தல்: ராமநாதபுரத்தில் மோடி போட்டி?
எனவே, கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளும் ஊட்டச்சத்து நிறைந்த, சத்தான ஆரோக்கியமான உணவு என்பது அவருக்கும், வளரும் சிசுவுக்கும் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.