உலகம் முழுவதும் பார்த்தால், ஒரு சில குடும்பங்களில் தொடர்ந்து ஆண் அல்லது பெண் குழந்தைகளே பிறப்பதில் வெறும் அதிர்ஷ்டமா அல்லது அறிவியலும் இருக்கிறதா என்பது குறித்து ஹார்வர்டு பல்கலை ஆய்வு செய்திருக்கிறது.
இந்த ஆய்வுக்காக, 1956 மற்றும் 2015 க்கு இடையில் அமெரிக்காவில் பிறந்த 58,000 க்கும் மேற்பட்ட பெண் செவிலியர்களின் பிறப்புப் பதிவுகளை அவர்கள் ஆராய்ந்தனர்.
அதில், அந்த பிறப்பு விகிதம் ஒன்றுபோல இருக்கிறதா? அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறதா? அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் அறிவியல் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க இந்த தரவுகளை ஆராய்ந்தனர்.
ஆய்வில் வெளியானது தகவல்
இரண்டு குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பங்களில், ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருப்பது மிகவும் பொதுவானதாக இருந்தது.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களைப் பொறுத்தவரை, ஒரு தலைப்பட்சமாக இருந்தது. அதாவது, ஒன்று ஆண் குழந்தைகளாகவோ, பெண் குழந்தைகளாகவே இருக்கும் எனவும், ஏற்கனவே வீட்டில் மூன்று பையன்கள் விளையாடிக் கொண்டிருந்தால், நான்காவதும் பையனாகவே இருக்கவும், மூன்றும் பெண் பிள்ளைகளாக இருந்தால், நான்காவது குழந்தையும் பெண் பிள்ளையாகவே இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவே அறிவியல் கூறுகிறது.
அதாவது, ஏற்கனவே ஒரு குடும்பத்தில் ஒரே பாலினத்தைச் சேர்ந்த குழந்தைகள் ஒன்றுக்கும் மேற்பட்டு இருந்தால், அடுத்து பிறக்கும் குழந்தைகள், எதிர் பாலினத்தவராக இருக்கும் வாய்ப்பு குறைவு என்கிறது புதிய ஹார்வர்ட் ஆய்வு.
இதனை சதவீதத்துடன் விளக்கியிருக்கும் ஆய்வில், ஒரு குடும்பத்தில் 2 ஆண் குழந்தைகள் இருந்தால், அடுத்த உடன்பிறப்பு ஆணாக இருக்க 61 சதவீத வாய்ப்பு உள்ளது. அதுபோல 2 அல்லது 3 பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்களில் அடுத்த குழந்தை பெண்ணாக இருக்க 58 சதவீத வாய்ப்பு உள்ளதாம்
இந்த ஆய்வின் முடிவுகள் சயின்ஸ் அட்வான்சஸில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவு, ஒரு கரு ஆண் அல்லது பெண்ணாக இருக்க சம வாயப்பு இருக்கிறது என்ற பொதுவான வாக்கை உடைப்பதாக உள்ளது.
இதன்படி, ஏற்கனவே பெண் குழந்தைகள் இருந்து ஆண் குழந்தை பெற விரும்புவோருக்கும், ஆண் குழந்தைகள் இருந்து பெண் குழந்தை பெற விரும்புவோருக்கும் அதற்கான சாத்தியம் 50 சதவீதத்துக்கும் குறைவுதான் என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கோள்காட்டும் மருத்துவர்கள்.
இதில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்க விஷயம் இதுவாகத்தான் உள்ளது. அதாவது, ஒரு பெண் குழந்தைகளைப் பெறத் தொடங்கும் வயதும் இந்த பாலின வேறுபாடு அல்லது ஒரே பாலினத்தில் குழந்தைகள் பிறப்பதற்கான காரணியாக இருக்குமாம். 29 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் முதல் குழந்தையைப் பெற்ற பெண்கள், 23 வயதுக்குட்பட்ட இளம் பெண்களுடன் ஒப்பிடும்போது, ஒரே பாலினத்தைச் சேர்ந்த குழந்தைகளையே அதிகம் பெறும் வாய்ப்பு 13 சதவீதம் அதிகமாம்.
இதையும் படிக்க... மெட்டாவுடன் இணைந்த தமிழக அரசு! இனி வாட்ஸ்-ஆப் மூலமே 50 சேவைகள் பெறலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.