பேன்ட் பாக்கெட்களில் மொபைல் போன் வைத்திருப்பதும் மடிக்கணினியை மடியில் வைத்து நெடுநேரம் பயன்படுத்துவதும் ஆண்களிடம் விந்தணு எண்ணிக்கையைக் குறைக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது.
ஆண்களிடையே விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கும் மின்னணு சாதனங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி கொல்கத்தா பல்கலைக்கழகம் மற்றும் இனப்பெருக்க மருத்துவ நிறுவனம் இணைந்து நடத்திய புதிய ஆய்வில் சில முக்கிய முடிவுகள் தெரிய வந்துள்ளன.
நீண்ட நேரம் மடிக்கணினிகளை மடியில் வைத்துக்கொண்டு வேலை செய்வதும் மொபைல் போன்களை ட்ரவுசர்/பேன்ட் பாக்கெட்டுகளில் வைத்திருப்பதும் ஆண்மைக் குறைவுக்கான ஆபத்தை அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் மரபியல் ஆராய்ச்சி பிரிவு மற்றும் மருத்துவ நிறுவனம் 20 முதல் 40 வயதுக்குள்பட்ட 1,200 ஆண்களிடமிருந்து மாதிரிகளை சேகரித்தது. வாழ்க்கை முறை, பணியிட ஆபத்து, உணவுப் பழக்கம், போதை பழக்கங்கள் ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்த மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அவர்களில் பலர் தங்கள் பேன்ட்/ ட்ரவுசர் பாக்கெட்டுகளில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மொபைல் போன்களை வைத்திருப்பதாகவோ அல்லது மடிக்கணினிகளை மடியில் வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் வேலை செய்வதாகவோ தெரிவித்திருந்ததாக ஆய்வாளர் சுஜய் கோஷ் கூறினார்.
மேலும், "இந்த ஆய்வில் மரபணு ரீதியாக பிரச்னைகளால் பாதிக்கப்படக்கூடிய நபர்களில் குறிப்பாக 30 வயதுக்குள்பட்டவர்களில் கதிர்வீச்சினால் விந்தணு எண்ணிக்கை குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மரபணு பிரச்னை இல்லாதவர்களைவிட, மரபணு ரீதியாக பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள், மேலும் மொபைல் போனை பாக்கெட்டுகளில் வைத்திருப்பதால், கருவுறாமையை 10 மடங்கு அதிகம் எதிர்கொள்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 1,200 பேரில் 708 பேருக்கு விந்தணு இல்லாத 'ஏசூஸ்பெர்மியா' நிலை இருந்தது. 640 பேர் ஆரோக்கியமான விந்தணுக்களைக் கொண்டிருந்தனர்.
மொபைல் போன் கதிர்வீச்சால் ஆண்மைக் குறைவு ஏற்படுவதற்கான எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லாத நிலையில், இந்த ஆய்வின் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இப்போது மாறியுள்ளது. இதை அடிப்படையாக வைத்து, தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிகிறது.
இதையும் படிக்க | மன அழுத்தமா? இந்த 10 வழிகளை முயற்சி செய்யுங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.