கல்லீரல் பிரச்னை கோப்புப்படம்
செய்திகள்

ஒல்லியானவர்களுக்கு கல்லீரல் கொழுப்பு பாதிப்பு ஏற்படுவது ஏன்?

ஒல்லியானவர்களுக்கும் கல்லீரல் கொழுப்பு பிரச்னை ஏற்படுகிறது. அது ஏன் என்பது பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

நாள்தோறும் உடல் பயிற்சி மேற்கொள்பவர், சத்தான, புரத பானங்களை அருந்துபவர், தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் தன்னுடைய கட்டுடலுக்காகவே நூற்றுக்கணக்கான ரசிகர்களை வைத்திருப்பவர் கண்டிப்பாக ஆரோக்கியமாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

அண்மைக் காலமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடையும் தகவல்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை. இது முற்றிலும் நோய் பற்றியது.

அதாவது, பார்ப்பதற்கு மெலிந்த தோற்றம் அல்லது உடல் உயரத்துக்கு ஏற்ற உடல் எடை கொண்டவர்களுக்கு ஆரோக்கியமும் சரியாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல என்கின்றன இதுவரை கிடைத்த மருத்துவப் பரிசோதனை குறித்த தரவுகள்.

பொதுவாகவே பார்க்கும் தோற்றமும், அவர்களது மருத்துவப் பரிசோதனை முடிவுகளும் வேறு வேறு கதைகளைத்தான் சொல்லும். சொல்லுகின்றன.

இளைஞர்கள், தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்பவர்கள், நல்ல உடல்வாகுடையவர்களுக்குக்கூட மருத்துவப் பரிசோதனையில் சிறு வயது நீரிழிவு, அதிக உடல் கொழுப்பு, இன்சுலின் எதிர்ப்புத் திறன் குறைவு போன்றவை இருப்பது உறுதி செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதாவது அதிக உடல் பருமன் கொண்டவர்களைக் காட்டிலும் இயல்பான அளவை விட உடல் எடைக் குறைவாக இருப்பவர்களுக்கான அபாயம் அதிகம் என்கிறார்கள். உடல் பருமனாக இருப்பது மட்டுமே, ஆயுளைக் குறைக்காது என்றும், உடல் பருமன் அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக உடல் எடை இருந்தால் மட்டுமே ஆயுள் குறையும் அபாயம் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால், உடல் ஆரோக்கியத்துக்கு உடல் எடை மற்றும் உயரம் சரியாக (உடல் நிறை குறியீடு அல்லது பிஎம்ஐ) இருப்பது மட்டுமே சரியானக் குறியீடு ஆகாது. மேலும், உடல் எடை மட்டுமே இரண்டாம் வகை நீரிழிவுக்கு காரணமாக இருப்பதில்லை. அது மரபு ரீதியாகவே பெரும்பாலும் உண்டாகிறது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.

மேலும், பிஎம்ஐ, 18 புள்ளிகளை விடக் குறைவாக இருக்கும் இளைஞர்களும் தற்போது புதிதாக நீரிழிவு கண்டறியப்படுபவர்களின் பட்டியலில் அதிகம் இணைகிறார்களாம்.

அதாவது, ஒரு குறிப்பிட்ட உடல் எடை என்பதை உலகம் முழுமைக்குமாக வரையறுக்க முடியாது என்பதே நிதர்சனம். இந்தியாவில் பிறக்கும் ஒரு குழந்தை 2.6 கிலோ எடையுடன் இருந்தால் அது இயல்பான எடை. ஆனால், உலக சராசரியை விட இது மிகவும் குறைவு.

இந்தியாவில் 2.6 கிலோ உடல் எடையுடன் பிறக்கும் குழந்தை, இந்த சுற்றுச்சூழலுக்கு ஏற்ப வளரும். அவரது உடலமைப்பு மெலிந்த தோற்றத்துடனே இருக்கும். அனைத்து கலோரிகளையும் சேமிக்க அவரது உடல் பழகும். ஆனாலும் அவர் மெலிந்த தோற்றத்துடனே வளர்வார். சில உடல் தசைகள் மட்டுமே சத்துகளை சேகரித்து வைக்கும். மற்றவை உடல் உறுப்புகளைச் சுற்றிலும் கொழுப்பாக படியும்.

ஒருவேளை, அவர் வளர்ந்து, வெளியே பதப்படுத்தப்பட்ட, கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, அது அவரது உடலில் வெளிப்படையாக கொழுப்பாக சேராமல், உடல் உறுப்புகளைச் சுற்றிலும் குறிப்பாக கல்லீரல், கணையம் போன்ற உறுப்புகளைச் சுற்றிலும் படர்கிறது. இதனால்தான் இதுபோன்றவர்களுக்கு மிக இளம் வயதில் இரண்டாம் வகை நீரிழிவு ஏற்படுகிறது. ஆனால், அவர்கள் எப்போதும் மெலிந்த தோற்றத்துடனே இருப்பார்கள். இருக்கிறார்கள். எனவே, மெலிந்த தோற்றத்துடன் இருப்பதால், அதிக கொழுப்பு இருக்காது, நீரிழிவு நோய் வராது, மாரடைப்பு ஏற்படாது என்றெல்லாம் கருதிவந்த காலமும் இன்று மலையேறிவிட்டது.

ஊட்டச்சத்துக் குறைபாடு

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடால் உருவாகும் இரண்டாவது அபாயமாக இவை சேர்க்கப்பட்டுள்ளது.

ஒருவேளை, குறைந்த உடல் எடையுடன் பிறந்து, அதிக கலோரி நிறைந்த உணவுகளை சாப்பிட்டு, ஓடியாடாமல், உட்கார்ந்தே இருக்குமானால், அவர்களுக்கு சிறு வயதில் நீரிழிவு கண்டுபிடிக்கப்பட்டு, சில வேளைகளில் அது இரண்டாம் வகை நீரிழிவு என்பதை கண்டறியாமலேயே, ஆயுள் வரை இன்சுலின் செலுத்திக் கொள்ளும் ஆபத்துகள் ஏற்படுவதாகவும், அதனைத் தவிர்க்க, சி-பெப்டைட் அல்லது இன்சுலின் ஆன்டிபாடிஸ் நிலையை சோதிப்பது தீர்வாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தற்போது, இன்சுலின் சுரப்பை தூண்டும் மருந்துகளும் வந்துவிட்டன. அவற்றைப் பயன்படுத்தியும் இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள் பயன்பெறலாம். ஒவ்வொரு நீரிழிவின் வகைக்கும் அந்த நோயாளியின் நீரிழிவு அமைப்புக்கும் ஏற்ப சிகிச்சை அளிக்கும் முறைகளும் வந்துவிட்டன.

நோயைப் பொருத்தவரை, அது வந்த பிறகு குணப்படுத்துவதை விடவும், வருவதற்கு முன்பே தற்காத்துக் கொள்வதே சிறந்தது என்பதுதான். எனவே, கர்ப்ப காலத்தில் சத்தான உணவு, குழந்தைகளுக்கு சரிவிகித சத்துணவு, வளரிளம் பருவத்தில் சரிவிகித உணவு சாப்பிடுவதை ஊக்கப்படுத்துவது, அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகள் செய்வதன் மூலம், நோயை முன்கூட்டியே கண்டறிந்து குணம் பெறுவது நல்லது.

மெலிந்த தோற்றம், கட்டுக்கோப்பான உடல் வாகு என எதுவும் ஆரோக்கியத்தின் அறிகுறியல்ல. ஒருவர் சரியான உடல்வாகுடன் இருக்கிறாரா? அல்லது நோய் காரணமாக அல்லது சத்துணவு இல்லாமல் மெலிந்து இருக்கிறாரா? என்பதை உருவத்தைப் பார்த்து உறுதி செய்யவே முடியாது. கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதலரைக் கரம்பிடித்த ஆஹா கல்யாணம் நடிகை!

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

சர்ச்சைப் பேச்சு.! தெ.ஆப்பிரிக்க பயிற்சியாளரிடம் கைகுலுக்காமல் கடந்து சென்ற கோலி! - விடியோ

வேள்பாரி படப்பிடிப்பு எப்போது?

டிட்வா புயல்! சென்னையில் மாலை 4 மணி வரை இடைவிடாது மழை!

SCROLL FOR NEXT