கோப்புப்படம் ENS
செய்திகள்

சருமம் வறண்டு போவதற்கான காரணம் இதுதான்! மாய்ஸ்சரைசரை இப்படி பயன்படுத்துங்கள்!

சருமப் பராமரிப்புக்கு அழகு சாதனப் பொருள்கள் பயன்படுத்துவது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சரும அழகுக்காக இன்று இளைஞர்கள், பெண்கள் பலரும் மெனக்கெடுகின்றனர். சருமம் பளபளப்பாக இருக்க வேண்டும், இளமையாக இருக்க வேண்டும் என்று பல்வேறு வகை க்ரீம்களைப் பயன்படுத்துவது, ஏன் அழகுக்காக அறுவைச் சிகிச்சைகளைக்கூடச் செய்துகொள்கின்றனர்.

சருமப் பராமரிப்பு குறித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். சக பெண்கள் தங்களது அனுபவங்களைக் கூறுகிறார்கள். ஆனால், ஒருவருக்கு பொருத்தமாக இருக்கும் அழகு பராமரிப்புப் பொருள் மற்றவருக்கு சருமப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அழகு சார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சருமப் பராமரிப்பு என்பது இளைஞர்களிடையே குறிப்பாக இளம் பெண்களிடையே ஒரு முக்கிய விஷயமாக மாறியுள்ளது. இதில் பலரும் ஆன்லைனில் குறிப்பாக சமூக ஊடகங்களில் பரிந்துரைக்கப்படும் அழகுத் தயாரிப்புகளை வாங்கி முயற்சிக்கிறார்கள். ஆனால், ஆன்லைனில் காட்டும் பரிந்துரைகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்றும் தவறான தயாரிப்புகளைப் பயன்படுத்தும்போது சரும வறட்சி, எரிச்சல், முகப்பரு மற்றும் நீண்ட கால சரும பாதிப்புக்குக்கூட வழிவகுக்கும் என்றும் கூறுகிறார்கள் நிபுணர்கள்.

வறண்ட சருமம் உள்ளவர்கள் தாங்கள் என்னமாதிரியான க்ரீம்களைப் பயன்படுத்த வேண்டும், வறண்ட சருமத்திற்கான காரணம் பற்றியும் மருத்துவரை அணுகி தெரிந்துகொள்வது நல்லது என்றும் தோல் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட சரியான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ராஜகிரி மருத்துவமனையின் தோல் மருத்துவத் துறை தலைவரும் மூத்த ஆலோசகருமான டாக்டர் ப்ரீத்தி ஹாரிசன் சருமப் பராமரிப்பு பற்றி கூறுகையில்,

"குளிர் காலங்களில் பெரும்பாலாக அனைவருக்கும் வறண்ட சருமம் ஏற்படலாம். ஆனால், இது முதியவர்களிடமும் ஏற்கனவே சருமப் பிரச்னைகள் உள்ளவர்களிடமும் அதிகமாகக் காணப்படுகிறது. தற்போதைய காலநிலையில் வறண்ட சருமம் ஏற்படுவதற்கு குளிர்ந்த வானிலை மட்டும் காரணமல்ல, வீட்டில் அல்லது அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் ஏசி, ஹீட்டர் உள்ளிட்ட பொருள்களும் சருமப் பிரச்னைகளுக்கு காரணம்தான். இது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை அகற்றி, சருமத்தை செதில்களாக மாற்றி அரிப்பை ஏற்படுத்துகிறது. சுற்றுச்சூழல் மோசமாகி வரும் நிலையில் சரும பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும். வெந்நீர் குளியல், வாசனை மிகுந்த கடுமையான சோப்பு/க்ரீம்களைப் பயன்படுத்துவது சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசையை அகற்றி மேலும் வறட்சி ஆக்குகிறது.

சருமப் பராமரிப்பு

ஒவ்வொருவருக்கும் சரும நிறம் என்பது வேறுபடுகிறது. நிறம் மட்டுமின்றி சருமத்தின் தன்மை, உணர்திறன் ஆகியவை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. ஒரே மாய்ஸ்சரைசரை அனைவரும் பயன்படுத்த முடியாது, ஒருவருக்கு பொருத்தமாக அமைந்த க்ரீம் மற்றொருவருக்கு முகப்பருக்கள் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம்" என்று கூறினார்.

வறண்ட சருமத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று மரபணுக் காரணிகளால் ஏற்படுபவை, மற்றொன்று வயது அல்லது பிற காரணிகளால் ஏற்படுபவை.

மரபணு ரீதியாக தோல் அழற்சியால்(eczema) பாதிக்கப்பட்டவர்கள், வாழ்நாள் முழுவதும் சிகிச்சையும் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மாய்ஸ்சரைசரும் தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய தேவையிருக்கும் என்று கொச்சியில் உள்ள விபிஎஸ் லேக்ஷோர் மருத்துவமனையின் தோல் மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் அபின் ஆபிரகாம் இட்டி என்பவர் தெரிவித்தார்.

"சிறு வயதிலேயே வறண்ட சருமப் பிரச்னைகள் இருந்தால், வழக்கமான மருத்துவ ஆலோசனை, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், மாய்ஸ்சரைசர்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது பிரச்னையைக் குறைக்க உதவும்.

மற்றவர்களுக்கு வயது, காலநிலை மாற்றங்கள், சோப்புகள், சருமப் பராமரிப்புப் பொருள்கள், நீரிழிவு, தைராய்டு(ஹைப்போ தைராய்டிசம்) போன்றவற்றால் வறண்ட சருமம் ஏற்படலாம். இந்த பாதிப்புகள் எல்லாம் சருமத்தில் இயற்கையாக மாய்ஸ்சரைசர் உருவாவதைக் குறைக்கிறது. சருமம் வறண்டுபோவது அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

ஆனால் பலரும் வறண்ட சருமத்தை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. உடனடி விளைவுகள் தெரியாததால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். ஆனால் தோல் மருத்துவரை அணுகி சரியான அழகு தயாரிப்புகளைப் பயன்படுத்தினால் மட்டுமே எதிர்கால விளைவுகளைத் தடுக்க முடியும். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு மாய்ஸ்சரைசர் மிகவும் அவசியம். ஒருவேளை மருத்துவர் பரிந்துரைத்த தயாரிப்புகளைப் பயன்படுத்தியும் சருமத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை எனில் மேலும் மருத்துவரை அணுகி ஒரு முழு பரிசோதனை செய்துகொள்வது நல்லது" என்றார்.

மாய்ஸ்சரைசரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர் அபின் மேலும் கூறும்போது, "கண்டிப்பாக அனைவரும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டும், குளித்த உடனேயே சருமத்தில் அப்ளை செய்ய வேண்டும். சருமத்தில் ஈரப்பதம் இருக்கும்போதே தடவ வேண்டும். மாறாக சருமம் வறண்டு இருக்கும்போது தடவினால் அது பாதிப்புகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முறை மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். மருத்துவரின் பரிந்துரைப்படி தேர்வு செய்து மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தினால் கூடுதல் பலன்களைப் பெறலாம்" என்கிறார்.

தோல் மற்றும் தோல் தயாரிப்புகளைப் பற்றி சமூக ஊடகங்களில் பேசும் நிபுணர்கள் பலர் இன்று இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் சமூக ஊடகங்களில் இதுபோன்ற கருத்துகளைப் பதிவிட அவர்களுக்கு அந்த தயாரிப்பு நிறுவனம் பணம் வழங்குகிறது. அதனால் அவர்கள் நேர்மறையாக கருத்து சொல்கிறார்கள். அவர்களில் பலர் உண்மையில் அந்த தயாரிப்பைப் பயன்படுத்துவதில்லை. இந்த விழிப்புணர்வு இல்லாததாலேயே சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக இளம் பெண்கள், இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்று டாக்டர் ப்ரீத்தி தெரிவித்தார்.

ஆன்லைனில் இன்ஃப்ளூயன்சர் பரிந்துரைக்கும் அழகு தயாரிப்புப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம், முறையாக மருத்துவரின் ஆலோசனைப்படி உங்கள் சருமத்திற்கு ஏற்ற தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

Experts says that skin care product that suits one may cause acne in others

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுகமான நாளிலேயே 77% உயர்வுடன் வர்த்தகமான பாரத் கோக்கிங் கோல்!

பாஜக தேசிய தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் நபீன்! நாளை பதவியேற்பு!

மகளிர் பிரீமியர் லீக்: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சு!

கரூர் பலி :விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

ஐக்கிய அரபு அமீரக அதிபரின் 2 மணி நேர இந்தியப் பயணம்! விமான நிலையத்துக்கே சென்று வரவேற்ற பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT