நேற்று சென்னை மேல்அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் கிண்டர்கார்ட்டன் குழந்தைகள் கிருஷ்ண ஜெயந்தி விழாவை வெகு விமரிசையாக கொண்டாடினர். எல்லாக் குழந்தைகளும் தங்களை குட்டி கிருஷ்ணாக்களாகவும் குட்டி ராதைகளாகவும் கற்பனை செய்து கொண்டு அதே விதமான வண்ண வண்ண உடைகளிலும் அலங்காரங்களிலும் வலம் வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பள்ளி மைதானத்தில் புல்லாங்குழல் இசையோடு பசு மேய்க்கும் அழகுக் கண்ணன் உருவம் உப்பால் வரையப்பட்டு சித்திரத்தைச் சுற்றிலும் குழந்தைகள் தாங்களே வண்ணம் தீட்டிய அழகழகான மண் பானைகளோடு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த விதம் நம்மை நந்தகோபரின் கோகுலத்துக்கே கை பற்றி இழுத்து சென்று விட்டது.
கோகுலாஷ்டமியின் சிறப்பே அன்றைய தினம் ஒவொருவரும் தமது வீட்டில் குட்டி குட்டியாய் கிருஷ்ணர் பாதம் வரைந்து அழகுக் கண்ணனை அவரவர் வீட்டிற்கு வரவழைப்பதாய் வேண்டிக் கொள்ளும் ஐதீகத்தில் தான் முழுமையடைகிறது. வீடுகளைப் போலவே நேற்று பள்ளி மைதானத்திலும் கிட்டத்தட்ட ஆயிரம் சின்னஞ் சிறு கிருஷ்ண பாதங்கள். மதிய உணவுக்கான இடைவேளையில் பள்ளி வளாகம் முழுக்க எங்கு பார்த்தாலும் பிருந்தாவனக் கண்ணன்களும், ராதைகளும் தான் நடந்தும், ஓடியும், ஆடியும், நண்பர்களோடு சேர்ந்து ஏதாவது குறும்பு செய்து கொண்டும் பள்ளியை ஆண்டு கொண்டிருந்தனர். காணக் காண தெவிட்டாத காட்சி அது.
இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் வேலம்மாள் குழுமப் பள்ளிகளை பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் மத வேறுபாடுகளின்றி கிறிஸ்துமஸ், ஓணம், கிருஷ்ண ஜெயந்தி, ரம்ஜான், தை பொங்கல் என எல்லா விதமான பண்டிகைகளையும் அந்தந்த கலாச்சார வழக்கப்படி தங்களது பள்ளி மாணவர்களோடு சேர்ந்து கொண்டாடி வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
நமது கலாச்சார விழுமியங்கள் என்பவை இப்படியான விழாக்களில் தான் செறிந்திருக்கின்றன. அவற்றை குழந்தைகளுக்கு கொண்டாட்டங்களின் மூலம் போதிப்பதும் கற்றலில் ஒரு வகை என்றால் மிகையில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.