கடவுள் எங்களை உருவாக்க வைக்கிறான்!
நாங்கள் உருவாக்கவில்லை. கடவுள் தான் எங்களை உருவாக்க வைக்கிறான்'' என்கிறார் கிஷோரி மோகன் பால்.
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுமே கடவுளின் படைப்புதான். அதில் மனிதன் கடவுளை உருவாக்கும் திறன் பெற்றுவிட்டான் என்று நாம் சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். உண்மை, அந்த சிறப்புப் பெற்றவர்தான் கிஷோரி மோகன் பால். இவர் கல்கத்தாவைச் சேர்ந்தவர்.
"எனது தந்தை சிரோன்மணி பால் கடவுள் வடிவங்களை களிமண்ணால் மட்டுமல்ல, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உபயோகித்து அழகுறச் செய்பவர். எனக்கு அப்பொழுது வயது 15. எனது தந்தை இந்த வடிவங்களைச் செய்வதை ஒரு நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருந்தேன். நானும் அவர் போலவே செய்யவேண்டும் என்று ஆசைப் பட்டேன். யாருக்கும் தெரியாமல் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருந்து களிமண்ணை எடுத்து சிறிய கிருஷ்ணன் வடிவத்தைச் செய்ய, அது எப்படியோ என் தந்தைக்குத் தெரிந்து விட்டது. நான் செய்த கிருஷ்ணன் உருவத்தைப் பாராட்டியதுடன் அதில் சில திருத்தங்களையும் சொன்னார். அன்றிலிருந்து அவர் கூட செல்ல எனக்கு அனுமதி கிடைத்தது.
ஒவ்வொரு வருடமும் நாங்கள் சென்னை வருவோம். இது 1982 ஆம் வருடம் முதல் நடக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சுமார் நான்கு மாதங்கள் சென்னையில் உள்ள பல இடங்களில் நடக்கும் துர்கா பூஜைக்காக நாங்கள் செய்யும் துர்கா உருவங்கள் தான் வைப்பது வழக்கம். ஆவடி ஏர் போர்ஸ், உமாபதி தெருவில் உள்ள காளி கோயில், மீனம்பாக்கம் ஏர் போர்ஸ், வேலூர், புதுச்சேரி, சென்னையில் உள்ள கெüடியாமடம், கிருஷ்ண ஜெயந்திக்காக ராமகிருஷ்ணா மடத்தில் வைக்கச் செய்யும் கிருஷ்ணர் உருவம் என்று எல்லாம் ஒரு சேர செய்து விட்டு நவம்பர் மாதம் கல்கத்தா செல்வோம். இந்த நான்கு மாத காலத்தில் சுமார் 25 துர்கா செட்டுகளைச் செய்து முடித்து விடுவோம். ஒரு துர்கா செட் என்றால் ஆக்ரோஷமான துர்கை (நாம் காளி என்போம்), அதன் கீழ் உள்ள ராக் ஷாஷன், சிங்கம், நாகம், கணபதி, லட்சுமி, சரஸ்வதி என இவை அனைத்தும் அடங்கும். இதிலும் ஓர் ஒற்றுமை என்ன தெரியுமா? நாங்கள் செய்யும் அனைத்து உருவங்களும் களிமண்ணால் செய்யப்படுபவை. அந்த களிமண் கல்கத்தாவில் இருந்தும், சென்னையில் இருந்தும் எடுக்கப்பட்டவை. இப்படி ஒரு செட் செய்ய நாங்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் சுமார் பதினைந்து நாட்கள். அதற்காகும் செலவு ரூபாய் 20ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை. இந்த வருடம் சென்னையில் தங்கி நாங்கள் வேலை செய்ய உதவிய, தி. நகர், தக்கர் பாபா வித்யாலயா, செயலாளர் மாருதி அவர்களுக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
நாங்கள் துர்கா செட் மட்டும் செய்வதில்லை. பல சமயங்களில் காளி, கிருஷ்ணன், விஸ்வகர்மா, சிவன் என்று பல தெய்வங்களின் உருவங்களையும் செய்கிறோம். நாங்கள் உருவாக்கும் கடவுள் உருவங்கள் எல்லாமே களி மண்ணால் ஆனவைதாம். ஆனால் என்று அதன் கண்களை திறக்கிறோமோ, அன்றிலிருந்து அது கடவுளாக மாறுகிறது. அது மட்டும் அல்லாமல் எந்த இடத்தில் அது வைக்கப்படுகிறதோ அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாங்கள் செய்த கடவுள் உருவங்களை பக்தியுடன் கை குப்பி வணக்குகிறார்கள். தினமும் சுலோகங்களும், வேதங்களும் பாராயணம் செய்து அந்த உருவங்களுக்கு தெய்வத்தன்மையை அடைய வைக்கிறார்கள். நாங்கள் உருவாக்கவில்லை. கடவுள் தான் எங்களை உருவாக்க வைக்கிறான்'' என்கிறார் கிஷோரி மோகன் பால்.