சத்தியம் எப்போதும் சாத்தியமே!: வழக்கறிஞர் தமிழ் பூங்குயில் மொழி
என் நேர்மைக்குப் பரிசாக சிலசமயம் ஏமாற்றம் கிடைத்தபோதிலும் நான் நேர்மையைக் கைவிட்டதில்லை. சிலர் வழக்கு கொண்டு வரும்போதே தங்கள் இயலாமையைக் கூறி, "கேஸ் முடிந்ததும் ஃபீஸ் தருகிறேன்' என்பார்கள்.
"உண்மையும் நேர்மையும் வழக்கறிஞர் பணிக்கு இரு கண்கள் போன்றவை என்று சொன்னால் இது சாத்தியமற்றது என்று வழக்கறிஞர்களேகூட இதை மறுத்துரைக்கக்கூடும். ஆனால், சத்தியம் எப்போதும் சாத்தியமே..! 1990 முதல் 25 ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளில் நான் வெற்றி பெறுவதற்கு அடிப்படை நேர்மைதான்...'' என்று கூறும் சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர் தமிழ்ப்பூங்குயில்மொழி, திருச்சி மாவட்டம் கல்விக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். மாணவ பத்திரிகையாளர், எழுத்தாளர், ஆங்கில மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவர். இவரின் கணவர் வீர.கதிரவன் உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் இவரின் தாய்வழி மாமா ஆவார். கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் தொலைக்காட்சியில், "சட்டம் சொல்வது என்ன?' என்ற நிகழ்ச்சியின் மூலம் ஆயிரக்கணக்கான நேயர்களுக்கு சட்டங்கள் சந்தேகங்கள் குறித்த விழிப்புணர்வை வழங்கி வருகிறார் தமிழ்ப்பூங்குயில்மொழி. சென்னை சி.ஐ.டி.நகரில் உள்ள அவரின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்தபோது அவரின் அனுபவங்கள் குறித்து கூறியதாவது:
"சென்னை சாலிகிராமத்தில் இட்லிமாவு வியாபாரம் செய்துவரும் 73 வயதான சரோஜா, கொண்டுவந்த வழக்கு இதுதான்: "தேனி மாவட்டத்தில் வருவாய்த்துறையில் பணியாற்றி வந்த என் கணவர், பணியில் இருக்கும்போதே சில பகைவர்களால் நடு ரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டார். கொலையாளிகள் தண்டனை பெற்றனர். ஆனால், என் கணவருக்கு வரவேண்டிய பணப்பயன்கள் எதுவும் இதுவரை வரவில்லை. நீங்கள்தான் வழக்குப்போட்டு வாங்கித்தரவேண்டும்' என்றார்.
"சம்பவம் எப்போது நடந்தது?'' என்றேன்.
"இருபத்தைந்து வருடத்திற்கு முன்பு...'' என்றார். எனக்கு அதிர்ச்சி... "இவ்வளவு தாமதமாக வந்திருக்கிறீர்களே?'' அதற்கு அவர் தன் சூழ்நிலை மற்றும் காரணங்களைக் கூறினார். எனக்கே நம்பிக்கை இல்லாமல் நான் எடுத்து நடத்தி வெற்றி பெற்ற வழக்கு இது... தாமதமானாலும் நியாயம் வெல்லும் என்பதை உணர்த்திய வழக்கு. மிகவும் மன நிறைவு தந்த வழக்கும்கூட.
Advertisement
ஒரு வழக்குக்காக என்னைத்தேடி வந்த விருத்தாசலத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் என்னை நெகிழ வைத்தவர்களில் ஒருவர்.
அவர் ஒரு ஏழை விவசாயி. அவர் குடும்பத்தில் பங்காளிகளுடன் ஏற்பட்ட சொத்துப் பிரச்னையை வழக்கு மூலம் தீர்க்க முடிவுசெய்து சென்னைக்கு வந்தவர் எனக்கு போன் செய்தார். அச்சமயம் ஒரு நிகழ்ச்சிக்காக நான் திருச்சிக்குச் சென்று கொண்டிருந்தேன். "நான் சென்னைக்குத் திரும்ப இன்னும் இரண்டு நாள்களாகும்.. நீங்களும் ஊருக்குச் சென்றுவிட்டு இரண்டு நாள் கழித்து வாருங்கள்.. அல்லது அவசரம் என்றால் வேறு வழக்கறிஞரைப் பாருங்கள்' என்றேன்.
இரண்டுநாள் கழித்து நான் வீட்டுக்கு வந்ததும், காலையிலேயே கனகராஜ் கையில் ஒரு வாழைப்பழத்தாருடன் என்னைப் பார்க்க வந்தார். விருத்தாசலத்திலிருந்து வருகிறார் என்று நினைத்து அவருடன் பேசினேன். அவர் சொன்னார் "வக்கீலம்மா, நான் விருத்தாசலம் போகவே இல்லை; கோயம்பேடு மார்க்கெட்டில் வாழைத்தார் வாங்கி வியாபாரம் செய்துகொண்டு அங்கேயே தங்கிவிட்டேன். உங்களைப் பார்க்காமல் இந்த வழக்கை முடிக்காமல் ஊர் திரும்புவதில்லை என்ற முடிவோடுதான் வந்தேன்' என்றார். இப்படி ஒரு மனிதரா என்று எனக்கு வியப்பாக இருந்தது. பொதுவாக சொத்து வழக்குகள் நாள்பட இழுக்கும். ஆனால், கனகராஜுவுக்காக இந்த வழக்கு சீக்கிரம் முடிய வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு அந்த வழக்கைத் தொடங்கினேன். கனகராஜின் மனதுக்கேற்ப வழக்கு அவருக்கு சாதகமாகவும், விரைவாகவும் முடிவுக்கு வந்ததில் எனக்குப் பெரும் திருப்தி.
சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற மாணவன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சமயத்தில், பிறப்புச் சான்றிதழில் (ஆறுமாதம் குறைவாக) பிறந்த தேதியைத் தவறாகப் பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பொதுத்தேர்வு எழுதும் வயதை அம்மாணவன் எட்டவில்லை என்று தேர்வெழுதத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பையனின் அம்மா அழுதபடி என்னிடம் வந்தார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, துரிதகதியில் செயல்பட்டு, நீதிமன்றத்தில் தடையை நீக்கி அம்மாணவனை பொதுத்தேர்வு எழுதவைத்துவிட்டோம். இது, என் சட்டக்கல்விக்குக் கிடைத்த கௌரவம்.
சென்னை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக இருந்த ஒரு அம்மாவின் திடீர் மரணத்தையடுத்து, அவர் மகள் ஜான்சிராணிக்கு கருணை அடிப்படையில் மாநகராட்சியில் வேலை கேட்டபோது, திருமணமான மகளுக்கு வேலை தர மறுத்தது நிர்வாகம். அதை எதிர்த்து, நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து, திருமணம் ஆன மகளுக்கும் கருணை அடிப்படையில் வேலை கொடுக்கவேண்டும் என்று போராடி அவ்வழக்கில் வெற்றிபெற்றோம். இதுபோன்று, வெவ்வேறு ஐந்து நபர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை கிடைக்கவும் செய்தேன்.
ரிடையர்மெண்ட் முடிந்து பல வருடங்களாக பென்ஷன் மற்றும் பணப்பயன்கள் வராத பலருக்கு வட்டியுடன் சேர்த்து வாங்கித் தந்திருக்கிறேன்.
"பொதுவாக வழக்கறிஞர்கள் தம் கட்சிக்காரர்களிடம் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்பது என் கருத்து. என் நேர்மைக்குப் பரிசாக சிலசமயம் ஏமாற்றம் கிடைத்தபோதிலும் நான் நேர்மையைக் கைவிட்டதில்லை. சிலர் வழக்கு கொண்டு வரும்போதே தங்கள் இயலாமையைக் கூறி, "கேஸ் முடிந்ததும் ஃபீஸ் தருகிறேன்' என்பார்கள்.
ஒருமுறை நாகப்பட்டினம் அருகேயுள்ள கிராமத்தில் தலையாரியாகப் பணியில் இருந்த கோபால் என்பவருக்கு எதிரான சூழ்ச்சிகளால் அவர் வேலை பறிபோனது. அவரின் வழக்கை எடுத்து நடத்தி அவருக்கு மீண்டும் வேலை கிடைக்கும்படி செய்தேன். கேஸ் முடிந்தவுடன் ஃபீஸ் தருவதாகச் சொன்னவர் தராமலே ஊருக்குச் சென்றுவிட்டார். நான் அவரை மறந்தே போய்விட்டேன். மூன்று வருடம் கழித்து அவர் தரவேண்டிய பணத்தை டிமாண்ட் டிராப்ட் மூலம் அனுப்பிவைத்ததை மறக்க முடியாது...
விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளியொன்றில் தலைமை ஆசிரியராகப் பணி புரிந்த சேகரன் என்பவர், தவறான நடத்தை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டார். கீழ்கோர்ட்டில் தண்டனை பெற்று, உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையே அவர் ஓய்வுபெறும் வயதைத் தாண்டிவிட்டார். விடுதலையான பின்னும் அவருக்கு வரவேண்டிய பணப்பயன்கள் எதுவும் வராமலே இருந்தது. அதற்கு "ரிட்' போட்டு முதல் ஹியரிங்கிலேயே பல லட்சம் ரூபாய்க்கான உத்தரவை வாங்கித் தந்தேன். "எனக்கு வர வேண்டிய தொகைதானே இது, இதற்கு ஏன் ஃபீஸ் தரவேண்டும்' என்று அவர் ஃபீஸ் தராமலே சென்றுவிட்டார். தன் கஷ்டத்தைச் சொல்லி ஃபீஸை குறைத்துக் கொடுக்கலாமே. ஏன் ஏமாற்ற வேண்டும்?
சமீபத்தில் ஒரு நேயர் "நான் முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன். இது முதல் மனைவிக்கு தெரிந்து, வழக்குத் தொடர்ந்திருக்கிறார். வழக்கு நிலுவையில் உள்ளது. நான் தப்பு செய்து விட்டேன். திருந்தி வாழ விரும்புகிறேன். இப்பிரச்னையிலிருந்து நான் எப்படித் தப்பிப்பது, வழி சொல்லுங்கள்'' என்று கேட்டார்.
சட்டப்படியான விவாகரத்து இன்றி இரண்டாம் திருமணம் புரிவதால் ஏற்படும் பிரச்னை இது. இப்பிரச்னையில், அவரின் முதல் மனைவி வழக்கை வாபஸ் பெற்றால்தான் வழக்கிலிருந்து அவர் தப்பிக்கலாம். ஆனாலும், இப்பிரச்னையிலிருந்து முழுவதுமாக அவர் வெளியேறிவிட்டதாகக் கருத முடியாது. இரண்டாம் மனைவிக்கு சட்டப்படியான அங்கீகாரம் கிடைக்காது. ஆனால், அதேசமயம் இரண்டாம் மனைவிக்கு குழந்தைகள் இருந்தால் முதல் மனைவியின் குழந்தைகளுக்கு உள்ளது போலவே அவர்களுக்கும் சட்டபூர்வ வாரிசு என்ற அந்தஸ்து உண்டு என்று சட்டம் சொல்கிறது'' என்றார் தமிழ்ப்பூங்குயில்மொழி.
-ரவிவர்மா.
படம்: அண்ணாமலை