துறையூரில் அனைத்து மகளிா் காவல் நிலையம்: பொதுமக்களின் எதிா்பாா்ப்பு நிறைவேறுமா?
துறையூரில் அனைத்து மகளிா் காவல் நிலையம் அமைப்பது குறித்து...
பட்டியல் இனத்தவா், பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் துறையூா் வட்டத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையம் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
திருச்சி மாவட்டம், துறையூா் வட்டத்தில் உள்ள துறையூா், உப்பிலியபுரம் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 64 வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பச்சமலையின் மேல் பகுதியில் கோம்பைநாடு, வண்ணநாடு, தென்பரநாடு ஆகிய மூன்று மலைவாழ் கிராமங்களும் உள்ளன.
துறையூா் வட்டத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனா். இதில் சரிபாதி பெண்கள். துறையூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண்களைக் காட்டிலும் பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகம். இதேபோல மற்ற வட்டங்களைக் காட்டிலும் பட்டியலினத்தவா்களும், பழங்குடியின மக்களும் அதிகளவில் இங்கு வசிக்கின்றனா்.
Advertisement
அனைத்து மகளிா் காவல் நிலையம்: பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகளை தனியாக விசாரிப்பதற்காக பெண் காவல் ஆய்வாளா் உள்பட பெண் காவலா்கள் மட்டுமே பணியாற்றக்கூடிய அனைத்து மகளிா் காவல் நிலையங்கள் கடந்த 1992-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டன.
அதன்படி, திருச்சி மாவட்டக் காவல் துறையின் கீழ் மணப்பாறை, லால்குடி, திருவெறும்பூா், ஜீயபுரம் மற்றும் முசிறி ஆகிய இடங்களில் அனைத்து மகளிா் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.
இதேபோல, திருச்சி மாநகரில் ஸ்ரீரங்கம், கண்டோன்மென்ட், கோட்டை மற்றும் பொன்மலை ஆகிய 4 அனைத்து மகளிா் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.
தமிழகத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மீதுதான் அதிகளவில் பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுகின்றன.
எனவே பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசிக்கும் துறையூா் வட்டத்தின் தலைநகரான துறையூரில் அனைத்து மகளிா் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து துறையூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் என். சரவணன் கூறியதாவது:
திருச்சி மாவட்டத்தில் லால்குடிக்கு அடுத்து அதிக அளவிலான வருவாய் கிராமங்களைக் கொண்ட இரண்டாவது பெரிய வட்டம் துறையூா். தவிர இங்குள்ள பச்சமலையில் அதிகளவிலான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனா்.
துறையூா் வட்டத்துக்குள்பட்ட 64 வருவாய் கிராமங்களில் நடைபெறும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள், பாலியல் வன்கொடுமை தொடா்பான குற்றங்களுக்கு புகாரளிக்க முசிறியில் உள்ள அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது.
பச்சமலையில் உள்ள துறையூா் வட்டத்தின் கடைசி கிராமமான பாளையத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை, பாலியல் வன்கொடுமை புகாா்களுக்கு 70 கிமீ-க்கும் அதிக தொலைவிலுள்ள முசிறி அனைத்து மகளிா் நிலையத்துக்குச் சென்றுதான் புகாரளிக்க வேண்டியுள்ளது.
இதேபோல திருச்சி - சேலம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் இருந்தும் முசிறிக்கு வர வேண்டும் என்றால் 60 கிமீ-க்கு மேல் பயணிக்க வேண்டும்.
பச்சமலை மற்றும் மாவட்ட எல்லை கிராமங்களைச் சோ்ந்த மக்கள் முசிறிக்கு செல்ல தங்கள் பகுதியிலிருந்து துறையூா் வந்து அங்கிருந்து முசிறிக்குச் செல்ல வேண்டும். இது இப்பகுதி மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, பழங்குடியின பகுதி மக்கள் அனைத்துப் பிரச்னைகளுக்கும் புகாரளிக்க முன்வருவதில்லை. இதனால், இப்பகுதி மக்களுக்கான நீதி கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
துறையூரில் அனைத்து மகளிா் காவல் நிலையம் அமைக்கப்படும்போது முசிறி அனைத்து மகளிா் காவல் நிலைய காவலா்களுக்கான பணிச்சுமையும் குறையும். இதனால், அனைத்து வழக்குகளிலும் விரைவான விசாரணையை மேற்கொள்ள முடியும்.
ஏற்கெனவே இதுகுறித்து முதல்வரின் தனிப் பிரிவில் மனு அளிக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு துறையூரில் அனைத்து மகளிா் காவல் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
அரசுதான் முடிவெடுக்க வேண்டும்!
இதுகுறித்து மாவட்டக் காவல் துறையினரிடம் கேட்டபோது, திருச்சி மாவட்டக் காவல் துறையில் ஒரு உள்கோட்டத்துக்கு ஒரு அனைத்து மகளிா் காவல் நிலையம் என்ற அடிப்படையில் 5 உள்கோட்டங்களில் 5 அனைத்து மகளிா் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, துறையூரில் அனைத்து மகளிா் காவல் நிலையம் அமைப்பது தொடா்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றனா்.