ஸ்பெஷல்

உடல் பருமனைக் குறைக்க 3 கட்டளைகள் இதுதான்!

உமாகல்யாணி

பெண்களைப் பொருத்தவரை தங்கள் உடல் அமைப்பை திருமணத்துக்கு முன் திருமணத்துக்குப் பின் என்று இரண்டாகப் பிரித்துவிட்டால் தி.பின் அவர்களது உடல்வாகு முற்றிலும் மாறிவிடும். அதுவும் குழந்தைப் பேறு முடிந்து பெண்கள் மீண்டும் தங்கள் பழைய உடல்வாகைப் பெறுவது மிகவும் கடினம். சுகப் பிரசவத்தில் கூட ஓரளவுக்கு பழைய உடல்வாகைப் பெற்றுவிட வாய்ப்பு கிடைக்கும். ஆனால் சிசேரியனுக்குப் பிறகு உடலில் காற்று புகுந்துவிட பல பெண்களுக்கு தொப்பை விழுந்துவிடும். இதை சரி செய்ய என்ன பிரயத்தனம் எடுத்தாலும் பலன் என்னவோ மிகக் குறைவாகத் தான் இருக்கும்.

பெண்களுக்கோ ஆண்களுக்கோ உடல் எடை அதிகரித்துவிட்டால் வியாதிகளுக்கு அது அடுத்த கட்டமாக வரவழைத்துவிடும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற சில பிரச்னைகள் இதனால் ஏற்படுவது அனைவரும் அறிந்ததுதான். சில எளிமையான வழிமுறைகளை தங்கள் வாழ்வியலாக உடல் பருமனைக் குறைக்க விரும்புவோர் கடைபிடிக்கவேண்டும். சத்தான உணவுகளை சாப்பிடுதல், உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மது, புகை போன்ற பழக்கங்களைத் தவிர்த்தல், உள்ளிட்ட சிலவற்றை தினந்தோறும் கடைபிடிக்க வேண்டும். அப்படி, உடல் பருமனிலிருந்து தப்பிக்க இதோ இந்த 3 கட்டளைகள் உங்களுக்கு உதவக் கூடும்.

1. உணவுக் கட்டுப்பாடு

நீங்கள் உண்ணும் உணவில் மாவுச் சத்து, புரதச் சத்து, கொழுப்புச் சத்த்ய் ஆகிய சத்துகள் சம அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தினமும் அந்தந்த சீஸனில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளைச் சாப்பிடுங்கள். ஆர்கானிக் வகை உணவுகளைப் பயன்படுத்து நல்லது. மேலும் நட்ஸ், முழு தானியங்கள், கீரை, முட்டை ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் கிடைத்துவிடும். முக்கியமாக நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் ஆகியவை சரிவிகிதத்தில் சேர்ந்தால் உடல் எடை சரியாக இருக்கும். 

உணவு உண்பதில் ஒரு ஒழுங்குமுறை மற்றும் நேரம் தவறாமையை கடைபிடிக்கத் தொடங்குங்கள். தினமும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் காலை உணவையும், அதன் பின் சரியான இடைவெளியில் மதிய உணவையும், பின்பு இரவு உணவையும் உட்கொள்ளுங்கள். எல்லா வேளையும் சத்தான உணவுகளை சரியான அளவு மட்டுமே சாப்பிடுங்கள். இதனால் உங்களுக்குத் தேவையான கலோரிகள் கிடைப்பதுடன் அதிகமாக கலோரிகள் உடலில் சேர்வதும் தவிர்க்கப்படும். ருசிக்காக மட்டும் சாப்பிடாமல் பசிக்காக சாப்பிடுங்கள்.

தேவைப்படுமாயின் நிபுணர்களின் துணையுடன் உணவு கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள். மாதம் ஒரு நாள் விரதம் இருப்பது நல்லதுதான். ஆனால் அடிக்கடி ஒரு நாள் முழுக்க சாப்பிடாமல் இருப்பதும், அல்லது சில சமயம் விருந்துக்குச் சென்று அளவுக்கு மீறி சாப்பிட்டுவிடுவதும் கூடாது. 

எந்த ஒரு உணவையும் அதற்குரிய மரியாதையுடன் சாப்பிடுங்கள். புத்தகம் படித்துக் கொண்டே, டீவி பார்த்துக் கொண்டோ அல்லது காதில் ஹெட்ஃபோனுடன் பாட்டுக் கேட்டுக் கொண்டோ ஒருபோதும் சாப்பிடாதீர்கள். நீங்கள் சாப்பிடும் அந்த உணவு தான் நீங்கள் உயிர் வாழக் காரணமாக உள்ளது என்ற உணர்வுடன் அந்த உணவை ரசித்து ருசித்து நன்றாக மென்று அனுபவித்து சாப்பிடுங்கள். அந்தப் பருக்கையில் உங்கள் பெயர் எழுதியுள்ளது, இறைவன் கொடுத்த பரிசு என்று எண்ணி சாப்பிடுங்கள்.

நன்றாக பசித்த பிறகே சாப்பாட்டுத் தட்டு முன் உட்காருங்கள். அரை குறை பசியுடனோ, சாப்பிடுவதைக் கூட ஒரு வேலையாகக் கருதி உண்ணத் தொடங்குவதோ கூடாது. பசித்தபின் புசி என்று பெரியோர்கள் கூறியிருப்பதன் உண்மை உணருங்கள். உணவை வேக வேகமாக விழுங்காமல் நிறுத்தி நிதானமாகவும் பொறுமையாகவும் சாப்பிடுங்கள். நாளடைவில் கொஞ்சமாகச் சாப்பிடத் தொடங்கிவிடுவீர்கள். உணவின் அளவு சரியாக இருந்தால் உடல் எடையும் சரியாகிவிடும். 

2. உடல் கட்டுப்பாடு

உடல் பருமனாகிவிட்டால் இயல்பாகவே இலவச இணைப்பாக சோம்பேறித்தனம் புகுந்துவிடும். சிலர் எங்கு இடம் கிடைத்தாலும் உட்காருவதும், முடிந்தால் படுத்துவிடுவார்கள். அது கூடாது. சுறுசுறுப்பாக வேலைகள் செய்வது உடல் பருமனைக் குறைக்க உதவும்.

உடல் உழைப்பு இருந்தால்தான் உண்ட உணவு நன்றாக செரிக்கும். அப்போது அதிக சதை உடலில் தங்காது. ஒரு வேலையும் செய்யாமல் உணவு மட்டுமே உள்ளே போய்க் கொண்டிருக்க, உடல் எடை அதிகரிக்காமல் என்ன செய்யும்? வாக்கிங், ஜாக்கிங், உடல் பயிற்சி, யோகா, சைக்ளிங் என்று தினமும் ஒன்றையாவது ரெகுலராகச் செய்ய வேண்டும். 

3. மனக் கட்டுப்பாடு

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் வேகமான ஒரு வாழ்க்கை முறைக்கு திசை திருப்பப்பட்டுவிட்டதால் எதையும் நிதானமாக பார்ப்பதில்லை. அதனால் உடல் மனம் என எல்லாமே கடுமையாக பாதிப்படைகிறது. இத்தகைய வாழ்க்கை முறையில் ஸ்ட்ரெஸ் என்ற வார்த்தையை உச்சரிக்காதவர் ஒருவராவது உள்ளார்களா எனும் அளவுக்கு மன அழுத்தப் பிரச்னை அனைவரையும் தாக்குகிறது. யோகா, தியானம், உடற்பயிற்சி போன்ற பழக்கங்களைத் தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம் மன அழுத்தத்தை தவிர்க்கலாம்.

மேலும் புகை பழக்கம், மது போன்ற பழக்கங்களைத் தவிர்த்துவிடுங்கள். உணவு செரிமானத்துக்கு உதவக்கூடிய என்சைம்களின் உற்பத்தியை புகையிலை தடை செய்வதால் உடல் பருமனுக்கு வழி வகுக்கிறது. எதுவும் அளவுக்கு அதிகமானால் அதற்கான பலனை வேறு யாரும் அனுபவிக்கப் போவதில்லை நீங்கள் தான் என்ற விழிப்புணர்வைக் கொள்ளுங்கள்.

நண்பர்களுடன் சுற்றுலா செல்வது, வீட்டினருடன் ஜாலியாகப் பேசுவது, குழந்தைகளுடன் மனம்விட்டுச் சிரிப்பது, மனத்துக்குப் பிடித்த இசையைக் கேட்டு மகிழ்வது என மனதை லகுவாக்கும் சிலவற்றில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். மேலும் அதிக தூக்கமும் நல்லதல்ல, அதற்காக குறைவான உறக்கமும் உடலுக்கு சரியானதல்ல. தேவையான உறக்கம் கிடைக்கவில்லை என்றால் நமது உடல் மற்றும் மூளையின் செயல்பாடுகள் குறையும். இந்தப் பிரச்னை தொடர்ந்தால் அது நாளாவட்டத்தில் உடல் பருமனை அதிகரித்துவிடும். 

என்ன செய்தும் உடல் பருமன் குறையவில்லை என்றால் சில வகை உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுங்கள். அது உங்கள் உடலில் சேந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் இளைக்க வைக்க உதவும். உங்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு இந்த ரெசிபி உதவக் கூடும்.

கொள்ளுக் குழம்பு

கொள்ளு - 3 டீஸ்பூன்
தக்காளி - 1
பூண்டு - 25 பற்கள்
புளி கரைசல் - தேவையான அளவு
தனியா - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 7  
வெங்காயம் - 1  
நல்லெண்ணெய் - 6 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெறும் வாணலியில் கொள்ளை போட்டு வாசனை வரும் வரை வறுத்து தனியே வைக்கவும். கெட்டியாக புளியைக் கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இதில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி தனியா, வெந்தயம், காய்ந்த மிளகாய், பூண்டு 10 பற்கள் போட்டு வறுத்துக்
கொள்ளவும்.

இதனை ஆறவைத்தப் பிறகு அதனுடன் வறுத்த கொள்ளு சேர்த்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, மீதிமிருக்கும் 15 பூண்டுப் பற்களைப் போட்டு
வதக்கவும்.

இதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதன்பின் புளிக்கரைசல், அரைத்த மசாலா கலவை, உப்பு போட்டு கலந்து கொதிக்க வைக்கவும். இறக்குவதற்கு முன்னால் சிறிதளவு நல்லெண்ணெயை சுழற்றி ஊற்றியபின் இறக்கவும்.

இந்த ருசியான சத்தான குழம்பை சாதத்துடன் பரிமாறவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT