ஸ்பெஷல்

என்னைத் திருநங்கை என்று பெருமையுடன் முன்னிலைப்படுத்திக் கொள்கிறேன்! நர்த்தகி நட்ராஜின் வாழ்க்கைப் பயணம்!

தினமணி

'திருநங்கை' என்ற பதத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர். பல போராட்டங்களுக்குப் பிறகு பல ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்போர்ட் பெற்ற முதல் திருநங்கை. அதனால் மற்ற திருநங்கைகளுக்கு எந்தவித சிரமமும் இன்றி பாஸ்போர்ட் கிடைக்க வழி வகுத்துத் தந்தவர். "முனைவர்' பட்டம் பெற்ற முதல் திருநங்கை... தமிழக அரசின் 'கலைமாமணி' பட்டம் பெற்றிருக்கும் முதல் திருநங்கை. தமிழிசை நடனத்தில் பிரபலமாகி 'நாயகி' 'பாவத்திற்கு' இலக்கணமும் இலக்கியமுமாகி பரத நாட்டியத்தில் தனது பங்களிப்பிற்காக குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய விருது பெற்ற முதல் திருநங்கை... வெளிநாடுகளில் தமிழ் அமைப்புகள் மட்டுமல்லாமல், முழுக்க முழுக்க வெளிநாட்டவர்களால் நிர்வகிப்படும் கலை கலாசார அமைப்புகளின் அழைப்புகளின் பேரில் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை பல ஆண்டுகளாக நடத்தி வரும் முதல் திருநங்கை.... என்று பல "முதல்'களை தன்னகத்தே கொண்டிருக்கும் நர்த்தகி நடராஜ் மதுரையைச் சேர்ந்தவர். சென்னைவாசியாகி சுமார் பதினேழு ஆண்டுகள் ஆகின்றன.

தமிழக அரசின் பதினொன்றாம் வகுப்பிற்கான தமிழ்ப் பாடப் புத்தகத்தில் நர்த்தகி நடராஜ் வாழ்க்கை பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. நடன இசைக் கலைஞர்களின் வாழ்க்கை பாடமாக வைப்பது இதுதான் முதல் முறை. திருநங்கை திருநம்பிகளை கிட்டத்தட்ட அனைவருமே தாழ்வான கோணத்தில் பார்க்கும்போது, திருநங்கையாலும் சாதிக்க முடியும்.. பலர் போற்ற வாழமுடியும் என்பதை நிகழ்த்திக் காட்டியிருப்பவர் நர்த்தகி நடராஜ்.

தான் கடந்து வந்த பாதை முட்கள் நிறைந்ததாக இருந்தாலும் அவற்றை முல்லைப்பூ விரிப்பாக மாற்றியவர். நர்த்தகி நடராஜ் தனது அனுபவங்களைப் இங்கு பகிர்ந்துகொள்கிறார்:

'மதுரைக்கு அடுத்த அனுப்பானடி. சின்ன கிராமம். பணக்கார குடும்பம். பத்து குழந்தைகளில் ஐந்தாவதாகப் பிறந்தேன். எப்படி நான் இப்படிப் பிறந்தேன் என்பது இன்றைக்கும் எனக்கு ஆச்சரியம். எனது நெருங்கிய தோழி சக்தியும் அப்படித்தான் பிறந்தாள். எங்கள் இருவரது குடும்பங்களையும் நட்பு இணைத்திருந்தது. எனது பால்திரிபு நிலைமை எனக்குள் இருக்கும் பெண்மையை இனம் கண்டு கொண்டதால், பெண்களின் அருகாமை எனக்குப் பிடிக்கும். சட்டை டிரவுசர் போடுவது பிடிக்காது. வளர வளர... எனது பழக்கங்களில் மாற்றம் கண்ட பெற்றோர், மூத்த சகோதர சகோதரிகள் என்ன செய்வதென்று அறியாமல் கலங்கி நின்றார்கள். பாசம் ஒருபுறம்... சமூகத்தின் கேலி கிண்டல் குத்துப் பேச்சினால் வந்து சேர்ந்த அவமானங்கள்... குடும்பத்தினர்தான் பாவம் என்ன செய்வார்கள்?

சிறுவயதிலேயே எனக்கும் தோழி சக்திக்கும் நடனத்தில் தீவிர வெறி. எங்கள் ஊரில் டென்ட் கொட்டகையில் போடும் படங்களில் வைஜெயந்திமாலா, பத்மினி , குமாரி கமலா, ராஜசுலோச்சனா, எம்.என்.ராஜம் நடன காட்சிகள் இருக்கும் படங்களை நானும் சக்தியும் விடமாட்டோம். இரண்டாம் ஆட்டத்திற்குத்தான் போவோம். படம் விட்டு அனைவரும் போன பிறகு, கொட்டகையிலிருந்து வீடு திரும்பும் வரை படத்தில் கண்ட நடனத்தை ஆடிப் பார்த்துக் கொண்டே வருவோம்.

அந்த டென்ட் கொட்டகைதான் எனது நடன பள்ளியாக அமைந்தது. வைஜெயந்திமாலா, பத்மினி, குமாரி கமலா, ராஜசுலோச்சனா, எம்.என்.ராஜம் தான் எனது ஆரம்ப நடன குருமார்கள். அதிலும் வைஜெயந்திமாலா நடனம் என்றால் எனக்கு உயிர். வீட்டின் அறையினுள், நானும் சக்தியும் நடனம் ஆடிப் பழகி, சினிமாவில் வரும் நடனக் காட்சிகளை அரங்கேற்றுவோம். நடனம் நளினம் எங்களின் வசமானது.

தமிழ் எப்படி சுத்தமாகப் பேச வேண்டும் என்பதை எம் .என். ராஜம் வசனம் பேசுவதிலிருந்துதான் கற்றுக் கொண்டேன். 'பிளஸ் ஒன்' வரை படித்தோம். இருவர் வீட்டிலும் நாங்கள் திருநங்கைகள் என உறுதியாகத் தெரிந்து கொண்டார்கள். அன்றைய சமூக சூழல் காரணமாக அவர்களுக்கு கெüரவ குறைச்சலாகக் கருதினார்கள். மேலே படிக்கவும் அன்றைய சமூகச் சூழல் அனுமதிக்கவில்லை. உதாசீனங்களை கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்குள்ளும் வெளியிலும் உணர ஆரம்பித்தோம். ஓடிப் போவதைத்தவிர வேறு வழியில்லை என்ற நிலைமை ஏற்பட்டது. எங்கே போவது.... நெறி தவறி வாழப் பிடிக்கவில்லை. அப்படியான வாழ்க்கை வேண்டவே வேண்டாம் என்று நானும் சக்தியும் முடிவெடுத்தோம்.

அந்த சமயத்தில், பிரபல தமிழ் வார இதழ் ஒன்றில் வைஜெயந்திமாலாவின் நாட்டிய குருவான கிட்டப்பா பிள்ளை பற்றிய கட்டுரை வந்திருந்தது. நடனம் கற்றால் வைஜெயந்திமாலாவின் குருவிடம்தான் கற்கவேண்டும் என்று தீர்மானித்திருந்த எனக்கு "வைஜெயந்திமாலாவின் குரு யார்... எங்கிருக்கிறார்..' என்ற விவரம் எதுவும் தெரியாது. அந்த கட்டுரை எனக்கு எல்லாம் சொன்னது. நடன தாரகைகளான ஹேமமாலினி, யாமினி கிருஷ்ணமூர்த்தி, சுதாராணி ரகுபதிக்கும் இவர்தான் குரு. நடனத்தில் மட்டுமின்றி வாய்ப்பாட்டிலும், மிருதங்கத்திலும் அவர் ஒரு பல்கலைக் கழகம். நானும் சக்தியும் குரு வசிக்கும் தஞ்சாவூருக்கு கிளம்பினோம். "எங்களை சிஷ்யையாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அவரை சரணடைந்தோம். அவர் எங்களை ஏற்றுக் கொண்டாலும் நடனப் பயிற்சிக்காக ஓர் ஆண்டு காத்து நிற்க வேண்டி வந்தது. "நடனம் கற்க போதிய பொறுமை தேவை... அது எங்களிடம் இருக்கிறதா' என்று சோதிக்கவே... எங்களை குரு காத்திருக்க வைத்தார். பரத நாட்டியத்தின்பால் எனக்கு இருக்கும் தீவிர ஈடுபாட்டை உணர்ந்து நான்கு ஆண்டுகளில் சொல்லிக்கொடுக்கும் பல்வேறு அடவுகளை ஒரே ஆண்டில் சொல்லிக் கொடுத்தார். என்னை இயக்கும் தெய்வ சக்தியானார்.

எனது குருகுல வாசம் சுமார் பதினைந்து ஆண்டுகள் நீண்டது . எனது குரு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த போது அவரது உதவியாளராக இருந்தேன். தமிழ்நாட்டில் பல கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.

குரு இயற்கை எய்தியதும் சென்னைக்கு குடி பெயர்ந்தேன். தொழில் ரீதியாக நடன நிகழ்ச்சிகளைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் திருநங்கை பரத நாட்டியம் ஆடுவதா.. அதை பார்ப்பதா என்று யோசித்தவர்கள் எனது நாட்டியத்தைக் கண்டு அசந்து போய் என்னை ஏற்றுக் கொண்டார்கள். இன்றைக்கு பல ஆயிரம் மேடைகளை உலகளவில் கண்டுவிட்டேன். மதுரை நகரின் இன்னொரு பெயர் 'வெள்ளியம்பலம்'. அந்தப் பெயரில் நாட்டிய பள்ளி ஒன்றைத் தொடங்கி பரத நாட்டியம் கற்றுக் கொடுத்து வருகிறேன். என்னிடம் பயின்ற சிஷ்யைகள் இன்று நடன ஆசிரியர்களாக மாறியுள்ளனர். மதுரை மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த நடனப் பள்ளிக்கு கிளைகள் உள்ளன. நாட்டியத்தில் சம்பாதித்ததை நாட்டியத்திற்கே அர்ப்பணிக்க வேண்டும் என்ற அடிப்படையில், நடனப் பள்ளி நிர்வாகத்தை அறக்கட்டளையாக மாற்றியுள்ளேன்.

உலகின் பல பல்கலைக்கழகங்களில் எனது நடன நிகழ்ச்சிகள் அரங்கேறிவருகின்றன. குறிப்பாக ஜப்பானில் உலக அறிஞர்கள் கூடும் ஒசாகா எத்னாலாஜி மியூசியம் கலை அரங்கில் எனது நடன நிகழ்ச்சி நடந்தது நான் செய்த பாக்கியம். பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் வருகை தரும் பேராசிரியராக இருக்கிறேன். இந்த மாதக் கடைசியில், அனைத்து அமெரிக்க தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபெட்னா'வின் ஆதரவில் மூன்றாவது முறையாக நடன நிகழ்ச்சி நடக்க உள்ளது. தவிர அங்குள்ள தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த 150 சிறுமிகளை வைத்து திருக்குறள் நடன நிகழ்ச்சி ஒன்றையும் வழங்க உள்ளேன்.

எனது அபிமான நட்சத்திரங்களான வைஜெயந்தி, பத்மினியை எனது நாட்டியம்தான் சந்திக்க வைத்தது. நடிகை பத்மினி அமெரிக்காவில் இருந்த போது சந்தித்து பேசியிருக்கிறேன். வைஜெயந்திமாலா எனது நடனத்தை சென்னையில் பலமுறை பார்த்து பாராட்டியுள்ளார். நடனம் தான் எல்லாம் என்று ஆனதும் நடனத்தின் வேர்கள் எங்கே தொடங்குகிறது என்று தமிழ் இலக்கியங்களில் தேட ஆரம்பித்தேன். உலகின் பழமையான மொழியான தமிழில் அந்த ரகசியம் புதைந்து கிடக்கிறது. தொல்காப்பியத்தில் மொழி , நடனம், இசை மட்டுமின்றி திருநங்கைகளின் உடலியல் கூறு பற்றி கூட சொல்லப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் இந்திரவிழாவில் மாதவி பதினோரு வகை நடனம் ஆடுகிறாள். அதில் ஒன்பதாவது வகையாக "பேடி' நடனம் ஆடுவாள். அது உலகின் முதல் "திருநங்கை நடனம்'. உலகின் சாஸ்திரிய நடனங்களின் வேர்களைத் தேடினால் அவை மாதவி ஆடிய நடனங்களில் வந்துதான் நிற்கும். மாதவியின் ஆடல்கள்தான் உலக நடனங்களின் தாய். "அலி' என்னும் சொல், கீழ்த்தரமான சொல் என்று பொருள் கொள்ளப்படுகிறது. உண்மையில் அது இறைநிலையைக் குறிக்கும் ஓர் அடையாளச் சொல். 'ஆணாகி பெண்ணாகி அலியாகி நின்றவன் இறைவன்' என்று மாணிக்க வாசகர் திருவாசகத்தில் பாடியிருக்கிறார். இறைவனை ஆணாகப் பாவித்து தன்னைப் பெண்ணாக நினைத்து ஆழ்வார்களும், சிவனடியார்களும் பாடல்கள் பாடியுள்ளனர். மாணிக்க வாசகரை, 'மாணிக்க வாசக நாச்சியார்' என்று நாயகி பாவத்தில் நாம் அழைக்கிறோம்.

என்னைத் திருநங்கை என்று பெருமையுடன் முன்னிலைப்படுத்திக் கொள்வதில் நான் உறுதியாக இருக்கிறேன். இறைவன் ஆண் என்றால் அது பெண்களை சிறுமைப் படுத்துவதாகும். கடவுள் பெண் என்றால் ஆண்களைக் குறைத்து மதிப்பிடுவதாகும். ஆணும் பெண்ணும் சேர்ந்து சரிநிகர் சமானமாக கடவுள் இருக்கிறார் என்றால் அதுதான் பொருத்தம். அந்த நிலைதான் திருநங்கை நிலை. உயர்ந்த எண்ணங்களே செயல் வடிவம் பெரும். உழைப்பே வெற்றியின் கோயில்' என்கிறார் முனைவர் நர்த்தகி நடராஜ்.
 - பிஸ்மி பரிணாமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT