பலிக்காமல் போன கணக்கு!
மக்களவைத் தேர்தலில் தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி, தேசியக் கட்சியான காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே கூட்டணி ஏற்படுமா
மக்களவைத் தேர்தலில் தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி, தேசியக் கட்சியான காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே கூட்டணி ஏற்படுமா என்று நீண்ட நாள்களாக எழுந்து வந்த கேள்விக்குத் தற்போது விடை கிடைத்துள்ளது.
இரு கட்சிகளும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி இல்லை என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
இதைத் தொடர்ந்து, பல்வேறு வகையில் கணக்குப் போட்டு காய்களை நகர்த்தி வந்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான கேஜரிவாலின் கணக்கு பலிக்காமல் போய்விட்டது.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தில்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. தொடர்ந்து மூன்று முறை தில்லி மாநிலத்தில் ஆட்சி செய்த காங்கிரஸை அனைத்துத் தொகுதிகளிலும் பின்னுக்குத் தள்ளிஆம் ஆத்மி கட்சி இரண்டாம் இடத்துக்கு வந்தது. ஆனால், காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய இரண்டு கட்சிகளும் பெற்ற மொத்த வாக்குகள் பாஜக பெற்ற வாக்குகளைவிட சற்று அதிகமாகும்.
ஷீலா தீட்சித் எதிர்ப்பு
இந்நிலையில், தேச நலனுக்காக மோடி அரசை மாற்ற வேண்டும் என்றும், அதற்கு மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிப்பது அவசியம் என்றும் கூறி காங்கிரஸுடன் கூட்டணி வைக்க ஆம் ஆத்மி முனைப்பு காட்டியது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால், தங்களுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தார்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால், அண்மையில் காங்கிரஸின் தில்லி தலைவராக நியமிக்கப்பட்ட ஷீலா தீட்சித், கட்சியின் செயல் தலைவர்கள் தேவேந்தர் யாதவ், ஹாரூண் யூசுஃப், ராஜேஷ் லிலோதியா ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என பிடிவாதமாக இருந்தனர்.
இருப்பினும், ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணியை ஏற்படுத்தும் முகமாக தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் முயற்சி மேற்கொண்டார். கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், தில்லியின் 7 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து ஆம் ஆத்மி கட்சி, தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியது.
ராகுல் ஆலோசனை
பரஸ்பர ஐயங்கள், புகார்கள் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், இரண்டு கட்சிகள் இடையே கடந்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது.
இது ஒருபுறம் இருக்க, கூட்டணி தொடர்பாக காங்கிரஸின் தில்லி தலைவர் ஷீலா தீட்சித், கட்சியின் தில்லி மேலிடப் பொறுப்பாளர் பி.சி.சாக்கோ ஆகியோருடன் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். ராகுல் காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, ஆம் ஆத்மியுடன் கூட்டணி ஏற்பட்டால், காங்கிரஸுக்கு ஏற்படக் கூடிய சாதக, பாதக அம்சங்கள் தொடர்பாக ராகுல் காந்தியிடம் அவர்கள் விரிவாக விளக்கியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக, ஆம் ஆத்மியுடன் கூட்டணி ஏற்படுத்தினால், வரும் 2020-இல் நடைபெறவுள்ள தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அது எந்தவிதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக ஆராயப்பட்டதாகத் தெரிகிறது.
நிபந்தனை
இதற்கிடையே, இந்தப் பேச்சுவார்த்தையின்போது, தில்லி மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஹரியாணா, பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களிலும் சண்டீகர் யூனியன் பிரதேசத்திலும் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி அமைய வேண்டும் என்று ஆம் ஆத்மி நிபந்தனை விதித்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், தில்லியில் மட்டுமே ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி உள்ளிட்ட எந்தக் கட்சியுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறி காங்கிரஸ் மறுத்து வந்தது.
இதனிடையேதான் சில நாட்களுக்கு முன்னர், அந்த இரு மாநிலங்களில் கூட்டணி இல்லை என்ற அறிவிப்பை காங்கிரஸின் ரண்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டார்.
இந்நிலையில், பலத்த இழுபறிக்கு மத்தியில் வரும் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே கூட்டணி இல்லை என இரு கட்சிகளும் முறைப்படியே அறிவித்துவிட்டன.
கூட்டணி முறிவு
காங்கிரஸ் கூட்டணி முறிவை ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சி சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தையை முன்னெடுத்தவருமான சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மிக்கு 4 எம்.பி.க்களும் 20 எம்எல்ஏக்களும் உள்ளனர். ஆனால், அங்கு ஒரு தொகுதியைக் கூட ஆம் ஆத்மிக்கு ஒதுக்க காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை.
தில்லியில் ஒரு எம்எல்ஏவைக் கூட கொண்டிராத காங்கிரஸ் கட்சி, இந்தத் தேர்தலில் 3 மக்களவைத் தொகுதிகளைக் கேட்கிறது. இது எந்த வகையில் நியாயம்? அதே சமயம், கடந்த மக்களவைத் தேர்தலில் ஹரியாணா, கோவா ஆகிய மாநிலங்களில் கணிசமான வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ளோம்.
ஆனால், அந்த மாநிலங்களிலும் எங்களுக்கு தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் கட்சி முன்வரவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் சண்டீகரில் ஆம் ஆத்மி வேட்பாளர் 1,08,679 வாக்குகளைப் பெற்றார். ஆனால், தில்லியில் மட்டும்தான் கூட்டணி; அதுவும் 3 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கினால் மட்டுமே கூட்டணி என காங்கிரஸ் நிர்பந்திப்பது நியாயமற்றது. அதனால்தான் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொண்டோம் என்றார் அவர்.
காங்கிரஸ் அதிரடி
கூட்டணி முறிவு குறித்து காங்கிரஸ் கட்சியின் தில்லி மேலிடப் பொறுப்பாளர் பி.சி.சாக்கோ செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டது: தில்லியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியினரே கேட்டனர். இப்போது, மற்ற மாநிலங்களிலும் தங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அக்கட்சி கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆம் ஆத்மி தனித்து நின்று பாஜகவை தோற்கடிக்க முடியாது எனத் தெரிந்தே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க முன்வந்தது என்றார்.
பலிக்காமல் போன கணக்கு
தில்லி, ஹரியாணா, பஞ்சாப், கோவா உள்ளிட்ட சில மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால் தங்களுக்கு சாதகமாக அமையும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கணக்குப் போட்டார்.
பாஜகவைத் தோற்கடிக்க கூட்டணி அமைப்பது அவசியம் என்று காங்கிரஸுக்கு அவர் அழைப்பு விடுத்தார். ஆனால், தற்போது நீண்ட இழுபறிக்குப் பிறகு, கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், தில்லி முதல்வர் கேஜரிவாலின் கணக்கு பலிக்காமல் போய்விட்டதாக தலைநகர் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தனது வியூகங்கள் தோற்றதால் தேசிய அளவில் அரசியல் தலைவராகும் அவரது கனவும் பலிக்காமல் போனது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்
கின்றனர்.