முகப்பு
மக்களைவைத் தேர்தல் 2019

தேர்தல் சீர்திருத்தங்கள் சில...

குடியாட்சிக்கு அடிப்படையாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கடந்த 1951-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. நாடாளுமன்றம், மாநில சட்டப் பேரவைகளுக்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும்

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:08 AM
பகிர்:

குடியாட்சிக்கு அடிப்படையாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கடந்த 1951-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. நாடாளுமன்றம், மாநில சட்டப் பேரவைகளுக்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வரைமுறைகள் உள்ளிட்டவை இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. 
இதையடுத்து, காலந்தோறும் சமூக ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும், பல்வேறு அரசியல் சூழல்களாலும் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மாற்றங்கள் 
வந்தன.  நாட்டில் நேர்மையான, எளிமையான தேர்தலை நடத்தும் நோக்கில், தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளையும், சீர்திருத்தங்களையும் தேர்தல் ஆணையம் கடந்த காலங்களில் மேற்கொண்டது. அவை குறித்து சுருக்கமாக...

21-லிருந்து 18...
சுதந்திரத்துக்கு முன்பு, ஆங்கிலேயர்களின் ஆட்சியில், இந்திய மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்படவில்லை. படித்தவர்களுக்கும், சொத்து அதிகமாக வைத்துள்ளவர்களுக்கும் மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற பிறகு, 21 வயது நிரம்பிய மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. பின்னர், வாக்களிப்பதற்கான வயதை 21-லிருந்து 18-ஆக 1988-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் குறைத்தது.

சொத்து மதிப்பு எவ்வளவு?...
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சொத்து மதிப்புகளையும் மனுவில் குறிப்பிட வேண்டும் என்று 2003-ஆம் ஆண்டு விதிமுறைகள் திருத்தப்பட்டன. மேலும், கல்வி விவரங்கள், நிலுவையில் உள்ள வழக்கு விவரங்கள், கடந்த காலங்களில் குற்றவழக்கில் தண்டனை பெற்ற விவரங்கள் உள்ளிட்டவற்றையும் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு வேட்பாளர்கள் தள்ளப்பட்டனர்.
கட்டுப்பாடு...: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்துவதற்கு 2009-ஆம் ஆண்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

சீட்டுக்கு மாற்றாக இயந்திரம்...
தேர்தல்களில் வாக்குச் சாவடியைக் கைப்பற்றி கள்ள வாக்குப் பதிவு செய்வதும், வாக்குப் பெட்டிகளைக் கைப்பற்றும் குற்றங்களும் அதிகரித்தன. இதனால், வாக்குச் சாவடிகளில் ஏற்படும் கலவரங்களும் அதிகரிக்கத் தொடங்கின. இவற்றைத் தடுக்கும் நோக்கில், ஒரு தொகுதியில் உள்ள பல்வேறு வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குச் சீட்டுகளை கலந்து, அவற்றை எண்ணும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், கலவரங்கள் சற்று குறைந்தன.
இருப்பினும், தேர்தலில் காகிதப் பயன்பாட்டைக் குறைக்கவும், வாக்களிப்பதை எளிமையாக்கவும், வாக்கு எண்ணிக்கையை விரைவுபடுத்தும் நோக்கிலும், பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வாக்குச் சீட்டு முறையை ஒழித்துவிட்டு, வாக்குப் பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதன்முதலில், 1998-ஆம் ஆண்டு ராஜஸ்தான், மத்தியப் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில், சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டது. பின்னர், 2004-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

அடையாள அட்டை...
ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்களிப்பதைத் தடுக்கவும், கள்ள வாக்குகள் செலுத்துவதைத் தடுக்கும் நோக்கிலும், வாக்காளர் அடையாள அட்டைகள் 1993-ஆம் ஆண்டு வழங்கப்பட்டன. ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1-ஆம் தேதி, 18 வயது பூர்த்தி அடைந்த எவரும், தங்களது வசிப்பிடப் பகுதிக்கு உரிய தேர்தல் அலுவலரிடம் பதிவு செய்துகொண்டு வாக்காளர் அடையாளஅட்டையைப் பெறலாம்.

கூடுதல் கட்டணம்...
தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்யும் பொதுப் பிரிவைச் சேர்ந்த வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் கட்டணம், 2009-ஆம் ஆண்டு ரூ.25,000ஆக உயர்த்தப்பட்டது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை ரூ.12,500ஆக உயர்த்தப்பட்டது.
நோட்டா வரவு...
வாக்காளர்களுக்கு மேலும் சுதந்திரத்தை அளிக்கும் வகையில், வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதைத் தெரிவிக்கும் நோட்டா பொத்தான், வாக்குப் பதிவு எந்திரத்தில் இணைக்கப்பட்டது. முதன்முதலாக 2013-ஆம் ஆண்டு சத்தீஸ்கர், மிúஸாரம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் சோதனை அடிப்படையில் நோட்டா பயன்படுத்தப்பட்டது. பின்னர், 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது.

வாக்களித்ததற்கான ஆதாரம்...
வாக்காளர்களின் வாக்கு சரியாகச் செலுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வாக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள், தேர்தலில் அறிமுகமாயின. 2013-ஆம் ஆண்டு நாகாலாந்து இடைத்தேர்தலில் முதன்முதலாக வாக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரம் பயன்படுத்தப்பட்டது. பின்னர், 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டும் பயன்படுத்தப்பட்டது. தற்போது நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் இந்த எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

1996 சீர்திருத்தங்களின் ஆண்டு
தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் நோக்கில், 1990-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் வி.பி. சிங் அரசு, தினேஷ் கோஸ்வாமி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு, 1996-ஆம் ஆண்டு தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், பல்வேறு சீர்திருத்தங்கள் தேர்தலில் புகுத்தப்பட்டன. அவை பின்வருமாறு:
*      தேசியக்கொடி, தேசிய கீதம், இந்திய அரசியல் சட்டம் ஆகியவற்றை அவமதித்த குற்றத்துக்காகச் சிறைத் தண்டனை பெற்றோர், தேர்தலில் போட்டியிட முடியாது.
*      தேர்தல் நாளன்று, அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். தவறினால், அபராதம் விதிக்கப்படும்.
*      தேர்தல் முடிவடைவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு, மதுபானங்கள் எதுவும் விற்கப்படக் கூடாது.
*      ஒரு வேட்பாளர், தேர்தலில் 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது.
*      வாக்குச்சாவடிக்குள் ஆயுதங்களுடன் மக்கள் யாரும் நுழையக் கூடாது. மீறினால், 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
*      தேர்தலுக்காகப் பிரசாரம் மேற்கொள்ளும் காலம் குறைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.