மாக்கனுக்கு கை கொடுக்குமா புதுதில்லி?
புதுதில்லி மக்களவைத் தொகுதியில் கரோல் பாக், படேல் நகர், மோதி நகர், தில்லி கண்டோன்மன்ட், ராஜேந்தர் நகர், புது தில்லி, கஸ்தூர்பா நகர், மாளவியா நகர், ஆர்.கே. புரம், கிரேட்டர் கைலாஷ் ஆகிய
புதுதில்லி மக்களவைத் தொகுதியில் கரோல் பாக், படேல் நகர், மோதி நகர், தில்லி கண்டோன்மன்ட், ராஜேந்தர் நகர், புது தில்லி, கஸ்தூர்பா நகர், மாளவியா நகர், ஆர்.கே. புரம், கிரேட்டர் கைலாஷ் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
இத்தொகுதியில் மொத்தம் 16,17,470 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 8,95,079 பேர் ஆண்கள். 7,20,791 பேர் பெண்கள். இதர வாக்காளர்கள் 1,600 பேர் உள்ளனர். தாழ்த்தப்பட்டோர் 18 சதவீதம், பஞ்சாபிகள் 17 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் 14 தவீதம், பிராமணர்கள் 7 சதவீதம், இஸ்லாமியர்கள் 5 சதவீதம், வைஷியா 10 சதவீதம் உள்ளனர்.
இத்தொகுதியில் நடுத்தர வருவாய் பிரிவினர் அதிகம் வசிக்கின்றனர். கனாட் பிளேஸ், சரோஜினி நகர், கான் மார்க்கெட், செளத் எக்ஸ்டென்ஷன், டிபன்ஸ் காலனி, கிரீன் பார்க் ஹோஸ்காஸ் போன்ற சந்தைப் பகுதிகள் இங்கு உள்ளன. அரசு ஊழியர்கள் சுமார் 17 சதவீதம் இங்கு வசிக்கின்றனர்.
கடந்த பிப்ரவரியில் கரோல் பாக் பகுதியில் ஹோட்டல் ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். சீலிங் நடவடிக்கையில் சுமார் 4 ஆயிரம் வர்த்தக சொத்துகள் முடக்கப்பட்டன. குடியிருப்பு திட்டத்திற்காக 16 ஆயிரம் மரங்கள் வெட்டும் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராட்டம் மேற்கொண்டனர்.
தில்லி தேர்தலில் இவை முக்கிய விவகாரங்களாக இருக்கின்றன. 2017 முதல் தொடங்கிய சீலிங் நடவடிக்கை விவகாரத்தில் வர்த்தகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மீனாட்சி லேகி 4,53,350 வாக்குகள் பெற்றார். ஆம் ஆத்மியின் ஆசிஷ் கேதான் 2,90,642 வாக்குகள் பெற்றார். இதில்,1,62,708 வாக்குகள் வித்தியாசத்தில் மீனாட்சி லேகி வெற்றிபெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மாக்கன் 1,82,893 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டார். மொத்தம் பதிவான வாக்குகளில் பாஜக 46.73 சதவீதம், ஆம் ஆத்மி 29.96 சதவீதம், காங்கிரஸ் 18.85 சதவீதம் பெற்றன.
இத்தொகுதியில் முதன்முதலாக 1952-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மஸ்தூர் பிரஜா கட்சியைச் சேர்ந்த சுதேசா கிருபளானி வெற்றி பெற்றார். அவரே 1957-ஆம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1961-ஆம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜன சங் கட்சியின் பல்ராஜ் மதோக் வெற்றி பெற்றார். இத்தொகுதியில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், பாஜக மூத்த தலைவர்கள் எல். கே. அத்வானி, கிருஷ்ண சந்திர பந்த், ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட முக்கிய விஐபிகள் பலர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
வரும் 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் புது தில்லி தொகுதியில் தற்போதைய பாஜக எம்.பி.யும், அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், உச்ச நீதிமன்ற வழக்குரைஞருமான மீனாட்சி லேகி (51) மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் தில்லி காங்கிரஸின் முன்னாள் தலைவரும், இளம் மத்திய கேபினட் அமைச்சராக இருந்தவரும், மூன்று முறை எம்எல்ஏவாகவும், இரண்டு முறை எம்.பி.யாக இருந்தவருமான அஜய் மாக்கன் (50) களம் காண்கிறார். ஆம் ஆத்மி சார்பில் அக்கட்சியின் தீவிர உறுப்பினரும், சமூக ஆர்வலருமான பிரிஜேஷ் கோயல் (43) களத்தில் உள்ளார். இவர்கள் தவிர வேறு சிறிய கட்சிகளின் வேட்பாளர்களும் போட்டியில் உள்ளனர்.
பாஜக வேட்பாளர் மீனாட்சி லேகி, கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதியில் தான் மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை முன்வைத்தும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை கூறியும் வாக்குச் சேகரித்து வருகிறார். எம்.பி. நிதி மூலம் தெருவிளக்குகள், கழிப்பறைகள், சாலைகள், குடிநீர் மற்றும் கழிவு நீர் சாக்கடை அமைப்பதற்காக நடவடிக்கை எடுத்ததாகக் கூறுகிறார்.
காங்கிரஸ் வேட்பாளர்அஜய் மாக்கன், அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் உள்ள குறைபாடுகளைக் களையவும், அரசு ஊழியர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாட்டுகளை குறைக்கவும் தீர்வு காண்பேன். மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரு மாதத்திற்குள்ளாகவே சீலிங் நடவடிக்கைக்கு முடிவு கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆம் ஆத்மி வேட்பாளர் பிரிஜேஷ் கோயல், தொகுதியில் யோகா மூலம் பிரசாரம் செய்கிறார். இவர் பூங்காக்களில் யோகா பயிற்சியில் ஈடுபட்டு மக்களின் கவனத்தை கவர்ந்து வருகிறார். யோகா பயிற்சியும் அளித்து வருகிறார். தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரிக்கையை பிரதானமாக முன்வைத்து பிரசாரம் செய்கிறார்.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு என்ன?
இத்தொகுதியில் உள்ள பட்டேல் நகர், ராஜேந்தர் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்புகள் பெருகி வருகின்றன. சட்டவிரோத கட்டுமானங்களும் நடைபெற்று வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், பாஹர்கஞ்ச், கரோல் பாக் ஆகிய பகுதிகளில் பட்ஜெட் ஹோட்டல்கள் அல்லது விருந்தினர் இல்லங்கள் நெரிசலான தெருக்களில் இயங்கி வருவதால், வாகனங்கள் சாலையின் இருபுறம் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
இதனால், வாகன நிறுத்துமிடத்திற்கு என தனிப் பகுதியை ஒதுக்க வேண்டும்; பல அடுக்கு வாகன நிறுத்த மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ரவி தாஸ் கேம்ப், கீர்த்தி நகரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கேம்ப், ஷிவா பஸ்தி உள்ளிட்ட குடிசைப் பகுதிகளில் குடிநீர் பிரச்சினை, சுகாதாரம், துப்புரவு இடர்பாட்டை பொதுமக்கள் எதிர்கொள்கின்றனர். பழைய ராஜேந்தர் நகரில் வாகன நிறுத்துமிடம் ஒரு பெரிய பிரச்னையாக இருப்பதால் அடிக்கடி நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பத்மினி (தனியார் நிறுவன உரிமையாளர், ராஜேந்தர் நகர்): ராஜேந்தர் நகர், கரோல் பாக் பகுதியில் சங்கிலி பறிப்பு, திருட்டுப் பயம் உள்ளது. பெண்களுக்கு போதிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முகுந்தன் (வங்கி ஊழியர், கரோல் பாக் ): சட்டவிரோதமாக ஆழ்துளைக் கிணறு மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதால், நீர்மட்டம் குறைந்துள்ளது. இதைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
சி.தங்கவேல் (இந்திரபுரி): இந்திரபுரி பகுதியில் உள்ள 6 பிளாக்குகளிலும் கழிவுநீரோடையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் கட்சிக்குத்தான் வாக்களிப்போம்.
தருண் (நேரு ஏக்தா காலனி, ஆர்.கே.புரம்): எங்கள் பகுதியில் தெருக்குழாய்களில் தண்ணீர் விநியோகம் உள்ளது. ஆனால், வீட்டுக் குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பல முறை கோரிக்கை வைத்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை.
நரேஷ் குப்தா, (தேநீர் கடைக்காரர், பட்டேல் செளக்): பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. என்னிடம் முன்பு 5 பேர் வேலை செய்தனர். தற்போது 3 பேர் மட்டுமே உள்ளனர். வாக்குச் சாவடிக்கு செல்வதற்கு முன் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்வேன்.
பாலன் மணி, (தில்லி ஹோட்டல், உணவகங்கள் சங்கத்தின் துணைத் தலைவர், கரோல் பாக்): கரோல் பாகில் நீடித்து வரும் வாகன நிறுத்துமிடப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சாஸ்திரி பார்க்கில் பல அடுக்கு வாகன நிறுத்தும் மையம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது.
ஆனால், மாநகராட்சியில் இதற்கான கோப்புகள் நிலுவையில் உள்ளன. வாகன நிறுத்த மையம் அமைந்தபாடில்லை. இதனால், வணிகர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு தீர்வு காண முன்வரும் கட்சிக்கே வாக்கு.
யாருக்கு வாய்ப்பு? மீனாட்சி லேகியும், அஜய் மாக்கனும் தொகுதி மக்களுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர்கள். இது அவர்களுக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் செல்வாக்கு தனக்கு பலம் சேர்க்கும் என்று மீனாட்சி லேகி நம்புகிறார். அஜய் மாக்கன் இரு முறை எம்.பி.யாகவும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருந்தவர். கடந்த முறை போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தவர். இதனால், தன் மீதான அனுதாபம் மக்கள் மத்தியில் அதிகரித்திருப்பதாகவும், பாஜக, ஆம் ஆத்மி எதிர்ப்பு வாக்குகள் தனக்கு கூடுதல் பலம் சேர்க்கும் எனவும் அவர் நம்புகிறார்.
ஆம் ஆத்மி வேட்பாளர் பிரிஜேஷ் கோயல், கேஜரிவாலின் செல்வாக்கு, தில்லி அரசின் திட்டப் பணிகள் ஆகியவை தனக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறார். இத்தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக உள்ளதால் தற்போதைய அரசியல் சம்பவங்கள், பாலாகோட்டில் ராணுவ நடவடிக்கை ஆகியவை வாக்காளர்களின் மனப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் காரணியாக உள்ளன.
ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜகவுக்கு எதிரான வாக்குகள் பிரியும் பட்சத்தில் அது பாஜகவுக்கு சாதகமாகவே இருக்கும் என கணிக்கப்படுகிறது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் எண் கணித அடிப்படையில் பாஜக கூடுதல் வாக்குகள் பெறுவதற்கு சாத்தியம் உள்ளதாக அக்கட்சியினர் நம்புகின்றனர். இந்நிலையில், பாஜக, ஆம் ஆத்மி எதிர்ப்பு வாக்குகள் அஜய் மாக்கனுக்கு கை கொடுக்குமா என்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவரும்.