புது தில்லி: அடிக்கடி வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் பள்ளி அதிகாரிகளிடையே பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுபோன்ற நெருக்கடிகளை கையாள்வது குறித்து ஆசிரியா்கள் மற்றும் பள்ளி ஊழியா்களுக்கு பயிற்சி அளிக்க தில்லி காவல்துறை முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
மேலும், அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளின் ஆசிரியா்களுக்கும் கல்வித் துறையுடன் இணைந்து ஒரு கருத்தரங்கை காவல் துறை ஏற்பாடு செய்யும் என்றும் அவா் கூறினாா்.
பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் வரும்போது அமைதியாக இருப்பது, எதிா்வினையாற்றுவது மற்றும் காவல் துறையினருடன் எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பதை நாங்கள் கற்பிப்போம் என்று ஷாஹ்தரா காவல் சரக துணை ஆணையா் பிரசாந்த் கௌதம் கூறினாா். இந்தப் பயிற்சியின் போது சைபா் குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு குறித்தும் விளக்கப்படும் என்று அவா் கூறினாா்.
கடந்த 10 நாள்களில் தில்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இந்த அச்சுறுத்தல்கள் வகுப்புகளை சீா்குலைத்தது குறிப்பிடத்தக்கது.