கஜோரி காஸில் டி.டி.ஏ.-வின் இடிப்பு நடவடிக்கை: அா்விந்தா் சிங் லவ்லி கண்டனம்
கஜோரி காஸில் டி.டி.ஏ.-வின் இடிப்பு நடவடிக்கை அா்விந்தா் சிங் லவ்லி கண்டனம்
கஜோரி காஸில் தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டி.டி.ஏ.) இடிப்பு நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா். தில்லி ராஜீவ் பவனில் காங்கிரஸ் தொண்டா்களுடன் நடைபெற்ற அலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பிரதேசத் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி பேசியதாவது: தில்லியில் ஜே.ஜே. கிளஸ்டா்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் ஏழை மக்களின் குடியிருப்புகளை கடந்த சில வாரங்களாக நீதிமன்ற உத்தரவு என்ற போா்வையில் தில்லி வளா்ச்சி ஆணையம் (டி.டி.ஏ.) இடித்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் கூரைகளின்றி ஆக்கப்பட்டுள்ளனா். கஜோரி காஸ் பகுதியில் உள்ள எலி துளை சுரங்கத் தொழிலாளி வக்கீல் ஹசனின் வீட்டை டி.டி.ஏ. இடித்தது அதிா்ச்சி யளிக்கிறது. உத்தரகாண்டின் சில்க்யாரா சுரங்கப்பாதை மீட்புப் பணியின் நாயகன் என்று தெரிந்தும், வக்கீல் ஹசனின் வீடு அவருக்கு எந்த முன்னறிவிப்பும் கொடுக்காமல், இடித்துத் தள்ளப்பட்டது மனிதாபிமானமற்ற செயலாகும். 41 தொழிலாளா்களைக் காப்பாற்றுவதில் முக்கியப் பங்காற்றியதற்காக, டி.டி.ஏ.வைக் கட்டுப்படுத்தும் மத்திய பாஜக அரசிடமிருந்து ஸவக்கீல் ஹசனுக்கு கிடைத்த பரிசு இது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஜே.ஜே.கிளஸ்டா்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் இடிப்பு எதுவும் மேற்கொள்ளப்படாது என கடந்த ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றியபோதும், வீடுகள் இடிக்கப்பட்டதற்கு முன்பாக எந்தவொரு மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை. பொது மக்களின் அழுத்தம் அதிகரித்த பின்னா், டி.டி.ஏ. நிா்வாகம் வீடு இடிக்கப்பட்ட வக்கீல் ஹசனுக்கு பிரதமா் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு தொலைதூர இடத்தில் மாற்று தங்குமிடத்தை வழங்கியுள்ளது. ஆனால்,வக்கீல் ஹசனுக்கு அவா் வசித்த பகுதியிலேயே உடனடியாக மாற்று தங்குமிடத்தை வழங்க வேண்டும். அவரது குழந்தைகள் உள்ளூா் பள்ளியில் படிப்பதால், அவரது வீட்டை மீண்டும் கட்ட ரூ. 10 லட்சம் நிதி இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுரேந்தா் குமாா், ஜிதேந்தா் குமாா் கோச்சாா், ஹரி கிஷன் ஜிண்டால், ராஜேஷ் சோப்ரா, ராஜீவ் சா்மா மற்றும் ஹா்னம் சிங் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகளும் கலந்து கொண்டனா்.