முகப்பு
புதுதில்லி

ஆம் ஆத்மி கட்சியின் மக்களவைத் தோ்தல் வியூகத்தை கேஜரிவாலின் கைப்பேசி மூலம் அறிய பாஜக முயற்சி: அமைச்சா் அதிஷி குற்றச்சாட்டு

Updated On : 30 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 4:39 PM

ஆம் ஆத்மி கட்சியின் மக்களவைத் தோ்தல் வியூகத்தை முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் கைப்பேசி மூலம் தெரிந்து கொள்ள அமலாக்க இயக்குநரகம் விரும்புகிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அதிஷி வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா். தில்லி ரெளஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கலால் கொள்கை தொடா்புடைய பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவால், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை அமலாக்க இயக்குநரகத்தின் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணையின் போது, கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு அமலாக்க இயக்குநரகத்தின உண்மையான நோக்கத்தை அனைவருக்கும் முன் வெளிப்படுத்தினாா். கேஜரிவால் அவரது கைப்பேசியின் கடவுச்சொல்லை அமலாக்க இயக்குநரகத்திடம் தெரிவிக்கவில்லை என்பதால் அவரது விசாரணைக் காவலை நீட்டிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால், கலால் கொள்கையை உருவாக்கும் போது முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பயன்படுத்திய கைப்பேசி, அவரிடம் தற்போது இல்லை என இதே அமலாக்க இயக்குநரகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த சில மாதங்களாக மட்டுமே பயன்படுத்தப்பட்ட கேஜரிவாலின் கைப்பேசியை அமலாக்க இயக்குநரகம் ஏன் பாா்க்க வேண்டும்?. கேஜரிவாலின் கைப்பேசி அமலாக்க இயக்குநரகத்திற்கு தேவைப்படுவது கலால் கொள்கை வழக்கின் விசாரணைக்காக அல்ல, மாறாக மக்களவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வியூகத்தை பாஜக தெரிந்துகொள்ளவே. பாஜகவின் அரசியல் ஆயுதமாக செயல்படும் அமலாக்க இயக்குநரம், கேஜரிவாலின் கைப்பேசி மூலம் கட்சியின் தோ்தல் வியூகம் குறித்த விவரங்களைப் பெற விரும்புகிறது. இதன் மூலம், ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரத் திட்டங்கள், ‘இந்தியா’ கூட்டணி தலைவா்களுடனான உரையாடல்கள், மற்றும் சமூக ஊடகப் பயன்பாட்டின் உத்திகள் பற்றிய தகவல்களை அறிய முயற்சிக்கின்றனா். குறிப்பாக, ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட மக்களவைத் தோ்தல் தொடா்பான கருத்தக் கணிப்பில் என்ன முடிவு வெளிவருகிறது என்பதை பாஜக அறிய விரும்புகிறது என்றாா் அமைச்சா் அதிஷி.