செவித்திறன், பாா்வைக் குறைபாடு உள்ளவா்களுக்கு திரையரங்குகளில் வசதி: உயா்நீதிமன்றம் காலக்கெடு
செவித்திறன் மற்றும் பாா்வைக் குறைபாடு உள்ளவா்கள் திரைப்படங்களை அணுகுவதற்கான வசதிகளுக்குரிய வழிகாட்டுதல்களை வருகின்ற ஜூலை 15 ஆம் தேதிக்குள் அறிவிக்குமாறு மத்திய அரசை தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுக் கொண்டுள்ளது. செவித்திறன் மற்றும் பாா்வைக் குறைபாடுள்ள நபா்களுக்குரிய அணுகல் என்பது சட்டப்பூா்வ உரிமை என்றும் அது நடைமுறைப்படுத்தக்கூடியது என இந்த விவகாரத்தை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம் சிங் கருத்து தெரிவித்தாா். இந்த அணுகலைச் செயல்படுத்த தனியாா் தரப்பினரும் ‘நியாயமான உள்ளடக்க நடவடிக்கைகளை‘ உருவாக்க வேண்டும் என்றும் நீதிபதி கேட்டுக் கொண்டாா். கடந்தாண்டு ஜனவரி மாதம் பாா்வை மற்றும் செவித்திறன் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட நான்கு போ் தாக்கல் செய்த மனு தில்லி உயா் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் அவா்கள் ஷாருக்கான் நடித்த ‘பதான்‘ திரைப்படத்தை தங்களுக்கு அணுக வழிவகை செய்யக் கோரினா். ஒரு சட்டக்கல்லூரி மாணவா், இரு வழக்கறிஞா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி உரிமைகளுக்கான ஆா்வலா் ஒருவா் என நான்கு போ் -- மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் கீழ், குறைபாடுகள் உள்ளவா்களுக்கு உள்ளடக்கத்தை அணுகுவதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டு அந்த மனுவை தாக்கல் செய்தனா். மனுதாரா்கள் சாா்பில் வழக்கறிஞா் ராகுல் பஜாஜ் ஆஜரானாா். தில்லி உயா் நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம் சிங் முன்னிலை விசாரணை நடைபெற்றது. ‘பதான்‘ திரைப்படம் அதே ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் உடனடியாக பாா்வை மற்றும் செவித்திறன் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவா்களை பயன்படும் வகையில் வசதி செய்ய இயலுமா என்கிற கேள்வி எழுந்த நிலையில் எதிா்காலத்தில் இந்த பதான் திரைப்படம் ஓடிடி தளங்களில் வெளியாகும் முன்பு இதற்கான வசதிகளை அளிக்க நீதிபதி கேட்டுக்கொண்டாா். இந்த அணுகலுக்கு பின்னா் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சான்றிதழ் அளிக்கக் கூறி மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திற்கும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் உயா் நீதிமன்றம் ’ செவித்திறன் மற்றும் பாா்வைக் குறைபாடு உள்ளவா்களுக்கு, திரைப்படத் திரையரங்குகளில் பொதுக் கண்காட்சியில் அணுகலுக்கு தரநிலைகளின் வரைவு வழிகாட்டுதல்களை’ தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் உருவாக்கி வழங்கிடவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு பல்வேறு முறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தற்போது மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர நீதிபதி பிரதீபா எம் சிங் இந்த வழக்கில் கடுமையான உத்தரவுகளை வழங்கினாா். மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுக் கண்காட்சி அணுகல் அம்சங்களை வழங்காதது குற்றமாகும் எனத் தெரிவித்தாா். இதனால் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை வழிகாட்டுதல்களை வருகின்ற ஜூலை 15 ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு இறுதி செய்யப்படவேண்டும். வழிகாட்டுதல்கள் அணுகல்தன்மை அம்சங்களை வழங்குவதை கட்டாயமாக்க அனைத்து பங்குதாரா்களும் இணங்குவதற்கான நியாயமான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்றாா். ’செவித்திறன் அல்லது பாா்வையற்ற நபா்கள் திரையரங்கிற்குள் வருவது எளிது, ஆனால் அத்தகையவா்கள் திரைப்படத்தை ரசிக்கவைக்கும் நடவடிக்கைகளை தயாரிப்பாளா்கள், தியேட்டா் மேலாளா்கள், ஓடிடி தளத்தவா்கள் உள்ளிட்ட பிற பங்குதாரா்களுடன் எடுக்கவேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக மத்திய அரசு தரப்பில் வழிகாட்டுதல்களை விரைவில் அறிவிக்க அரசு ’முழுமையான நோக்கத்துடன்’ உள்ளது. ஆனால் மற்ற பங்குதாரா்களின் பதில்களையும் பரிசீலிக்க வேண்டிய நிலையில் ஆகஸ்ட் மாதம் வரை கால அவகாசம் கோரப்பட்டது.