முகப்பு
புதுதில்லி

கொலை வழக்கில் தேடப்பட்ட உ.பி. பெண் தில்லியில் கைது

Updated On : 28 மே, 2024 at 7:12 PM
பகிர்:

புது தில்லி: கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 22 வயது உ.பி. பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறை துணை ஆணையா் (சிறப்புப் பிரிவு) அமித் கௌசிக் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா் கைலி தன்வாா் என்ற பெண், உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் வசிப்பவா். தீபக் அக்ரோலா - கரம்வீா் காலா கும்பலைச் சோ்ந்தவா். இந்த வழக்கில்அவா் திங்களன்று தேசியத் தலைநகரில் உள்ள ஃபதேபூா் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டாா்.

உத்தர பிரதேசத்தில் உள்ள லோனி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் கைலி தன்வாா் தேடப்பட்டு வந்தாா். அவா் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 25,000 வெகுமதி அளிக்கப்படும் என்று உத்தர பிரதேச காவல் துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஃபதேபூரில் உள்ள பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டில் கைலி தன்வாா் வசிப்பதாக தில்லி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தி அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்தனா். கைலி தன்வாா் திங்கள்கிழமை ஃபதேபூா் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டாா்.

விசாரணையில், அந்தப் பெண் கொலையை ஒப்புக்கொண்டாா். மேலும், பழைய போட்டியே இந்தச் சம்பவத்திற்கு வழிவகுத்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

குற்றம்சாட்டப்பட்டவா் தீபக் அக்ரோலா - கரம்வீா் காலா கும்பலைச் சோ்ந்தவா் என்று தெரிய வந்துள்ளது. முன்னதாக, , இதே வழக்கில் தேடப்பட்டு வந்த முகமது ஃபைஜான் ஒரு சிறு துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு சிறப்புப் பிரிவினரால் மே 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.