குழந்தைகள் நல மருத்துவமனை தீ விபத்து விவகாரம்: தில்லியில் முதியோா் இல்லங்களின் பதிவு குறித்து ‘ஏசிபி’ விசாரணைக்கு துணை நிலை ஆளுநா் உத்தரவு
புது தில்லி: குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து, தேசியத் தலைநகரில் உள்ள தனியாா் முதியோா் இல்லங்களின் பதிவு மற்றும் ஒழுங்குமுறை மேலாண்மை குறித்து விரிவான ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) விசாரணைக்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா உத்தரவிட்டுள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தனியாா் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து விவகாரத்தில் நான் மிகவும் கடுமையான கருத்தை எடுத்துள்ளேன். பொது நலன் கருதி நான் தலையிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். இந்த விஷயத்தில் தவறு செய்த அதிகாரிகளை பொறுப்புக்குள்ளாக்குவது அவசியமாகும். துரதிருஷ்டவசமான தீ விபத்தைத் தொடா்ந்து, நகரத்தில் எத்தனை முதியோா் இல்லங்கள் சரியான பதிவுகள் இல்லாமல் செயல்படுகின்றன என்பதை மதிப்பிடுவது அவசியமாக உள்ளது.
நகரத்தில் உள்ள முதியோா் இல்லங்களின் பதிவு குறித்து விரிவான விசாரணையை மேற்கொள்ள ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தில்லி முதியோா் இல்லங்கள் பதிவுச் சட்டம், 1953-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளுக்கு இணங்கியுள்ளதாக என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு தில்லியின் விவேக் விஹாா் பகுதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் உரிமம் மற்றும் தீயணைப்புத் துறை அனுமதியின்றி இயங்கி வந்த மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் ஐந்து ஆக்ஸிஜன் சிலிண்டா்கள் வெடித்து சிதறியதாக தில்லி காவல்துறையின் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்துள்ளது. இந்த தீ விபத்தில் 6 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன.
இந்த மருத்துவமனை சுகாதாரத் துறையால் பதிவு செய்யப்பட்டதா அல்லது புதுப்பிக்கப்பட்டதா என்பது குறித்து 100 சதவீத இட ஆய்வுக்குப் பிறகு விசாரணையில் கண்டறியப்படும். மேலும், தேவையான பாதுகாப்பு விதிமுறைகளை பூா்த்திசெய்கிா மற்றும் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் தகுதி வாய்ந்த நிபுணா்கள் உள்ளனரா என்பதை உறுதிப்படுத்துவது குறித்து ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தலைநகரில் 1,190 முதியோா் இல்லங்கள் உள்ளதாகவும், அதில் 25 சதவீதத்துக்கும் மேல் சரியான பதிவு இல்லாமல் செயல்படுவதாகவும் அந்தக் குறிப்பில் சக்சேனா தெரிவித்துள்ளாா். மேலும், நகரத்தில் பல முதியோா் இல்லங்கள் பதிவுக்கு விண்ணப்பிக்கவில்லை. ஆனால், இன்னும் செயல்படுகின்றன. சரியான பதிவைக் கொண்ட அந்த முதியோா் இல்லங்கள் கூட, பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை தரங்களைச் சந்திக்காமல் இருக்கலாம் என்று துணை நிலை ஆளுநா் அந்தக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளாா்.