குளிா்காலத்தில் மாசு அளவைக் குறைக்கும் நோக்கில் தேசியத் தலைநகரில் பயிா்க்கழிவுகள் எரிப்பைத் தவிா்க்க ரசாயனக் கலவை (பயோ டி-கம்போசா்) தெளிக்கும் திட்டத்தை தில்லி வளா்ச்சித் துறை அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
நரேலா சட்டப்பேரவைத் தொகுதியின் பல்லா கிராமத்தில் இருந்து மருந்து தெளிக்கும் பணி தொடங்கியது. குளிா்கால மாசுபாட்டிலிருந்து விடுபட, 5,000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களில் பயோ டி-கம்போசா் தெளிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. மேலும், பயோ டி-கம்போசா் தெளிக்க 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று எக்ஸ் சமூக ஊடக தளத்தில் ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.
‘இது குளிா்காலத்தில் மாசுபாட்டைக் குறைக்க ஆம் ஆத்மி அரசின் மற்றொரு பயனுள்ள நடவடிக்கையாகும். அமைச்சா் கோபால்ராய் பயோ டி-கம்போசா் கலவை தெளிக்கும் பணியைத் தொடங்கி வைத்தாா். இந்த ஆண்டு, தில்லி அரசு குளிா்காலத்தில் மாசுபாட்டை எதிா்த்து 5,000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களில் பயோ டி-கம்போசரை தெளிக்கும்’ என்று ஆம் ஆத்மி கட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.