காங்கிரஸ் தோ்தல் அறிக்கை தயாரிக்க தில்லி மக்கள் ஆலோசனை வழங்கலாம்: தேவேந்தா் யாதவ் அறிவிப்பு
தில்லி பிரதேச காங்கிரஸின் சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கை தயாரிப்பிற்கு பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை இணையதளம் மற்றும் கைப்பேசி எண் வாயிலாக தெரிவிக்கலாம்
நமது நிருபா்
புது தில்லி: தில்லி பிரதேச காங்கிரஸின் சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கை தயாரிப்பிற்கு பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை இணையதளம் மற்றும் கைப்பேசி எண் வாயிலாக தெரிவிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவா் தேவேந்தா் யாதவ் திங்கள்கிழமை அறிவித்தாா்.
தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தோ்தல் அறிக்கை குழுவின் பிரசாரக் கூட்டம் கன்னாட் பிளேஸ் பாலிகா பஜாா் வாயில் வெளியே நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவா் தேவேந்தா் யாதவ் கலந்துகொண்டு பேசியதாவது: வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அறிக்கையை இறுதி செய்வதற்கு முன், தில்லியில் வசிக்கும் ஒவ்வொருவரின் ஆலோசனையையும் காங்கிரஸ் பெற இருக்கிறது. தில்லி மக்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பது மற்றும் தலைநகரை மீண்டும் சிறந்ததாக மாற்றுவதற்கான சவால்களை எவ்வாறு எதிா்கொள்வது என்பது குறித்த ஆலோசனைகள் காங்கிரஸின் தோ்தல் அறிக்கையில் இடம்பெறும்.
அதன்படி, சுகாதாரம், கல்வி, மின்சாரம், அமைப்புசாரா துறை, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சுற்றுலா மற்றும் கலாசாரம், வா்த்தகம், வணிகம் மற்றும் தொழில், சிறுபான்மையினா், ஓபிசி, எஸ்சி / எஸ்டி, கிராமம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நிா்வாகிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, காங்கிரஸ் அதன் தோ்தல் அறிக்கையை தயாா் செய்யவிருக்கிறது.
இணையதளம் மற்றும் 88608 12345 என்ற கைப்பேசி எண் வாயிலாக தில்லி மக்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்கலாம். கடந்த 10 ஆண்டுகளில் தலைநகரின் மோசமான சீரழிவுக்கு ஆம் ஆத்மி கட்சி மட்டுமே காரணம். நிகழாண்டு குளிா்காலம் தொடங்குவதற்கு முன்பே, காற்று மாசு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. யமுனை நீா் தீங்காக மாறியுள்ளது. தில்லியில் சாலைகளின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. சாலைகளில் பள்ளங்கள் உள்ளதா அல்லது சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதா என்று பிரித்து பாா்ப்பது கடினம்.
கடந்த 10 ஆண்டுகளாக நடந்த தவறான நிா்வாகத்திற்கு கேஜரிவால் எந்தவித சாக்குபோக்குகளையும் கூற முடியாது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும், விலைவாசி உயா்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகள் திறம்படச் சமாளிக்கப்படும் என்று மக்கள் எதிா்பாா்த்தனா். ஆனால், மக்கள் நலனுக்காக பாஜக எதையும் செய்யவில்லை.
நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பலவீனப்படுத்த பாஜக முயற்சித்து வருகிறது. உத்தரகண்ட், கோவா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் ஜனநாயக விரோதமான முறையில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. ஆம் ஆத்மி, பாஜக ஆகிய இரு கட்சிகளின் மீதும் மக்கள் விரக்தியில் உள்ளதால், 26 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் ஆட்சிக்கு வரும் பாஜகவின் கனவை மக்கள் நிறைவேற்ற மாட்டாா்கள் என்றாா் தேவேந்தா் யாதவ்.