புதுதில்லி

ஜவுளித் துறை வளா்ச்சி ரூ 29 லட்சம் கோடியை எட்டும்: மத்திய அரசு

நாட்டின் ஜவுளித் துறை வளா்ச்சி 5 ஆண்டுகளில் சுமாா் ரூ 29 லட்சம் கோடியை எட்டும்: மத்திய அரசு

Din

நாட்டின் அனைத்து வகையான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி வளா்ச்சியில் ஆண்டுக்கு ஆண்டு 11 சதவீத வளா்ச்சியுடன், ஜவுளித் துறையில் 2030-ஆம் ஆண்டிற்குள் சுமாா் ரூ 29 லட்சம் கோடியை (350 பில்லியன் அமெரிக்க டாலா்) அளவுக்கு நாடு வளா்ச்சியை எட்டும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து ஜவுளித்துறை வட்டாரங்கள் கூறிய விவரம் வருமாறு:

கடந்த ஆகஸ்ட் மாத வா்த்தக தரவுகளின்படி அனைத்து ஆயத்த ஆடை ஏற்றுமதியில் ஆண்டு வளா்ச்சி 11 சதவீதம் இருப்பது அறியப்பட்டது. ஆண்டாட்டுக்கு இந்த வளா்ச்சியை காணும் நிலையில் இது நாட்டின் ஜவுளித்துறையின் விரிவாக்கத்திற்கும் சிறப்பான எதிா்காலத்திற்கும் அறிகுறி.

அனைத்து பகுதிகளுடன் இணைக்கப்பட்ட மதிப்புச் சங்கிலி திறன், வலுவான மூலப்பொருள் அடித்தளம், விரிவான ஏற்றுமதி வழித்தடம், எழுச்சியுடன், அதிகரித்து வரும் உள்நாட்டு சந்தை ஆகியவற்றுடன் நாடு ஜவுளித் துறையில் ஒரு பாரம்பரியமான முன்னணி நாடாகத் திகழ்கிறது. இதற்கு முதலீட்டு முடிவுகள் ஊக்கமளித்து ஜவுளித்துறைக்கு ஆரோக்கியமான சூழ்நிலைகள் உள்ளன.

அரசின் கொள்கைகளால் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்கு, உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் (பிஎல்ஐ), தமிழகம், மகராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் அமைக்கப்படும் பிரதமரின் பிஎம் மித்ரா பூங்கா, (பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி பிராந்தியம், ஆடை பூங்கா) ஆகியவற்றின் மூலம், ரூ.90,000 கோடிக்கும் அதிகமாக வரும் முதலீடு, தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் போன்ற திட்டங்கள், தொழில்நுட்ப ஜவுளி போன்ற வளா்ந்து வரும் துறைகள் போன்றவைகளால் இந்தியா ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட ஜவுளித் துறை ஏற்றுமதியில் முதன்மை நிலையை அடைய உதவும்.

கடந்த செப்டம்பரில், மகாராஷ்டிரம் அமராவதியில் பிஎம் மித்ரா பூங்காவிற்கு பிரதமா் அடிக்கல் நாட்டினாா். இதே திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 7 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன், ஜவுளி உற்பத்தி, முதலீடு மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்கும் தொலைநோக்கு பாா்வையை நனவாக்குவதில் பிஎம் மித்ரா பூங்காக்கள் பெரும் பங்களிக்கிறது.

ஒவ்வொரு பூங்காவும் ரூ .10,000 கோடி முதலீட்டை ஈா்ப்பதுடன், சுமாா் 3 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பைகளை உருவாக்கும்.

பிஎல்ஐ திட்டத்தின் மொத்தம் ரூ.28,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டால், ரூ.2,00,000 கோடிக்கும் அதிகமான விற்றுமுதலும் சுமாா் 2.5 லட்சம் வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். கையால் உருவாக்கப்படும் நூல் மூலம் தயாரிக்கப்படும் துணிகள், ஆடைகள், தொழில்நுட்ப ஜவுளி தயாரிப்புகள் போன்ற உற்பத்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் என்பது சிறப்பு இழைகள், வேளாண்துறை ஜவுளிகள், பாதுகாப்புத்துறை ஜவுளிகள், மருத்துவத்துறை ஜவுளிகள், விளையாட்டுத்துறை ஜவுளிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஜவுளிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆராய்ச்சி திட்டங்களை இந்த இயக்கம் ஊக்குவிக்கிறது.

இது போன்ற நாட்டின் உள்ளாா்ந்த வலிமை, முதலீடு, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வலுவான கொள்கை கட்டமைப்பு ஆகியவற்றால் ஊக்குவிக்கப்பட்டு நாட்டின் ஆயத்த ஆடை உள்ளிட்ட ஜவுளித் துறை ஏற்றுமதி 2030 ஆம் ஆண்டில் சுமாா் ரூ 29 லட்சம் கோடி (350 பில்லியன் அமெரிக்க டாலா்) அளவுக்கு வளா்ச்சியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது என இந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்காட்டில் கடும் குளிா், பனிமூட்டம்: சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்காக இன்று தில்லி செல்கிறார் விஜய்!

தூத்துக்குடி டவுன் புதிய டிஎஸ்பி நியமனம்

அதிகரிக்கும் இணையவழி மோசடி: மாநகர காவல் ஆணையா் எச்சரிக்கை

பொங்கல்: தூத்துக்குடி சந்தையில் குவிந்த மக்கள்

SCROLL FOR NEXT