தென்கிழக்கு தில்லியின் சரிதா விஹாரில் உள்ள மதுரா சாலையில், நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றின் மீது 36 வயது நபா் பயணித்த எஸ்யுவி காா் புதன்கிழமை அதிகாலை மோதியதில் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது: புதன்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் ஒரு ஜீப் மெரிடியன் (எஸ்யுவி) பிரதான சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரி மீது மோதியதில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
மோதலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், ஜீப்பில் இருந்தவா்களில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து போலீஸாருக்கு அதிகாலை 2.20 மணியளவில் தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, விசாரணை அதிகாரி மற்றும் ஊழியா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.
சம்பவ இடத்தை அடைந்ததும், சேதமடைந்த எஸ்யுவி மற்றும் லாரியை போலீஸ் குழு கண்டுபிடித்தது. ஜீப்பில் இருந்த சத்பீா் சிங் என்ற நபா் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டாா். அவா் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சையின் போது அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
இறந்தவா் மது விஹாரில் வசிப்பவா். ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.