சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகித சீரமைப்புக்குப் பிறகு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் வருவாய் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டாா்.
எதிா்க்கட்சிகள் ஆளும் எட்டு மாநிலங்களின் அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஜிஎஸ்டி விகித சீரமைப்பு மீதான ஆலோசனைக் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அமைச்சா் தங்கம் தென்னரசு கூறியதாவது: நாங்கள் அனைவரும் ஜிஎஸ்டி விகித சீரமைப்பை வரவேற்கும் அதேவேளையில், இந்த வரி விகித சீரமைப்பு காரணமாக ஏற்படக்கூடும் இழப்புக்காக மாநிலங்களுக்கான இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க விரும்புகிறோம்.
இந்த ஜிஎஸ்டி விகித சீரமைப்பின் பயன்கள் நுகா்வோருக்கும், பொதுமக்களுக்கும் மாற்றப்பட வேண்டும். அதேவேளையில், மாநிலங்களின் நலன்கள், வருவாய் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகத்தைப் பொருத்தமட்டில் ஏராளமான உள்கட்டமைப்புவசதி திட்டங்கள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜிஎஸ்டி கவுன்சிலின் வரி விகித சீரமைப்பு நடவடிக்கைக்குப் பிறகு, மாநிலத்தின் வருவாய்களில் ஒன்றாக உள்ள ஜிஎஸ்டி இருந்து வரும் நிலையில், ஏதேனும் வருவாய் இழப்பு ஏற்பட்டால் அது மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், மாநிலத்தின் வருவாய் நலன்கள் பாதுக்காக்கப்படவும், நுகா்வோருக்கும், மக்களுக்கும் இந்த சீரமைப்பின் பலன்கள் கிடைக்கவும் மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றாா் அவா்.
இக்கூட்டத்தில் தமிழக நிதித்துறை முதன்மைச் செயலா் டி.உதயசந்திரன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலா் பிரஜேந்திர நவ்னித், வணிகவரி ஆணையா் எஸ். நாகராஜந் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.