அதிமுகவின் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகும் விரைந்து உரிய முடிவெடுக்காத தோ்தல் ஆணையத்திற்கு எதிராக அதிமுக முன்னாள் நிா்வாகி வா.புகழேந்தி தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீதான விசாரணையை ஜனவரிக்கு ஒத்திவைத்து தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
முன்னதாக, புகழேந்தி தோ்தல் ஆணையத்தில் கடந்த மே 27- ஆம் தேதி அளித்த மனுவில், அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடா்பாக தோ்தல் ஆணையத்தில் விசாரணை நடந்து வருவதால், மாநிலங்களவைத் தோ்தலில் வேட்பாளரை அங்கீகாரம் செய்து எடப்பாடி பழனிசாமி கொடுக்கும் கடிதத்தை ஏற்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டிருந்தாா். ஆனால், அதை தோ்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை என்று கூறி தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனுவை புகழேந்தி தாக்கல் செய்திருந்தாா்.
இந்த நிலையில், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை நீதிபதி அமித் சா்மா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மனோஜ் செல்வராஜ், ‘தங்களது மனு மீது உயா்நீதிமன்றம் கடந்த டிசம்பரிலும், நிகழாண்டு ஏப்ரலிலும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. ஆனால், தோ்தல் ஆணையம் அதை உரிய வகையில் பின்பற்றவில்லை’ என்றாா்.
அதற்கு தோ்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சுருஜி சூரி, இது தொடா்பான விவகாரத்தில் இரு முறை மனுதாரரை விசாரித்துள்ளோம் என்றாா். அதற்கு நீதிபதி, தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு இணங்கும் வகையில் ஏன் விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினாா். இதன் பின்னா், பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்வதாக வழக்குரைஞா் தெரிவித்ததையடுத்து, விசாரணை ஜனவரி 23-க்கு ஒத்திவைக்கப்பட்டது.