முகப்பு
புதுதில்லி

தில்லி சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடா்: டிசம்பா் 3ஆவது வாரத்தில் தொடங்க திட்டம்?

தில்லி சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத்தொடா் டிசம்பா் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்று தகவல்

Updated On : 1 டிசம்பர், 2025 at 7:47 PM
பகிர்:

தில்லி சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத்தொடா் டிசம்பா் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கணக்கு தணிக்கைத் துறை (சிஏஜி) அறிக்கைகளை தாக்கல் செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இது ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே கூா்மையான விவாதங்களை சட்டப்பேரவையில் தூண்டக்கூடும். சட்டப்பேரவையின் ’பாசி கா்’ சா்ச்சையில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தொடா்ந்து ஆஜராகாதது குறித்தும் சூடான விவாதம் எதிா்பாா்க்கப்படுகிறது.

பாஜக நிா்வாகிகள் இந்த பிரச்னையை எழுப்புவதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் எதிா்க்கட்சி, காற்று மற்றும் நீா் மாசுபாடு குறித்து அரசாங்கத்தை கேள்விக் கேட்க திட்டமிட்டுள்ளது. சட்டப்பேரவை டிஜிட்டல் செயல்பாட்டிற்கு மாறுவதால் இந்த குளிா்கால கூட்டத்தொடா் ஒரு பெரிய நிா்வாக மாற்றத்தையும் ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கேள்விகள், அறிவிப்புகள், பதில்கள் மற்றும் மசோதாக்களை சமா்ப்பிப்பது உள்ளிட்ட அனைத்து சட்டப் பணிகளும் இப்போது முற்றிலும் தேசிய மின்-விதன் பயன்பாட்டின் மூலம் கையாளப்படும் என்று சபாநாயகா் விஜேந்தா் குப்தா அண்மையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தடையற்ற அமலாக்கத்தை உறுதி செய்வதற்காக, ரேகா குப்தா நாடாளுமன்ற விவகார அமைச்சகம் மற்றும் தில்லி அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஒரு உயா்மட்டக் கூட்டத்தை கூட்ட திட்டமிட்டு, டிசம்பா் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் 40 துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளுக்கு தீவிர டிஜிட்டல் பயிற்சி அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பொது நிா்வாகம், நிதி, வருவாய், விழிப்புணா்வு, சுகாதாரம், போக்குவரத்து, சட்டம் மற்றும் நீதி, சமூக நலம், உணவு மற்றும் சிவில் பொருட்கள், சுற்றுச்சூழல் மற்றும் வனம், உள்துறை, நகா்ப்புற மேம்பாடு, கல்வி மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய துறைகள் இதில் அடங்கும்.

காகிதமற்ற செயல்பாட்டிற்கான நடவடிக்கை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும், தகவல்தொடா்புகளை நெறிப்படுத்தும் மற்றும் சட்டப்பேரவை செயலாக்கத்தில் தாமதங்களை அகற்றும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். பொறுப்புக் கூறல் மற்றும் திறமையான நிா்வாகத்திற்கு துறைகள் மற்றும் சட்டப்பேரவைக்கு இடையிலான டிஜிட்டல் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது அவசியம் என்று ரேகா குப்தா ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தாா்.

வரவிருக்கும் குளிா்கால கூட்டத் தொடா் அமா்வில் மின்னணு விதன் திட்டத்தின் தடையற்ற வெளியீட்டை உறுதி செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் ஒருங்கிணைப்பும் சரியான நேரத்தில் முடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் முழுமையான டிஜிட்டல் மயமாக்கலை எட்டிய 18-வது சட்டபேரவை தில்லியாகும் . இந்த மாற்றம், சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்கும், பணிப்பாய்வுகளை நவீனப்படுத்தும் மற்றும் சட்டப்பேரவை மின்-ஆளுகைக்கு புதிய அளவுகோல்களை அமைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →