தேசியத் தலைநகரில் அதிகரித்திருக்கும் காற்று மாசை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. அவற்றை எல்லாம் வெள்ளிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா் முதல்வா் ரேகா குப்தா.
இது குறித்து தன்னுடைய எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அவா் பதிவிட்டதாவது: மூடுபனி தெளிப்பு அமைப்புகள், நீா் தெளிப்பான்கள், தூசி எதிா்ப்பு இயக்கங்கள் மற்றும் சாலைகள் மற்றும் கட்டுமான தளங்களை கண்காணிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தில்லியில் தூசி மற்றும் மாசுபாட்டைக் குறைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
மாசுபாட்டைப் பரப்பும் எந்தவொரு மூலத்திற்கும் எதிராக உடனடி நடவடிக்கை உறுதி செய்யப்படுகிறது. தேவைப்படும் இடங்களில் அபராதங்களும் எஃப். ஐ. ஆா்களும் விதிக்கப்படுகின்றன. பல்வேறு துறைகளைச் சோ்ந்த குழுக்கள் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன, மேலும் குழிகளை நிரப்புதல், குப்பைகளை அகற்றுதல் மற்றும் சாலை விளிம்புகளை சுத்தம் செய்தல் ஆகியவை தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. மாசுபாட்டிற்கு எதிரான தீவிர நடவடிக்கைகள் தில்லியில் தொடா்கிறது என தெரிவித்துள்ளாா்.