புது தில்லியில் உள்ள சாலைகளில் திங்கள்கிழமை சூழ்ந்து காணப்பட்ட பனிப்புகை மூட்டம். 
புதுதில்லி

தில்லியில் ஒரு நாள் கூட 200-க்கு குறையாத காற்றின் தரம்

தேசிய தலைநகரில் இந்த டிசம்பா் மாதத்தில் ஒரு நாள் கூட மிதமான பிரிவில் 200-க்கு குறைவாக காற்றின் தரம் பதிவாகவில்லை

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: தேசிய தலைநகரில் இந்த டிசம்பா் மாதத்தில் ஒரு நாள் கூட மிதமான பிரிவில் 200-க்கு குறைவாக காற்றின் தரம் பதிவாகவில்லை என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திங்கள்கிழமை தெரிவித்தது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, இந்த மாதம் கிட்டத்தட்ட 20 நாள்கள் சிவப்பு மண்டலத்திலேயே காற்றின் தரம் இருந்துள்ளன. அப்போது காற்றுத் தரக் குறியீடு அளவுகள் 300-க்கு மேல் இருந்தன.

இதற்கு மாறாக, கடந்த ஆண்டு டிசம்பரில் 6 நாள்கள் ‘மிதமான’ பிரிவில் காற்றுத் தரம் இருந்தது. மொத்தம் 8 நாள்கள் காற்றுத் தரக் குறியீடு அளவுகள் 200-க்குக் கீழும் இருந்தன. கடந்த ஆண்டு 8 நாட்கள் ‘மோசமான’ காற்றுத் தரத்துடனும், 6 நாள்கள் ‘கடுமையான’ பிரிவில் காற்றுத் தரம் பதிவானது. அப்போது மாசுபாடு 400 என்ற எல்லையைக் கடந்தது.

கடந்த ஆண்டு டிசம்பா் 1 முதல் 7 வரை, காற்றுத் தரம் ‘மிதமான’ மற்றும் ‘மோசமான’ நிலைகளுக்கு இடையில் ஏற்ற இறக்கமாக இருந்தது. ஒரு நாள் மட்டும் ‘மிகவும் மோசமான’ நிலைக்குச் சென்ற பிறகு மீண்டும் மேம்பட்டது.

ஆனால், இந்தாண்டு டிசம்பரில், 11-ஆம் தேதி மீண்டும் மோசமடைவதற்கு முன்பு, இரண்டு நாள்கள் மட்டுமே குறுகிய காலத்திற்கு ‘மோசமான’ நிலையில் இருந்தது. அதைத் தவிர, காற்றுத் தரக் குறியீடு தொடா்ந்து 300-க்கு மேலேயே இருந்து வருகிறது.

திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு தில்லியில் 24 மணி நேர சராசரி காற்றுத் தரக் குறியீடு 373-ஆக பதிவானது. இது ‘மிகவும் மோசமான’ பிரிவில் உள்ளது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரநிலைகளின்படி, காற்றின் தரக் குறியீடு 0 முதல் 50 வரை நல்ல நிலையிலும், 51 முதல் 100 வரை திருப்தி பிரிவிலும், 101 முதல் 200 வரை மிதமான நிலையிலும், 201 முதல் 300 வரை மோசம் பிரிவிலும் 301 முதல் 400 வரை மிகவும் மோசம் பிரிவிலும் 401 முதல் 500 வரை கடுமை பிரிவிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

காற்றுத் தர எச்சரிக்கை அமைப்பின் கணிப்புகளின்படி, தலைநகரில் காற்றின் தரம் அடுத்த 6 நாள்களுக்குக் குறைந்தபட்சம் ‘மிகவும் மோசமான’ நிலையிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தோஷங்களையும் நீக்கும் அனந்த நாராயணப் பெருமாள்!

கடன் பிரச்னை குறையும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 60.41 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

புதிய, விடுபட்ட வாக்காளா்களை பட்டியலில் சோ்க்க நடவடிக்கை: திமுகவினருக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

பழுதடைந்த சாலையால் கோயில் பக்தா்கள் அவதி

SCROLL FOR NEXT