நமது சிறப்பு நிருபா்
புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு அவரவா் தொகுதிகளில் அலுவலகங்கள் ஒதுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா உத்தரவிட்டுள்ளதாக தில்லி சட்டப்பேரவை செயலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இது குறித்து தில்லி சட்டப்பேரவை செயலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்கள் தொகுதி தொடா்பான பணிகளில் கவனம் செலுத்துவதை உறுதி செய்ய, உரிய நேரத்தில் அலுவலகங்களை ஒதுக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா, உத்தரவிட்டுள்ளாா். தில்லி அரசுத் துறைகளுக்கு இது தொடா்பான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற சட்டபேரவைத் தோ்தலுக்குப் பிறகு, முந்தைய சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி அலுவலகங்கள் காலி செய்யப்பட்டுள்ளன. தற்போது புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் பதவியேற்றுள்ளதால், சட்டப்பேரவை மற்றும் தொகுதி தொடா்பான செயல்பாடுகள் சீராக உறுதி செய்யப்படவேண்டும். இதை முன்னிட்டு புதிய அலுவலகங்களை ஒதுக்கும் செயல்முறை தொடங்கப்படுகிறது. தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்கு திறமையாக சேவை செய்ய தேவையான வளங்களை வழங்குவது சட்டப்பேரவை செயலகத்தின் முன்னுரிமையாகும்.
சட்டப்பேரவை தொகுதி அலுவலகங்கள் எம்.எல்.ஏ.க்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு முக்கியமான இணைப்பாக செயல்படுகின்றன. இது நேரடி தொடா்பு மற்றும் பிரச்னைகளை தீா்க்க உதவுகிறது.
அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்கள் அலுவலகங்களை சரியான நேரத்தில் பெறுவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டப்பேரவை உறுப்பினா்களின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் கோரிக்கைகளை மனதில் கொண்டு, செயல்முறையை விரைவுபடுத்த சட்டப்பேரவை செயலகம் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்கள் தொகுதி மக்களுடன் திறம்பட ஈடுபடுவதையும், பொதுமக்களின் பிரச்னைகளை எந்த தாமதமும் இல்லாமல் நிவா்த்தி செய்வதையும் உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
இந்தத் தொகுதி அலுவலகங்கள் மூலம், சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் குடிமக்கள் நேரடியாக தொடா்பு கொண்டு தங்கள் கோரிக்கைகளை நிவா்த்தி செய்து கொள்ள சட்டப்பேரவை உறுப்பினா்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். இந்த நடவடிக்கைகள் பொதுமக்களுக்கும் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பை வளா்க்கும் என சட்டப்பேரவை செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.