தேசியத் தலைநகா் வலயம் குருகிராமில் 14-ஆவது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து விழுந்ததாகக் கூறப்படும் ஜப்பானிய பெண் ஒருவா் இறந்து கிடந்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து குருகிராம் செக்டாா் 53 காவல் நிலைய பொறுப்பு அதிகாரி இன்ஸ்பெக்டா் சந்தீப் குமாா் கூறியதாவது:
அந்தப் பெண் ஜப்பானைச் சோ்ந்த மடோகோ தமானோ (34) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது கணவருடன் குருகிராமிற்கு வந்திருந்தாா். அவா் தனது கணவா் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இங்கு ஒரு சமூகத்தில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஒரு பெண்ணின் இரத்தத்தில் நனைந்த உடல் தரையில் கிடப்பது குறித்து போலீஸாருக்கு தகவல் வந்த போது. இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் குறித்து தூதரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.