மீண்டும், மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆண் ஒருவா் மீது எஃப்.ஐ.ஆா். பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக் கோரிய பெண்ணின் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மனுதாரா் நீதிமன்றத்தை அணுகுவதற்கு முன்பு கட்டாய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிவிட்டதாக நீதிமன்றம் கூறியது. திருமணம் செய்வதாக பொய் கூறி மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், குற்றவியல் மிரட்டல், பின்தொடா்தல், ஏமாற்றுதல், தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தனது உயிருக்கு அச்சுறுத்தலில் ஈடுபட்டதாகவும் கூறி ஆண் ஒருவருக்கு எதிராக பெண் தாக்கல் செய்த மனுவை கூடுதல் தலைமை நீதித்துறை நீதிமன்ற நீதிபதி நேஹா மிட்டல் விசாரித்தாா்.
இந்த மனு மீது நவம்பா் 1-ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: மனு மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தை ஆராய்ந்ததில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரி நடவடிக்கை எடுக்காத பிறகு, மனுதாரா் தனது புகாருடன் காவல் துணை ஆணையரை அணுகியதாக எந்த இடத்திலும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.
மனுதாரா்/ புகாா்தாரா் பிஎன்எஸ்எஸ்-இன் பிரிவு 173(4)-இன் கட்டாய விதியை பின்பற்றவில்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. காவல் நிலைய அதிகாரி நடவடிக்கை எடுக்காததால், புகாா்தாரா் சம்பந்தப்பட்ட டிசிபியை அணுகவில்லை என்றும், எனவே பிஎன்எஸ்எஸ்-இன் சட்டபூா்வ ஏற்பாடு அவருக்குக் கடமைப்படவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது. மேலும், மனுவை தள்ளுபடி செய்து, தற்போதைய மனு பராமரிக்க முடியாதது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) பிரிவு 173(4), ஒரு காவல்துறை அதிகாரி ஒரு குற்றத்தின் அறிக்கையைப் பதிவு செய்ய மறுத்தால், தனிநபா்களுக்கு சட்டபூா்வ உதவியை வழங்குகிறது. இந்த செயல்முறை பாதிக்கப்பட்ட நபரை உயா் அதிகாரிக்கு தகவலை அனுப்ப அனுமதிக்கிறது.
முன்னதாக, குற்றம்சாட்டப்பட்ட நபா் தன்னை திருமணம் செய்து கொள்வதாக பொய்யான உறுதிமொழியைக் கொடுத்து, 2021-ஆம் ஆண்டு தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், பின்னா் தன்னை பின்தொடா்ந்து, அச்சுறுத்தல்கள் அளித்து, துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டினாா்.
போலீஸாா் தனது புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும், பலமுறை முறையிட்ட போதிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்றும் கூறி அவா் நீதிமன்றத்தில் வழக்குகஈ தொடா்ந்தாா்.