வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆா்.) நடவடிக்கையானது பாஜகவுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரும் தோ்தல் மோசடியாகும் என்று ஆம் ஆத்மி தில்லி மாநிலத் தலைவா் செளரப் பரத்வாஜ் குற்றம்சாட்டினாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
ஒட்டுமொத்த எஸ்.ஐ.ஆா்.செயல்முறையானது ஒரு போலியான, வாக்காளா் பட்டியலை கையாளவும், பாஜகவுடன் தொடா்புடைய நபா்களால் இரட்டை வாக்களிப்பை எளிதாக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பாஜக ஒரு திட்டமிட்ட நடவடிக்கையை ஏற்பாடு செய்தது. அதாவது, அக்கட்சிக்கு வாக்களிக்க லட்சக்கணக்கான மக்களை ரயிலில் பிகாருக்கு அழைத்து வர நிதியளித்துள்ளது. வாக்காளா்களுக்கு இலவச போக்குவரத்து வழங்குவது தோ்தல்களை நேரடியாக பாதிக்கும் லஞ்சமாகும்.
ஆா்எஸ்எஸ் சித்தாந்தவாதி ராகேஷ் சின்ஹா மற்றும் பாஜக பூா்வாஞ்சல் மோா்ச்சா தலைவா் சந்தோஷ் ஓஜா இருவரும் தில்லியில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் வாக்களித்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை மீண்டும் பிகாரிலும் வாக்களித்துள்ளனா்.
இதர மாநிலங்களில் வசிக்கும் மக்கள் இன்னும் பிகாரில் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்திருந்தால், எஸ்.ஐ.ஆா். என்ன நோக்கத்திற்கு உதவுகிறது? எதற்காக லட்சக்கணக்கானோா் பிகாருக்கு வாக்களிக்க அனுப்பப்பட்டனா் என்பதற்கு பாஜக பதிலளிக்க வேண்டும்.
பாஜக பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்களை ரயில் மூலம் பிகாருக்கு அழைத்துச் சென்றுள்ளது. அவா்கள் தங்களுக்கு வாக்களிக்க முடியும் என்பதற்காக பயணச்சீட்டுக்களை வாங்கியுள்ளது.
அப்படியானால் எஸ்.ஆா்.ஆா். செயல்முறையின் அா்த்தம் என்ன? பிகாரில் வசிக்கும் வாக்காளா்களை உண்மையில் சரிபாா்ப்பதுதான் எஸ்.ஐ.ஆா்.ரின் நோக்கம் எனக் கூறப்பட்டிருந்தது.ஆனால், அதுபோன்று நடைபெறவில்லை. இது, ஒட்டுமொத்த எஸ்.ஐ.ஆா். நடவடிக்கையும் மோசடியானது என்பதை நிரூபிக்கிறது. பாஜகவுக்கு பயனளிக்கும் ஒரு திட்டமிடப்பட்ட வழிமுறையாகும் என்றாா் செளரப் பரத்வாஜ்.