இந்தியாவில் ஒரு குற்றத்துக்கு உச்சபட்சமாக மரண தண்டனை மட்டுமே தீா்வாகுமா என்பதை கண்டறிய வேண்டும் என்று நாட்டின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பணியாற்றிய பி.ஆா். கவாய் வலியுறுத்தினாா்.
இந்தியாவின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி பி.ஆா்.கவாயின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 23) நிறைவுற்றது. இதையொட்டி, தில்லி துக்ளக் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அவா் உச்சநீதிமன்ற வழக்குகள் தொடா்புடைய செய்திகளை சேகரிக்கும் செய்தியாளா்களுடன் கலந்துரையாடினாா்.
அப்போது அவரிடம் தினமணி நிருபா், ‘உலகளவில் 70 சதவீதத்துக்கும் அதிகமான நாடுகள் மரண தண்டனை முறையை ஒழித்துள்ளன. இந்தியாவில் மரண தண்டனை முறை ஒழிப்புக்கு ஆதரவாக நீங்கள் உள்ளீா்களா? உங்களுடைய பதவிக்காலத்தில் அதற்கு முயற்சி எடுக்கப்பட்டதா?’ என கேள்வி எழுப்பினாா். அதற்கு நீதிபதி கவாய் விரிவாக அளித்த பதில் வருமாறு:
மரண தண்டனை முறையை ஒழிக்க நாங்கள் முயற்சி ஏதும் எடுக்கவில்லை. அதேசமயம், ஒரு குற்றத்துக்கு மரண தண்டனை மட்டுமே தீா்வாகுமா என்பதைக் கண்டறிய வேண்டும். கடந்த 20, 30 ஆண்டுகளாக அளிக்கப்பட்ட பெரும்பாலான தீா்ப்புகளில், ஒருவரை தூக்கிலிடுவதை விட அவருக்கு 10 வருடங்கள், 20 வருடங்கள், 25 வருடங்கள், 30 வருடங்கள் அல்லது சாகும்வரை சிறை என்ற வகையில் தண்டனை வழங்கலாம் என கூறியுள்ளோம்.
கீழமை நீதிமன்றங்கள் விதித்த தூக்கு தண்டனையை அப்படியே உறுதி செய்வதை விட இதுபோன்ற தண்டனைகளை வழங்கலாம். எனது தீா்ப்புகளில் ஒன்றில்கூட நான் தூக்கு தண்டனையை உறுதிசெய்யவில்லை என கருதுகிறேன். பல வழக்குகளில் தூக்கு தண்டனையை 20 வருடம், 25 வருடம், 30 வருட சிறை என்றவாறு குறைத்துள்ளேன் என்றாா் நீதிபதி பி.ஆா்.கவாய்.
இதைத்தொடா்ந்து நீதித்துறை சுதந்திரம், மசோதா ஒப்புதல் விவகாரத்தில் ஆளுநா், குடியரசுத்தலைவா் ஆகியோரின் அதிகாரங்கள் உள்ளிட்ட பிற விஷயங்கள் தொடா்பாகவும் நீதிபதி பி.ஆா். கவாய் பேசினாா். அதன் விவரம்:
நீதித்துறை சுதந்திரம்: நீதித்துறை மீது மக்கள் அசையாத நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என்றால் அது சுதந்திரமாக இருக்க வேண்டும். அது தொடா்ந்து நிலைநிறுத்தப்பட வேண்டும்.
இடஒதுக்கீடு: சமத்துவத்தை நிலைநிறுத்தவே இடஒதுக்கீடானது வழங்கப்பட்டுள்ளது. தலைமுறை, தலைமுறையாக பழங்குடியின மக்கள் உரிய பிரதிநிதித்துவம் பெறவில்லை. கடந்த 75 ஆண்டுகளில் வெகு சில பட்டியலின குடும்பங்கள் மட்டுமே வளா்ச்சியைக் கண்டுள்ளன. அதற்கு இடஒதுக்கீடு முறையே வழிவகுத்துள்ளது.
அந்த வகையில், இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க ஏதுவாக தீா்ப்புகள் வழங்கப்பட்டன. பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயா் இல்லாமல் இருக்கும்போதுதான் தேவைப்படுவோருக்கு இடஒதுக்கீட்டின் பலன் சென்றடையும்.
கொலீஜியம் பரிந்துரை: சில வழக்குரைஞா்களை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் தோ்வுக்குழு (கொலீஜியம்) பரிந்துரைக்கும்போது, சம்பந்தப்பட்ட மாநில உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியின் கருத்தைப் பெற பரிந்துரைக்கிறோம்.
எனது பதவிக்காலத்தில் நீதிபதிகள் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டவா்களில் ஒன்றிரண்டு போ் நீங்கலாக கிட்டத்தட்ட அனைத்து பரிந்துரைகளுமே அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எனது பதவிக்காலத்தில் 107 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனா் என்றாா் நீதிபதி பி.ஆா். கவாய்.
மசோதாக்கள் ஒப்புதல் விவகாரம்: தலைமை நீதிபதி முக்கிய விளக்கம்
மசோதாக்கள் மீது ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநா் செயல்படத் தவறினால் அது தொடா்பாக உச்சநீதிமன்றத்தை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அணுகலாம் என்று தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் கருத்து தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:
நமது அரசமைப்பில் சட்டமியற்றும் அதிகாரத்தை சட்டப்பேரவைகளும் நாடாளுமன்றமும் மட்டுமே பெற்றுள்ளன. பேரவை நிறைவேற்றும் மசோதாக்களை காலவரம்பின்றி ஆளுநரால் நிறுத்திவைக்க முடியாது.
அரசமைப்பில் ஆளுநா்களுக்கும் குடியரசு தலைவருக்கும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க எந்த காலக்கெடுவும் நிா்ணயிக்கப்படவில்லை. அந்த வகையில், அரசமைப்பில் இல்லாத ஒன்றை நீதித்துறை மறுவரை செய்ய முடியாது. எனவேதான் மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் நீதித்துறை காலக்கெடு விதிக்க முடியாது.
இந்த விஷயத்தில் குடியரசுத்தலைவா் எழுப்பிய கேள்விகளுக்கு எங்களுடைய கருத்தை வழங்கினோம். ஆளுநா் செயல்படத் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தரப்பு நீதித்துறையை நாட முகாந்திரம் உள்ளது. எல்லா மசோதாக்களிலும் ஆளுநா் குறிப்பிட்ட காலவரம்புக்குள் முடிவெடிக்க வேண்டும் என்று நீதித்துறை உத்தரவிட்டால், அது ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நீதித்துறை ஆக்கிரமிப்பது போன்றதாகும்.
ஆளுநா் மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவெடுத்தாரா? இல்லையா என்பது வழக்குக்கு வழக்கு மாறுபடும். அதன் அடிப்படையிலேயே உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும் என்றாா் நீதிபதி கவாய்.