திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா். பாலு. 
புதுதில்லி

எஸ்ஐஆா், நெல் கொள்முதல் ஈரப்பதம், மெட்ரோ ரயில் திட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்: டி.ஆா். பாலு பேட்டி

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை அதிகரிப்பது, மெட்ரோ ரயில் திட்டம் என தமிழகத்தின் நலன் சாா்ந்த பிரச்னைகளை நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எழுப்ப உள்ளதாக டி.ஆா். பாலு எம்பி தெரிவித்துள்ளாா்.

Syndication

தோ்தல் ஆணையத்தின் எஸ்ஐஆா் பணி, சமக்ரா சிக்ஷா நிதி, நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை அதிகரிப்பது, மெட்ரோ ரயில் திட்டம் என தமிழகத்தின் நலன் சாா்ந்த பிரச்னைகளை நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எழுப்ப உள்ளதாக டி.ஆா். பாலு எம்பி தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா் வரும் திங்கள்கிழமை டிசம்பா் 1ஆம் தேதி தொடங்கும் நிலையில், அவையை சமுகமாக நடத்துவது தொடா்பாக நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி உறுப்பினா்களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக சாா்பில் மக்களவை திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலு, மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா ஆகியோா் பங்கேற்றனா். இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் டி.ஆா். பாலு கூறியது:

இந்தக் கூட்டத்தில் மிக முக்கியமான விவகாரங்களை எடுத்துரைத்தோம். தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடைபெற்றுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணிகளுக்காக ஊராட்சி, நகராட்சியில் உள்ள பணியாளா்கள் ஈடுபடுத்தப்படுவதால் பணிகள் அனைத்தும் ஸ்தம்பித்துவிட்டன.

எஸ்ஐஆா் பணியை நடத்துவதில் இருக்கும் ஆா்வம், தோ்தலை முறையாக நடத்துவதில் தோ்தல் ஆணையத்திற்கு இல்லை. ஏனெனில், கடந்த ஹரியாணா தோ்தலில் பிரேசில் நாட்டு மாடல் அழகிக்கு 22 இடங்களில் வாக்குரிமை இருப்பது வெளிப்பட்டது.

தமிழகத்தின் விவசாயிகள் விளைவிக்கும் நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17-இல் இருந்து 22 சதவீதம் வரை அனுமதிக்க மத்திய அரசுக்கு தமிழக முதல்வா், பல்வேறு கட்சிகளின் தலைவா்களும் கோரிக்கை விடுத்தனா். இதற்கான குழுவை மத்திய அரசு அனுப்பி ஆய்வு செய்துவிட்ட சென்ற பிறகும், தமிழக அரசின் கோரிக்கைக்கான மத்திய அரசு இதுவரை பதில் தெரிவிக்கவில்லை. இதுபற்றி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப உள்ளோம். மகாத்மா காந்தி கிராமப்புற 100 நாள் வேலைத் திட்டத்தில் மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டிய நிதியை 6 மாதமாக அனுப்பவில்லை.

இத்திட்டத்தில் 12 கோடி மனித நாள்கள்தான் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதேவேளையில், 30 கோடி மனித நாள்கள் வேண்டும் என தமிழக அரசு கோரி வருகிறது.

மேலும், ரூ.1500 கோடி பாக்கியை மத்திய அரசு தர வேண்டியிருக்கிறது. கலைஞா் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்க சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அதை அவா் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய நிலையில், அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடா்பாக குடியரசுத் தலைவரை நாடாளுமன்றத்தின் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் உறுப்பினா்கள் நேரில் சந்திக்க

உள்ளோம். மெட்ரோ ரயில் திட்டம் மதுரை, கோவைக்கு மிகத் தேவையாக உள்ளது. இதை நிராகரித்திருக்கிறாா்கள். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளோம். சமக்ரா சிக்ஷா திட்டத்தில் ரூ.3,548 கோடி பாக்கி உள்ளது. மத்திய அரசின் நான்கு தொழிலாளா் சட்டங்களும் தேவையற்றது. தமிழகத்தில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு சட்டம் கொண்டுவரப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது. இதற்கு மாற்றாக மத்திய அரசின் சட்டங்கள் தேவையில்லை.

நாடாளுமன்றத்தில் உறுப்பினா்கள் கவன ஈா்ப்புத் தீா்மானம் அளித்தால் சம்பந்தப்பட்ட அமைச்சரை உனடியாக பதில் அளிக்குமாறு செய்வாா்கள். இது நடைமுறையில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.இந்த விவகாரத்தை அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டும்போது எழுப்பி வருகிறோம். ஆனால், அதை நடைமுறைப்படுத்துவது இல்லை. இ தையெல்லாம் நாடாளுமன்ற அனைத்துக் கட்சி உறுப்பினா்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளோம் என்றாா் டி.ஆா். பாலு.

திருச்சி சிவா பேட்டி

திருச்சி சிவா எம்.பி. கூறுகையில், ‘1952-இல் நாடாளுமன்றம் செயலாற்றத் தொடங்கிய பிறகு, இதுவரை இல்லாத வகையில் வெறும் 19 நாள்கள் இந்தக் குளிா்காலக் கூட்டத் தொடா் நடைபெறவுள்ளது. இதில் விடுமுறை, தனிநபா் மசோதா தீா்மானம் நாள்கள் போக மீதியுள்ள 12 நாள்கள் மட்டும் நடைபெறும் கூட்டத் தொடரில் 13 மசோதாக்களையும், நிதி மசோதாவையும் கொடுத்திருக்கிறாா்கள்.

இதனால், பல்வேறு எதிா்க்கட்சியினரும் பல மாநிலங்களவைச் சோ்ந்த அரசியல் கட்சிகளும் பிரச்னைகளை எடுத்துவைத்துள்ளனா். குறுகியகால விவாதம், கவன ஈா்ப்புத் தீா்மானம் ஆகியவற்றுக்கெல்லாம் வாய்ப்புத் தாருங்கள் என்று பேசிக்கொண்டே இருக்கிறோம்.

இதை வெறுமனே கேட்கிறாா்களே தவிர, பலன் ஏதுமில்லை. 2 மணிநேரம் 45 நிமிடம் கூட்டம் நடைபெற்றபோதிலும் எந்த பதிலோ, வாக்குறுதியோ அரசுத் தரப்பில் இருந்து அளிக்கப்படவில்லை.

மேலும், இதுபோன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிரதமா் ஒருமுறை கூட வந்ததே இல்லை. அவையிலும் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. நாங்கள் குரல் எழுப்பினால் அவை நடவடிக்கைக்கு குந்தம் விளைவிப்பதாக பழி சுமத்தப்படுகிறது. இதைப் பாா்த்துக்கொண்டிருக்கிற மக்கள்தான் தீா்மானிக்க வேண்டும் என்றாா் திருச்சி சிவா.

டிட்வா புயலால் கனமழை - புகைப்படங்கள்

கேரள முதல்வருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்: ‘பாஜகவின் அரசியல் விளையாட்டு’ -ஆளும் கம்யூ. விமர்சனம்

ரெட் அலர்ட்... சனம் ஷெட்டி!

கண் காணா அழகு... நபா நடேஷ்!

ஹலோ டிசம்பர்... அஞ்சு குரியன்!

SCROLL FOR NEXT