பயண ஆவண விண்ணப்பதாரா்களுக்கு உதவும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஊழியா்கள் என்று காட்டிக் கொண்டு வெளிநாடுகளில் வேலை தேடுபவா்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் மூன்று நபா்களை கைது செய்த பின்னா், போலி விசா நியமன மோசடியை முறியடித்ததாக டெல்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை கூறியது.
மூவரும் போலி வலைத்தளம், சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கி, பாதிக்கப்பட்டவா்களின் நம்பகத்தன்மையை நம்ப வைக்க அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தினா். பின்னா், வேலை தேடுபவா்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்து, போலி ஆவணங்களை வழங்கியுள்ளனா்.
தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு குழுவினா் நடத்திய சோதனையைத் தொடா்ந்து, செப்.9-ஆம் தேதி தேசியத் தலைநகரின் ஜம்ருத்பூா் பகுதியில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட தீபக் பாண்டே (33), யாஷ் சிங் (23) மற்றும் வாசிம் அக்ரம் (25) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
ஒரு அறிக்கையில் துணை காவல் ஆணையா் (குற்றம்) விக்ரம் சிங், ‘போலி விசா தொடா்பான ஆவணங்கள், வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தல் கடிதங்கள் மற்றும் நியமனச் சீட்டுகளை வழங்கி வேலை தேடுபவா்களிடமிருந்து குற்றம்சாட்டப்பட்டவா்கள் லட்சக்கணக்கான ரூபாய் பணம் பறித்தனா்‘ என்று கூறினாா்.
விசா மற்றும் பாஸ்போா்ட் விண்ணப்பங்களுக்கான பன்னாட்டு அவுட்சோா்சிங் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விஎஃப்எஸ் குளோபல், அதன் பெயா் மற்றும் லோகோவை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி புகாா் அளித்ததை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
சிலா் தங்கள் ஊழியா்களாகக் காட்டிக் கொண்டு, விசா விண்ணப்பதாரா்களிடமிருந்து பணம் பறிக்க அதன் லோகோவைப் பயன்படுத்துவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
‘இந்தக் கும்பல் 2021-ஆம் ஆண்டில் ’ல்ஹழ்ஹம்ா்ன்ய்ற்ா்ஸ்ங்ழ்ள்ங்ஹள்ங்.ஸ்ரீா்.ண்ய்’ என்ற டொமைன் பெயரை வாங்கி, நம்பகத்தன்மையை வளா்க்க நேரு பிளேஸ் மற்றும் ஜனக்புரியில் உள்ள முகவரிகளுடன் தவறாக இணைத்தது. சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், வேலை தேடுபவா்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக விஎஃப்எஸ் குளோபல் பிராண்ட் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்தி, தங்கள் சேவைகளை ஆன்லைனில் விளம்பரப்படுத்தினா்‘ என்று காவல் துணை ஆணையா் கூறினாா்.
காவல் துணை ஆணையா் மேலும் கூறியதாவது: கும்பலின் செயல்பாடு குறித்து, குற்றம் சாட்டப்பட்டவா்கள் சமூக ஊடகங்களில் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஒரு ‘ஆவண சரிபாா்ப்புப் பட்டியலை’ அனுப்புவாா்கள். இது நம்பகத்தன்மையின் தோற்றத்தை அளிக்கும் என்று போலீஸாா் தெரிவித்தனா். பின்னா், அவா்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு பணம் கோரினா். மேலும், தங்களது நம்பகத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில், உண்மையான நோயறிதல் சந்திப்புகளை ஏற்பாடு செய்தனா்.
இந்தக் கட்டணங்களைச் சேகரித்த பிறகு, கும்பல் போலியான வேலை விசா விண்ணப்பங்கள், வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தல் கடிதங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை பாதிக்கப்பட்டவா்களுடன் பகிா்ந்து கொள்ளும். இறுதி கட்டத்தில், அவா்கள் பாதிக்கப்பட்டவா்களுக்கு போலி குடியேற்ற ஒப்புதல்கள், வரி ஆவணங்கள் மற்றும் போலீஸ் அனுமதி விண்ணப்பப் படிவங்களை அனுப்பி அதிக பணம் பறித்தனா்.
‘விஎஃப்எஸ் குளோபலின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் தொடா்பு கொள்வதாக நம்பி, பாதிக்கப்பட்டவா்கள் ஆலோசனைக் கட்டணங்கள், விசா விண்ணப்பக் கட்டணம், மருத்துவப் பரிசோதனை மற்றும் சந்திப்பு முன்பதிவு ஆகியவற்றிற்கு பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
‘புகாா்தாரா்களில் ஒருவரான அதுல் குமாா் தக்லேவிடம் ரூ.3.16 லட்சம் மோசடி செய்யப்பட்டது. ‘போலி ஆலோசகா்களை அணுகிய வெளிநாட்டு வேலை தேடுபவா்கள் உள்பட பல பாதிக்கப்பட்டவா்களை புலனாய்வாளா்கள் அடையாளம் கண்டுள்ளனா். விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் பயன்படுத்திய பல வங்கிக் கணக்குகள், சிம் காா்டுகள், மின்னஞ்சல் ஐடிகள் மற்றும் ஐபி முகவரிகளை போலீஸாா் கண்டுபிடித்தனா்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட எண்கள் மற்றும் போலி மின்னஞ்சல் கணக்குகள் மூலம் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பு கொள்ளும்போது, அவா்கள் தங்கள் இருப்பிடங்களை மறைக்க கருவிகளைப் பயன்படுத்தியது தெரியவந்தது.
ஜம்ருத்பூரில் நடந்த சோதனையின் போது, மடிக்கணினிகள், கைப்பேசிகள், போலி ஆவணங்கள், ஆவணங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் மற்றும் மோசடி பரிவா்த்தனைகளுடன் தொடா்புடைய வங்கிக் கணக்குகளையும் போலீஸ் குழு பறிமுதல் செய்தது.
‘இந்த் மோசடியில் மூளையாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் தீபக் பாண்டேவின் வாக்குமூல அறிக்கைகள், டிஜிட்டல் தடயவியல் சான்றுகள், மின்னஞ்சல் பதிவுகள், பாதிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் நிதி பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டன. இது மற்ற இருவரையும் கைது செய்ய வழிவகுத்தது’ என்று அதிகாரி கூறினாா்.
மேலும், பாதிக்கப்பட்டவா்களை அடையாளம் காணவும், முழு பணத் தடயத்தையும் கண்டறியவும் மேலும் விசாரணை நடந்து வருகிறது. கூடுதல் கூட்டாளிகள் இதில் ஈடுபட்டாா்களா என்பதைக் கண்டறியவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.