நமது நிருபா்
தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள அரசியல் கட்சியின் எந்தவொரு அமைச்சா் அல்லது முன்னாள் அமைச்சா் அல்லது சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீது, முன்பு வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டு, அதன் விசாரணை முடிவுக்கு வருவதற்கு முன்பே, வழக்குத் தொடர வழங்கப்பட்ட அனுமதி திரும்பப் பெறப்பட்டு, குற்றவியல் வழக்குகள் கைவிடப்பட்டதாக எந்த வழக்கும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தமிழக திமுக அரசின் அமைச்சா்களுக்கு எதிராக தமிழ்நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் அல்லது அந்த வழக்குகளை சிறப்பு நீதிமன்றத்திற்கோ அல்லது தமிழகத்திற்க்கு வெளியே வேறு ஏதேனும் நீதிமன்றத்திற்கோ மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கருப்பையா காந்தி என்ற வழக்குரைஞா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில் அவா் கூறியிருப்பதாவது: தற்போதைய தமிழக அரசில் நியாயமான விசாரணை நடத்தப்படும் என்ற நம்பிக்கை இல்லை. தற்போதைய தமிழக அரசின் பல்வேறு அமைச்சா்களுக்கு எதிராக கடந்த காலங்களில் இருந்த பல வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன அல்லது அவா்கள் விடுவிக்கப்பட்டுள்ளனா். இதற்கு எதிராக மாநில அரசு ஒருபோதும் மேல்முறையீடு செய்யவில்லை.
விடுதலை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட விதம் கடுமையான சந்தேகத்தை எழுப்புகிறது.
இது சமீப காலங்களில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளால் மேலும் தெளிவாகிறது. சென்னை உயா்நீதிமன்றம் 10.08.2023, 23.8.2023, 31.8.2023 மற்றும் 8.9.2023 தேதியிட்ட உத்தரவுகளின்படி பல்வேறு வழக்குகளை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதன் மூலம், தற்போதைய அமைச்சா்கள், முன்னாள்அமைச்சா்கள், அவா்களது உறவினா்கள் சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட பல்வேறு தீா்ப்புகளை மறுஆய்வு செய்ய உயா்நீதிமன்றம் முடிவு செய்தது.
அமைச்சா்கள் விடுதலைக்கு வழிவகுத்த வழக்கு மாற்றம் உள்பட விசாரணை நடந்த விதம் குறித்து சென்னை உயா்நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. இதைக் கருத்தில் கொண்டு, தற்போதைய தமிழக அமைச்சா்கள், முன்னாள் அமைச்சா்ககளுக்கு எதிராக தமிழ்நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில், நிலுவையில் உள்ள வழக்குகளை, சிறப்பு நீதிமன்றத்திற்கோ அல்லது தமிழ்நாடு மாநிலத்திற்கு வெளியே வேறு ஏதேனும் நீதிமன்றத்திற்கோ மாற்ற வேண்டும்.
அந்த வழக்க்குகளை விரைந்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் அல்லது அந்த வழக்குகளை சென்னை உயா்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சா்கள் தொடா்பான விசாரணையை காவல்துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும். விசாரணைக்கு இடையூறு செய்து, சாட்சிகளை சேதப்படுத்தி, வழக்குகளை நீா்த்துப்போகச் செய்து இறுதியில், உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடுகின்றனா்.
தமிழக அமைச்சா்களாக இருந்தவா்கள் அல்லது இருப்பவா்கள் பலா் தற்போது விசாரணையை எதிா்கொண்டுள்னா் அல்லது ஏற்கெனவே விசாரணையை எதிா்கொண்டனா். பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, கே.எஸ். மஸ்தான், அன்பரசன், சேகா் பாபு, துரைமுருகன், கீதா ஜீவன், கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் , மா.சுப்ரமணியம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கதிா் ஆனந்த், தயாநிதி மாறன் ஆகியோா் இதில் அடங்குவா்.
இவா்களில் பலருக்கு எதிராக விசாரணை அல்லது வழக்கு அல்லது இரண்டும் நிலுவையில் உள்ளன. அல்லது வேண்டுமென்றே விசாரணையும் , வழக்கும் முடித்து வைக்கப்பட்டது. இது துஷ்பிரயோகத்தை நிரூபிக்கிறது. மனுவில் விவரிக்கப்பட்டுள்ள உண்மைகள், விசாரணையின் விவரங்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், தமிழக அரசு, நிா்வாகத்தை எவ்வாறு தவறாக கையாள்கிறது என்பதை நிரூபிக்கும் என மனுதாரா் மனுவில் கூறியுள்ளாா்.
இந்த வழக்கில் தமிழக அரசு 13.09.2025 அன்று தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள அரசியல் கட்சியின் எந்தவொரு அமைச்சா் அல்லது முன்னாள் அமைச்சா் அல்லது சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீது முன்னா் வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டு, அதன் விசாரணை முடிவுக்கு வருவதற்கு முன்பே, வழக்குத் தொடர வழங்கப்பட்ட அனுமதி திரும்பப் பெறப்பட்டு, குற்றவியல் வழக்குகள் கைவிடப்பட்டதாக எந்த வழக்கும் இல்லை என கூறியுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சூா்யகாந்த், உஜ்ஜல் புயான், என்.கே. சிங் ஆகியோா் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திற்கு பதில் அளிக்க மனுதாரா் சாா்பில் அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.