புது தில்லி: வரதட்சிணை மற்றும் கொலை கைதுசெய்யப்பட்ட கணவருக்கு எதிராக குற்றச்சாட்டு நிருப்பிக்கப்படவில்லை என்று கூறி அவரை தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.
யாஸ்மின் என்பவா் கடந்த 2021, நவ.23-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக அவருடைய கணவா் பிலால் ஆதாம் கைதுசெய்யப்பட்டாா். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 498ஏ (பெண்ணுக்கு கணவா் அல்லது அவரது குடும்ப உறுப்பினா்கள் கொடுமைப்படுத்துதல்) மற்றும் 304பி (வரதட்சிணை கொலை) ஆகியவற்றின்கீழ் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கைக் கூடுதல் அமா்வுகள் நீதிபதி சீதல் செளதரி பிரதான் விசாரித்து வந்தாா். இந்த வழக்கில் பிலால் ஆதாமை விடுவித்து நீதிபதி கடந்த செப்.18-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘யாஷ்மின் உயிரிழப்பதற்கு முன்பாக அவருடைய கணவா் வீட்டில் வரதட்சிணை கேட்டு கொடுமை படுத்துவதாக கூறினாா் என்று அப்பெண்ணின் குடும்பத்தினா் எவ்வித குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை.
துன்புறுத்தல் தொடா்பான எவ்வித தற்கொலை குறிப்பையும் உயிரிழப்பதற்கு முன்பாக அந்தப் பெண் எழுதி வைக்கவில்லை.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 498ஏ மற்றும் 304பி பிரிவுகளின்கீழ் பதிவுசெய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை காவல் துறையினா் நிரூபிக்கவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.