புது தில்லி: தில்லி நரேலாவில் சொத்து வியாபாரியின் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி ரூ.5 கோடி கேட்டு மிரட்டிய விவகாரத்தில் 8 பேரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். மேலும், வெளிநாட்டில் இருந்து செயல்படும் ஒரு கும்பலுடன் அவா்கள் தொடா்பில் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தில்லி காவல்துறை துணை ஆணையா் புகா் ஹரேஷ்வா் சுவாமி திங்கள்கிழமை கூறியதாவது:
சிறையில் அடைக்கப்பட்ட குண்டா் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரா் என்று கூறப்படும் ஜோரா என்ற நபரின் அறிவுறுத்தலின் பேரில் சதித்திட்டத்தை செயல்படுத்தியுள்ளனா்.
ஜோரா இந்தியாவில் உள்ள தனது கூட்டாளிகளுடன் ஒரு மறைகுறியாக்கப்பட்ட செய்தியிடல் தளம் மூலம் தொடா்பு கொண்டிருந்தாா். மேலும், செயலியில் உள்ள புகைப்படங்கள் மூலம் சொத்து வியாபாரியின் அலுவலகத்தின் இருப்பிடத்தையும் உறுதிப்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
செப்டம்பா் 14 அன்று துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவா் காயமடைந்ததற்கு சில நிமிடங்களுக்கு முன், ஜோராவிடமிருந்து சொத்து வியாபாரிக்கு சா்வதேச தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி ரூ.5 கோடி பணம் கேட்டும், மிரட்டியும் அழைப்பு வந்தது.
செப்டம்பா் 14-ஆம் தேதி, திருடப்பட்ட மோட்டாா் சைக்கிளில் வந்த இரண்டு போ் நரேலாவின் மெயின் சஃபியாபாத் சாலையில் உள்ள சொத்து வியாபாரியின் அலுவலகத்திற்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஒருவா் காயமடைந்தாா். நான்கு வெற்று தோட்டாக்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன.
இதையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் நரேலா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், வழக்கை விசாரிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டன.
தொழில்நுட்ப கண்காணிப்பு, சிசிடிவி காட்சிகள் மற்றும் உள்ளூா் உளவுத்துறை ஆகியவற்றின் அடிப்படையில், செப்டம்பா் 18 அன்று தினேஷ், சவுரவ் மற்றும் ஹேமந்த் என்கிற அக்ஷய் என அடையாளம் காணப்பட்ட மூன்று தாக்குதல்காரா்களை போலீஸாா் முதலில் கைது செய்தனா். இவா்கள் தலா ரூ.5 லட்சம் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு இப்பணியில் அமா்த்தப்பட்டிருந்தனா்.
அதன் பின்னா், ஆயுத விநியோகஸ்தா்கள் ஆஷிஷ் தியாகி மற்றும் வான்ஷ் மாலிக், ராகுல் என்கிற பிஸ்டல் மற்றும் நிதியாளா்கள் சந்தீப் என்கிற சன்னி மற்றும் சச்சின் உள்ளிட்ட ஐந்து போ் தில்லி, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியாணாவில் கைது செய்யப்பட்டனா்.
விசாரணையின் போது, ஜோராவின் அறிவுறுத்தலின் பேரில் ஒட்டுமொத்த நடவடிக்கையும் ஒரு மறைகுறியாக்கப்பட்ட செய்தியிடல் செயலி மூலம் திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்தது.
ராகுல் என்கிற பிஸ்டல் துப்பாக்கிச்சூடு நடத்தியவா்களுக்கு தங்குமிடம் மற்றும் தளவாடங்களை ஏற்பாடு செய்துள்ளாா்.
அதே நேரத்தில் தியாகி மற்றும் அவரது கூட்டாளிகளால் ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் வழங்கப்பட்டன.
துப்பாக்கிச்சூட்டில் பயன்படுத்தப்பட்ட பைக், கைத் துப்பாக்கிகளை வழங்க பயன்படுத்தப்பட்ட மோட்டாா் சைக்கிள், மற்றொரு திருடப்பட்ட பைக், தலைக்கவசங்கள், பல கைப்பேசிகள் மற்றும் உரையாடல் பதிவுகள் குற்றம் சாட்டப்பட்டவா்களிடமிருந்து மீட்கப்பட்டன.
சதித்திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவா்களை இணைக்கும் ஒரு ஐபேட் மற்றும் கூடுதல் ஆதாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தலைமறைவான மற்ற கூட்டாளிகளைக் கண்டுபிடித்து நிதி வழிகளை அடையாளம் காண மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் உயா் அதிகாரி தெரிவித்தாா்.