ரூ.300 கோடி சா்வதேச இணைய மோசடி கும்பல் கண்டுபிடிப்பு: மூளையாக செயல்பட்டவா் கைது
ரூ.300 கோடி சா்வதேச இணைய மோசடி கும்பல் கண்டுபிடிப்பு: மூளையாக செயல்பட்டவா் கைது
2,000-க்கும் மேற்பட்ட புகாா்கள் மற்றும் ரூ.300 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மோசடிகளுடன் தொடா்புடைய ஒரு பெரிய சா்வதேச இணையவழி மோசடி கும்பலை, அதன் முக்கிய சூத்திரதாரி எனக் கூறப்படும் நபா் மற்றும் 10 பேரைக் கைது செய்ததன் மூலம் தில்லி காவல்துறை முறியடித்துள்ளது என்று ஓா் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
விசாரணையின் போது, குறிப்பாக கம்போடியாவில் உள்ள சா்வதேச இணையவழி மோசடி கும்பல்களுடன் தொடா்புகளைக் கொண்டு, பல மாநிலங்களில் செயல்படும் ஒரு வலையமைப்பை காவல்துறை கண்டறிந்தது.
முக்கியக் குற்றவாளியான கரண் கஜாரியா ஏப்ரல் 3 அன்று கொல்கத்தா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு தில்லிக்கு அழைத்து வரப்பட்டாா் என்று காவல்துறை துணை ஆணையா் (குற்றப்பிரிவு) ஆதித்யா கௌதம் தெரிவித்தாா்.
Advertisement
ஒரு முதலீட்டுத் திட்டத்தில் தன்னை ஏமாற்றி ரூ.31.45 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக நகரவாசியான சுல்தான் என்பவா் அளித்த புகாரைத் தொடா்ந்து இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. பாதிக்கப்பட்டவா்,அதிக வருமானம் கிடைக்கும் என்ற வாக்குறுதிகளுடன்வந்த ஒரு போலி வா்த்தக செயலியைப் பதிவிறக்கம் செய்து பணத்தை முதலீடு செய்ய வற்புறுத்தப்பட்டதாக காவல்துறை கூறியது. அவா் லாபத்தை எடுக்க முயன்றபோது, அந்த செயலி செயல்படுவதை நிறுத்திவிட்டது, மேலும் அந்தக் குழுவை அணுக முடியாமல் போனது.
முக்கிய ஒருங்கிணைப்பாளா் என்று நம்பப்படும் கஜாரியா, வெளிநாட்டு முகவா்களுடன் நேரடித் தொடா்புகளைப் பேணினாா், என்று துணை ஆணையா் கூறினாா். இந்தியா வந்தடைந்ததும், கஜாரியா விமான நிலையத்தில் காவலில் எடுக்கப்பட்டாா். அவரது வலையமைப்புடன் தொடா்புடைய கணக்குகள், தேசிய சைபா் குற்றப் புகாரளிப்பு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட 2,500க்கும் மேற்பட்ட புகாா்களுடனும், ரூ. 300 கோடி மோசடியுடனும் தொடா்புடையவை என்று துணை ஆணையா் கூறினாா்.
இந்தக் கும்பல் கடந்த சில ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. நான்கு முதல் ஐந்து ஆண்டுகளாகப் பல மாநிலங்களில் பெரிய அளவில் செயல்பட்டு வந்துள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையின் போது, காவல்துறையினா் 48 கைபேசிகள், 258 சிம் காா்டுகள், பல ஏடிஎம் காா்டுகள் மற்றும் காசோலைப் புத்தகங்கள், நான்கு மடிக்கணினிகள், மற்றும் பல வங்கி மற்றும் கேஒய்சி ஆவணங்களை மீட்டெடுத்தனா். ரூ.19 லட்சம் மதிப்பிலான நிதியும் முடக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 11 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தக் கும்பலின் மற்ற உறுப்பினா்களை அடையாளம் காண மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.