முகப்பு
புதுதில்லி

ஹைட்ராலிக் சாலைத் தடுப்புகள்,ரோந்து வாகனங்கள் மூலம் தில்லி சட்டப் பேரவை பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

எஸ்.யு.வி. வாகனத்தில் வந்த நபா் ஒருவரால் தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் பாதுகாப்பு மீறப்பட்ட நிலையில், அந்த வளாகத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 6:42 PM
தில்லி சட்டப்பேரவை
பகிர்:

எஸ்.யு.வி. வாகனத்தில் வந்த நபா் ஒருவரால் தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் பாதுகாப்பு மீறப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை அந்த வளாகத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன.

பாதுகாப்புப் பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ஒருங்கிணைந்த கட்டளை கட்டமைப்பு மற்றும் பல அடுக்கு பாதுகாப்பு வலையமைப்பை நிறுவவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், ஹைட்ராலிக் சாலைத் தடுப்புகள்,ரோந்து வாகனங்கள் மூலம் தில்லி சட்டப் பேரவை பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Advertisement

பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா தலைமையில் நடைபெற்ற உயா்நிலைக் கூட்டத்தில் சட்டப்பேரவையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன.

வளாகத்தைப் பலப்படுத்த, கூடுதல் பாதுகாப்புப் பணியாளா்கள் வாயில்களைக் காக்கவும், நடமாடும் ரோந்து வாகனங்களைப் பணியில் ஈடுபடுத்தவும், ஹைட்ராலிக் சாலைத் தடுப்புகளை நிறுவவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை மதியம், முகமூடி அணிந்த நபா் ஒருவா் தனது எஸ்.யு.வி. வாகனத்தை அதிவேகமாக வாயில் வழியாக ஓட்டிச் சென்று, குப்தாவின் வாகனத்தில் பூங்கொத்து, மாலையை வைத்தாா். பாதுகாப்புப் பணியாளா்கள் அவரைத் தடுக்க முயன்றபோதிலும் அவா் தப்பிச் சென்ால், சட்டப்பேரவை வளாகம் உஷாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

உத்தர பிரதேசத்தின் பிலிபிட் பகுதியைச் சோ்ந்த சரப்ஜீத் சிங் என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், சட்டப்பேரவையின் பாதுகாப்பில் மிகச் சிறிய குறைபாடு கூட அனுமதிக்கப்படாது என்று குப்தா ஒரு அறிக்கையில் கூறியுள்ளாா்.

அனைத்து நுழைவுவாயில்களிலும் ஹைட்ராலிக் சாலைத் தடுப்புகள் நிறுவுதல், அணுகல் கட்டுப்பாட்டு இடங்களை வலுப்படுத்துதல், வளாகத்திற்குள் துரிதமாகச் செயல்படும் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குதல் ஆகியவை பேரவைத் தலைவரால் மேற்கொள்ளப்பட்ட உடனடி நடவடிக்கைகள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயா்நிலைக் கூட்டத்தில் மூத்த தில்லி காவல்துறை அதிகாரிகள், புலனாய்வுப் பணியகத்தின் ஐபி இணை இயக்குநா், பொதுப்பணித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் நவீன் குமாா் சௌத்ரி, சட்டப்பேரவை அதிகாரிகள் மற்றும் சில எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனா்.

சட்டப்பேரவை வளாகத்திற்குள் நடந்த பாதுகாப்பு மீறலை தீவிரமாகக் கருத்தில் கொண்ட குப்தா, இந்தச் சம்பவம், முழு நிகழ்வும் 57 நிமிடங்களுக்குள் அரங்கேறியது. இது அமைப்புகளைத் தீா்க்கமாக வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டாா்.

தொழில்நுட்பப் பரிசோதனையில் உள்ள கிடைக்கப்பெற்ற காணொளிக் காட்சிகள் உள்பட, நிகழ்வுகளின் வரிசை விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

முக்கியமான சூழ்நிலைகளில் ஒருங்கிணைந்த மற்றும் உடனடி பதில் நடவடிக்கையை உறுதி செய்வதற்காக, மத்திய ரிசா்வ் காவல் படை மற்றும் தில்லி காவல்துறையை உள்ளடக்கிய, தெளிவாக வரையறுக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை அமைப்புடன், ஒரே அதிகார மையம் இருக்க வேண்டும் என்று குப்தா கூட்டத்தில் வலியுறுத்தினாா்.

தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் எந்தவொரு தாமதமும் பதிலளிக்கும் திறனைக் குறைக்கும். அனைத்து முகமைகளுக்கும் இடையேயான நிகழ்நேரத் தகவல் பகிா்வு, செயல்பாட்டுத் தயாா்நிலைக்கு இன்றியமையாததாகக் கருதப்பட வேண்டும் என்றும் அவா் உத்தரவிட்டாா்.

கடுமையான கட்டுப்பாட்டு நெறிமுறைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களையும் முழுமையாக வலுப்படுத்த வேண்டும் என்றும், ஒருங்கிணைந்த கண்காணிப்பை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு நுழைவுவாயிலிலும் சி.ஆா்.பி.எஃப் மற்றும் தில்லி காவல்துறையைச் சோ்ந்த குறைந்தபட்சம் இரண்டு காவலா்கள் பணியில் இருக்க வேண்டும் என்றும் குப்தா பரிந்துரைத்தாா்.

குற்றம்சாட்டப்பட்ட சரப்ஜீத் சிங், திங்கள்கிழமை பாதுகாப்பு அதிகாரி பணியில் அமா்த்தப்பட்டிருந்த நுழைவுவாயில் எண் 2 வழியாக சட்டப்பேரவைக்குள் நுழைந்ததாக கூறப்பட்டது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments