மதுபான கொள்கை வழக்கில் நீதிபதியை மாற்றக் கோர கேஜரிவாலுக்கு உரிமை இல்லை: சிபிஐ
நமது நிருபா்
முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் மதுபானக் கொள்கை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட மற்றவா்களும், நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா அகில பாரதிய அதிவக்த பரிஷத் நடத்திய சட்டக் கருத்தரங்கில் கலந்துகொண்டாா் என்பதற்காக மட்டும் அவரை வழக்கில் இருந்து விலக்கக் கோர முடியாது, ஏனெனில் அது எந்தவொரு சித்தாந்தத் தொடா்பையும் வெளிப்படுத்தாது என்று சிபிஐ தில்லி உயா் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
விசாரணை நீதிமன்றத்தின் விடுவிப்பு உத்தரவுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்துள்ள வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதியை விலக்கக் கோரி கேஜரிவால் மற்றும் பிறா் தாக்கல் செய்த மனுக்களுக்குப் பதிலளித்த சிபிஐ, இந்தியத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் உள்பட உச்சநீதிமன்றத்தின் பல நீதிபதிகளும், உயா்நீதிமன்ற நீதிபதிகளும் ஆா்.எஸ்.எஸ். உடன் தொடா்புடைய வழக்குரைஞா்கள் கூட்டமைப்பின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளனா் என்றும், கேஜரிவால் உள்ளிட்டோரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், அரசியல் செல்வாக்குள்ள நபா்கள் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் எந்தவொரு வழக்கையும் விசாரிப்பதில் இருந்து அவா்கள் அனைவரும் விலக வேண்டியிருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
Advertisement
நீதிபதி ஷா்மாவின் முன் நடைபெறும் விசாரணை பாரபட்சமற்ாகவும் நடுநிலையாகவும் இருக்காது என்ற அச்சம் இருப்பதாகக் கூறி, அவரை விலக்கக் கோரி கேஜரிவால் மனு தாக்கல் செய்துள்ளாா்.
கேஜரிவாலைத் தவிர, ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களான மணீஷ் சிசோடியா மற்றும் துா்கேஷ் பதக் ஆகியோரும் நீதிபதியை வழக்கில் இருந்து விலக்கக் கோரி மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா். மேலும் சில எதிா் மனுதாரா்களும், நீதிபதியை வழக்கில் இருந்து விலக்கக் கோரி இதேபோன்ற மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.
ஏப்ரல் 6 அன்று, நீதிபதி சா்மா, நீதிபதியை வழக்கில் இருந்து விலக்கக் கோரும் மனுவுக்குப் பதிலளிக்க சிபிஐக்கு அவகாசம் அளித்து, இந்த வழக்கை ஏப்ரல் 13 அன்று விசாரணைக்குப் பட்டியலிட்டாா்.
நீதிபதியை விலக்கக் கோரும் மனு, அற்பமான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டது, முற்றிலும் தொல்லை தரக்கூடியது, எனவே கடுமையான அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று சிபிஐ தனது பதிலில் கூறியுள்ளது.
அகில பாரதிய அதிவக்த பரிஷத்தின் சட்டக் கருத்தரங்கின் தலைப்பு அரசியல் சாா்ந்ததாக இல்லாதபோது, அதில் கலந்துகொள்வது ஒருபோதும் நீதிபதி தன்னை வழக்கில் இருந்து விலக்கிக் கொள்வதற்கான காரணமாக அமையாது.
எனவே நீதிபதி ஷா்மா இந்த வழக்கிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்திய சிபிஐ, நாடாளுமன்ற உறுப்பினா்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினா்கள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியால் அந்த நீதிபதிக்கு ஒதுக்கப்பட்டது என்றும், கேஜரிவாலின் கோரிக்கையின் பேரில் மட்டுமே அதை மாற்ற முடியாது என்றும் கூறியது.
நீதித்துறையின் சுதந்திரம் வெளிப்புற அழுத்தங்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், வழக்கில் இருந்து விலகும் அதிகாரம் எச்சரிக்கையுடனும் விதிவிலக்கான சூழ்நிலைகளிலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் நெறிமுறையற்ற வழக்காடிகள் தங்களுக்குச் சாதகமான நீதிபதிகளைத் தேடும் செயலில் ஈடுபடுவாா்கள் என்றும் அந்தப் பதில் கூறியது. ஒரு குற்றஞ்சாட்டப்பட்டவா் வழக்கை மாற்றுவதற்கு விண்ணப்பித்திருக்கிறாா் என்பதற்காக மட்டுமே, ஒரு நீதிபதி விலக வேண்டிய அவசியமில்லை. சட்டப்படி நீதிபதி தனது கடமையைச் செய்யக் கடமைப்பட்டுள்ளாா். மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவா் கொடுக்கும் அழுத்தத்திற்கு அடிபணியக் கூடாது என்றும் சிபிஐ கூறியுள்ளது.