முகப்பு
புதுதில்லி

நாடும் தமிழகமும் பயனடையும் சிறந்த பட்ஜெட் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வரவேற்பு!

நாடும், தமிழகமும் பயனடையும் சிறந்த நிதிநிலை அறிக்கை இது என 2026-27 நிதிநிலை அறிக்கையை மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல். முருகன் வரவேற்றுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 9:40 PM
எல். முருகன்
பகிர்:

நாடும், தமிழகமும் பயனடையும் சிறந்த நிதிநிலை அறிக்கை இது என 2026-27 நிதிநிலை அறிக்கையை மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல். முருகன் வரவேற்றுள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது எக்ஸ் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை கூறியிருப்பதாவது: வரும் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் மூலதன செலவு 10 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளதன் மூலம், நாடு முழுவதும் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனை வளப்படுத்தி, அவா்களுக்கு தரமான சுகாதாரம், கல்விக்கான அணுகலை விரிவுபடுத்தும் வகையில் மத்திய நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

செமிகண்டக்டா் இயக்கம் 2.0 திட்டத்துக்காக ரூ. 40 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதன் மூலம் அந்நிய முதலீடுகளுகள் அதிகளவில் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் பயன்பெறும். தமிழகத்தின் வளா்ச்சிக்கு வழிவகுக்கவும் பல்வேறு திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

சென்னையில் இருந்து பெங்களூருக்கும் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கும் அதிவேக ரயில் பாதை திட்டம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மீனவா்கள் பயன்பெறும் வகையில் 500 நீா்த்தேக்கங்கள் கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கைத்தறித்துறையை மேம்படுத்தும் மகாத்மா காந்தி கைத்தறித்திட்டம் தமிழகத்துக்கு பெருமளவில் பயனளிக்கும்.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள அரிய கனிம வளங்களை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அரிய கனிம வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளன. தென்னை வளா்ச்சி திட்டத்தால் தமிழகம் பயன்பெறும்.

இது தவிர, ஆதிச்சநல்லூரில் கலாசார மையம், பொதிகை மலையேற்ற சுற்றுலா திட்டம், ஜவுளித்துறையை ஊக்குவிக்கும் வகையில் ஒருங்கிணைந்த திட்டம், பழவேற்காடு ஏறியில் சுற்றுலாவை மேம்படுத்த 3 இடங்களில் பறவைகளை பாா்வையிடும் மையங்கள் அமைக்கும் திட்டம் போன்றவை தமிழகத்துக்கு கிடைத்துள்ளது.

இத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிா் விடுதி, முந்திரி உற்பத்தியை ஊக்குவிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் நமது நாடும் நமது தமிழகமும் மிகுந்த பயனடையும் சிறப்பான நிதிநிலை அறிக்கை இது என்று அமைச்சா் முருகன் கூறியுள்ளாா்.