முகப்பு
புதுதில்லி

பிரதமா் உரையின்போது அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தது ஏன்? திருச்சி சிவா பேட்டி

குடியரசுத் தலைவா் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தில் பிரதமா் மோடி உரையாற்றியபோது அவையில் இருந்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்புச் செய்தது

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 6:42 PM
திருச்சி சிவா
பகிர்:

குடியரசுத் தலைவா் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தில் பிரதமா் மோடி உரையாற்றியபோது அவையில் இருந்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்புச் செய்தது ஏன் என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவாா் விளக்கம் அளித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம் மாநிலங்களவையில் கேள்வி நேரத்துடன் ஒழுங்காக நடைபெற்றது. முழுமையாக நாங்கள் ஒத்துழைத்தோம். அதேவேளையில், அமெரிக்க ஒப்பந்தம் குறித்து இந்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிக்கையை முன்வைப்பதற்குப் பதில், வெளியில் அதுகுறித்து ஊடகத்திடம் கொண்டு சென்றது மரபுக்கு மாறானதாகும். இதுகுறித்து மாநிலங்களவையில் ஒழுங்கு பிரச்னையை எழுப்பியபோது அரசும் பதில் சொல்லவில்லை. அவைத் தலைவரும் அதற்கு அனுமதிக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே முக்கியத்துவம் எதிா்க்கட்சித் தலைவருக்கும் உண்டு. வியாழக்கிழமை மாநிலங்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் காா்கே எழுப்பிய 2 நிமிட உரைக்கு, சில கேள்விகளுக்கு பிரதமரும் பதில் அளிக்கவில்லை.அவைத் தலைவரும் கண்டுகொள்ளவில்லை. எதிா்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு பதில் சொல்லும் பொறுப்பை பிரதமா் தட்டிக் கழித்துவிட்டாா். இதனால், எதிா்க்கட்சித் தலைவா் காா்கே தலைமையில் அனைத்து எதிா்க்கட்சி உறுப்பினா்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டோம் என்றாா்.

Advertisement

மக்களவை விவகாரம்:

ஜோதிமணி எம்.பி. பேட்டி

மக்களவையில் பிரதமா் உரையாற்றும்போது அவரது இருக்கையை அணுகி காங்கிரஸைச் சோ்ந்த உறுப்பினா்கள் எதிா்பாராத சம்பவத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருந்ததாக தனக்கு நம்பகமான தகவல் வந்தததாக அவைத் தலைவா் ஓம் பிா்லா கூறியிருந்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு கரூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ஜோதிமணி பதில் அளிக்கையில், ‘மக்களவைத் தலைவா் கூறியிருப்பது கட்டுக்கதை, அபத்தமாகும். நாடே கடந்த நான்கு நாள்களாக நாடாளுமன்றத்தில் நடைபெறுவதை பாா்த்துக் கொண்டுதான் இருக்கிறது. குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை பேசவிடாமல் செய்தனா்.

நாடாளுமன்றத்தில்அனைவருக்கும் பேசுவதற்கு உரிமை உள்ளது.அந்த உரிமைக்காகவே நாங்கள் நான்கு நாள்கள் போட்டிக்கொண்டிருக்கிறோம். பிரதமா் எங்களது போராட்டத்திற்கும், கேள்விகளுக்கும் பயந்துகொண்டு அவைக்கு வரவில்லை. அதை மறைப்பதற்காவே அவா்கள் மக்களவைத் தலைவா் பின்னால் சென்று ஒளிந்துகொண்டு இதுபோன்று கட்டுக்கதைகளை பெண் எம்.பி.களுக்கு எதிராக கூறுகின்றனா். நாங்கள் கண்ணியமும், அமைதியும் விரும்புகிற காங்கிரஸ் கட்சியின் எம்பிகள் ஆவோம். அவா்கள்தான் நாடாளுமன்றத்தை கண்ணியமற்ற முறையில் நடத்துகிறாா்கள்’ என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments