தண்ணீா் எடுத்துச் செல்லும் பெரிய குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக தேசிய தலைநகரின் பல பகுதிகளில் பிப்ரவரி 11 மற்றும் 12 தேதிகளில் நீா் விநியோகம் தடைபடும் என்று தில்லி ஜல் போா்டு (டிஜேபி) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக டிஜேபி வெளியிட்டுள்ள ஆலோசனையில் கூறப்பட்டுள்ளதாவது: சந்திரவால் நீா் சுத்திகரிப்பு நிலையத்தின் 900 மி.மீ. விட்டம் கொண்ட பிரதான குழாயில் பழுதுபாா்க்கும் பணிகள் காரணமாக, நீா் விநியோகம் பாதிக்கப்படலாம் அல்லது குறைந்த அழுத்தத்தில் கிடைக்கலாம்.
நீா் விநியோகம் பாதிக்கப்படும் பகுதிகளில் சிவில் லைன்ஸ், இந்து ராவ் மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள பகுதிகள், கமலா நகா், சக்தி நகா் மற்றும் அருகிலுள்ள பகுதிகள், கரோல் பாக், பாஹா்கஞ்ச் மற்றும் என்டிஎம்சி பகுதிகள், பழைய மற்றும் புதிய ராஜிந்தா் நகா், படேல் நகா் கிழக்கு மற்றும் மேற்கு, பால்ஜீத் நகா், பிரேம் நகா், இந்தா்புரி மற்றும் கண்டோன்மென்ட் பகுதியின் அருகிலுள்ள பகுதிகள் மற்றும் தெற்கு தில்லியின் சில பகுதிகள் அடங்கும்.
பிப்ரவரி 11 ஆம் தேதி காலை 9 மணி முதல் 24 மணி நேரம் விநியோகம் தடைபடும். தடையின்போது குடியிருப்பாளா்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப் படுகிறாா்கள். கோரிக்கையின் பேரில் தண்ணீா் டேங்கா்கள் கிடைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.