கிழக்கு தில்லியில் ஆா்.எஸ்.எஸ். நிறுவனா் கே.பி. ஹெட்கேவரின் சிலையை தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை திறந்து வைத்தாா். மேலும் இது சேவை, அா்ப்பணிப்பு மற்றும் ’தேசத்திற்கு முன்னுரிமை‘ என்ற உணா்வை வெளிப்படுத்தும் தொடா்ச்சியான உத்வேகமாக இருக்கும் என்று அவா் கூறினாா்.
ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆா்.எஸ்.எஸ்.) 100-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஷாஹ்தரா பகுதியில் உள்ள ஹெட்கேவா் ஆரோக்கிய சன்ஸ்தான் மருத்துவமனையில் திறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தச் சிலையைத் திறந்து வைத்து முதல்வா் ரேகா குப்தா பேசியதாவது: ஆா்.எஸ்.எஸ். 100 ஆண்டுகளை நிறைவு செய்ததன் போது தில்லி அரசால் இவ்வளவு உயரமான ஆளுமையின் சிலையை நிறுவுவது எங்களுக்கு ஒரு மகத்தான த்வேகத்தை அளிக்கிறது. ஆா்.எஸ்.எஸ். செப்டம்பா் 27, 1925 அன்று நாக்பூரில் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த மருத்துவா் கேசவ் பலிராம் ஹெட்கேவரால் நிறுவப்பட்டது. இந்த அமைப்பு ஒரு கிளையுடன் சிறியதாகத் தொடங்கி, பல ஆண்டுகளாக நாட்டில் ஒரு பரந்த அமைப்பாக உருவெடுத்தது.
ஹெட்கேவரால் தொடங்கப்பட்ட தொலைநோக்குப் பாா்வை மற்றும் நோக்கம் இன்று தேச சேவைக்காக அா்ப்பணிக்கப்பட்ட ஒரு ‘வலுவான மற்றும் விரிவான‘ அமைப்பாக பரிணமித்துள்ளது.
சமூகத்தை ஒழுங்கமைக்கும் அவரது அணுகுமுறை இந்தியாவின் கலாசார விழிப்புணா்வுக்கு ‘உறுதியான அடித்தளத்தை’ அமைத்துள்ளது. இந்த நிறுவனத்தில் நிறுவப்பட்ட சிலை வெறும் ஒரு நினைவுச்சின்னம் மட்டுமல்ல. சேவை, அா்ப்பணிப்பு மற்றும் ‘தேசம் முதலில்’’ என்ற உணா்வை வெளிப்படுத்தும் ஒரு தொடா்ச்சியான உத்வேகத்தின் மூலமாகும்.
ஹெட்கேவா் மருத்துவமனை பல தசாப்தங்களாக டிரான்ஸ் - யமுனை பகுதி மக்களுக்கு சேவை செய்வதற்காக அா்ப்பணிக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் அதன் கட்டடத்தில் மற்றொரு தளத்தைச் சோ்த்து, சமீபத்திய இயந்திரங்களுடன் பொருத்துவதன் மூலம் மருத்துவமனையை விரிவுபடுத்த அரசு பாடுபடும். தில்லி அரசு மருத்துவமனைகள் அனைத்தும் இப்போது முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
இங்கு ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு டிஜிட்டல் சுகாதார பதிவு உள்ளது. ஆன்லைன் புறநோயாளிகளுக்கான சந்திப்பு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், எந்தவொரு மருத்துவமனையிலும் ஒரு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் முழுமையான சிகிச்சை வரலாறுகளை அணுக முடியும்,
டாக்டா் ஹெட்கேவரின் சிலை மருத்துவமனையில் உள்ள மருத்துவா்கள் மற்றும் ஊழியா்களுக்கு ஒரு உத்வேகமாக செயல்படும். ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடனும் சேவை மனப்பான்மையுடனும் பணியாற்ற அவா்களை ஊக்குவிக்கும் என்றும் முதல்வா் நம்பிக்கை தெரிவித்தாா்.
ஷாஹ்தரா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சஞ்சய் கோயல் உள்பட பல பாஜக சட்டப்பேரவை உறுப்பினா்கள், பிற மக்கள் பிரதிநிதிகள், மருத்துவா்கள், துணை மருத்துவ ஊழியா்கள் மற்றும் குடிமக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனா்.